சனி, 30 ஏப்ரல், 2016

மே முதல் வாரம் அ.தி.மு.க., அதிரடி?

என்னாடீ இது... அவிய்ங்கவிய்ங்க, அதக் குடுக்குறேன்... இதக் குடுக்குறேன்னு பொளந்து கட்டுறாய்ங்க... இந்தம்மா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறாங்க... பிரசாரத்துல பேசினாப்ல ஆயிடிச்சா... அறிக்கையைக் காணோம்...' மதுரை மேலமாசி வீதியில் நேற்று, பூக்காரம்மா ஒருத்தங்க கேட்ட கேள்வி இது.
நியாயமான கேள்வியாகவே தெரிஞ்சிச்சு. ஏன் இவ்வளவு ரகசியம் காக்குறாங்க... என்ன விஷயம்...' என, நம் மண்டை சூடு பிடித்து சிந்திப்பதற்குள், 'எலக்சனுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்யிறப்பவே, அந்தம்மாவுக்கு கோவம் வந்திருச்சு... அதுல ஆரம்பிச்ச கொழப்பம் இன்னும் தீரல போலிருக்கு டீ... பேசாம இரு... தேர்தலுக்குள்ளாற வரும்... மிக்சி வேணாம்... டாஸ்மாக் சரக்கைத் தவிர மற்ற எதையும் இலவசமாகக் கொடுக்க ஆத்தா ரெடிதான்.......

பிரிஜ்ஜி குடுத்தா நல்லாருக்கும்...' என, அடுத்து அமர்ந்திருந்த வெற்றிலை விற்கும் பெண் பதில் கூறினார்.'இப்போ வருது; அப்போ வருது' என, இழுத்தடிக்கும் வேலை எதுவும் இல்லாமல், அப்படியொரு அறிக்கை வருதான்னு கூட, வெளியில மூச்சு விடாம, ரகசியம் காக்குறது என்னா? ஒண்ணும் புரியலே போங்க!' சொன்னதை எல்லாம் செய்ய முடியுமா'ன்னு கட்சிக்காரங்க யாரும் யோசிக்கிறதில்லே; வாக்காளர்களும், 'எல்லாத்தையும் செய்வாங்களா'ன்னு சிந்திக்கிறதும் இல்லே. எது குடுத்தாலும் வாங்கிக்கலாம்ங்கற எண்ணம். இந்த ரகசியம், கட்சிக்காரங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.
தி.மு.க., - பா.ம.க., - ம.ந.கூ.,ன்னு, பெரிய கட்சிக்காரங்கல்லாம், அறிக்கை வெளியிட்டதால, 'அவங்க சொல்லாததை நாம
சொல்லணும்... 'நச்'சுன்னு சொல்லணும்... ஓட்டு விழணும்'ங்கறதுல, அ.தி.மு.க., உறுதியா இருக்கும்கறது மட்டும் புரியுது.அதையும் தாண்டி காரணங்கள் இருக்கான்னு, கட்சிக்காரர் ஒருத்தர் மண்டையைச் சொறிஞ்சதுல, அவர் சொன்ன தகவல்கள்:
கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற,இலவச கலர், 'டிவி'யும், ஒரு ரூபாய்க்கு, 20 கிலோ அரிசியும், அ.தி.மு.க.,வை, ஆட்சிக் கட்டிலில் இருந்து துாக்கி எறிய எளிதாக இருந்தது. அந்த மாதிரி இம்முறை ஆகக் கூடாது
அடுத்து வந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியிடும் வரை காத்திருந்தோம். அதன்பின் நாங்கள் வெளியிட்ட அறிக்கையில், 'மிக்சி, கிரைண்டர், மின் விசிறி; இலவச ஆடு, மாடு; 20 கிலோ இலவச அரிசி; ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு, நான்கு கிராம் தங்கம்' என அறிவித்தோம்; அமோக வெற்றி பெற்றோம்
ஆனால், இலவச அறிவிப்புகள் வெளியிடுவதில், உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. அதன்படி, தேர்தல் கமிஷன், கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. அதனால், இப்போது நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையைப் பாருங்கள்; இலவசங்கள் இடம்பெறவில்லை. மற்ற கட்சிகளின் அறிக்கையிலும், பெரிதாக இலவசங்கள் இல்லை
தேர்தல் அறிக்கை தயார் செய்ய, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பொன்னையன் உட்பட, 14 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். முன்னாள், இந்நாள் ஐ.ஏ.எஸ்., -ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய, மற்றொரு குழுவும் அறிக்கை தயார் செய்து, இரண்டையும் இணைத்து, தலைமையிடம் கொடுத்துள்ளோம்
தேர்தல் அறிக்கையில், இலவசங்களை அறிவித்தால், அதை நிறைவேற்றுவதற்கான சாத்தியம் குறித்து, விளக்க வேண்டும். எனவே, நிதி ஆதாரத்தைத் திரட்டுவது குறித்த விளக்கங்கள் தயார் செய்யப்படுகின்றன; வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறதுமேலும் இப்போதே அறிவித்து விட்டால், நீதிமன்றம் மூலம் தடை போடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விடும்; அதில் சிக்கக் கூடாது
எனவே, மே முதல் வாரத்தில், தேர்தல் அறிக்கையை வெளியிட, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. தேர்தல் நெருக்கத்தில், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, இலவச அறிவிப்புகளை, விளம்பரம் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகள் இவை தான்! தேர்தல் நடவடிக்கைகளின் துாய்மையை கெடுக்கும் வகையிலோ, வாக்காளர்களை கவரும் வகையிலோ, வாக்குறுதிகள் அளிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்
வாக்குறுதிகள் நியாயமானவையாக இருப்பதுடன், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, தேவையான நிதி ஆதாரங்களை பெறுவதற்கான வழிமுறைகளும், விரிவாக விளக்கப்பட்டு, ஒளிவுமறைவற்ற தன்மை, நடுநிலைத் தன்மை மற்றும் வாக்குறுதிகளின் நம்பகத் தன்மை ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்நிறைவேற்றப்படக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளித்து, வாக்காளர்களின்நம்பிக்கையை கோர வேண்டும்.
- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக