வேலைக்கு அமர்த்து, துரத்து (Hire and Fire) தொழிலாளி வர்க்கத்தின் மீதான பகைமையையும் வெறுப்பையும் அப்பட்டமாகப் பறைசாற்றும் வகையில், பிரிக்கால் நிறுவனத்தின் 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை அமர்வு நீதிமன்றம் கடந்த டிசம்பர் 3-ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருக்கிறது.
இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றத்தால் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டுள்ள பிரிக்கால் தொழிலாளிகள்: (இடமிருந்து) குணபாலன், மணிவண்ணன், ராஜேந்திரன், ராமமூர்த்தி, சம்பத்குமார், சரவணகுமார், சிவகுமார், வேல்முருகன்.
கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதியன்று கோவையிலுள்ள பிரிக்கால் நிறுவனத்தின் மனித வளத்துறை துணை அதிகாரியான ராய் ஜார்ஜ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 22-ஆம் தேதியன்று மாண்டு போனார்.
அதைத் தொடர்ந்து பிரிக்காலில் இயங்கி வந்த ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் அனைத்திந்தியத் தலைவர் குமாரசாமி, மாநில நிர்வாகிகள் மற்றும் பிரிக்கால் நிறுவனத்தின் நான்கு பெண் தொழிலாளிகள் உள்ளிட்டு 27 பேர் மீது, சதியில் ஈடுபட்டது மற்றும் கொலை செய்தது – என இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிரிக்கால் நிறுவனத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஏ.ஐ.சி.சி.டி.யு.தொழிற்சங்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள் போராடி வந்த நேரத்தில்தான், ராய் ஜார்ஜை தொழிலாளர்கள் இரும்புத் தடியால் தாக்கிக் கொன்றதாக இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவையிலுள்ள பிரிக்கால் ஆலையைப் பன்னாட்டு ஏகபோக நிறுவனமாக விரிவாக்கி வளர்க்கும் நோக்கத்துடன், அதீத உற்பத்தி இலக்கு வைத்து அற்பக்கூலிக்குத் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டனர். உற்பத்தியைப் பெருக்க பெண் தொழிலாளர்களைக் கட்டாயமாக ஓவர்டைம் செய்ய வைப்பது, ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல் பல்லாண்டுகளாகத் தினக்கூலிகளாக வைத்துச் சுரண்டுவது எனக் கணக்கற்ற அட்டூழியங்களைச் செய்துவந்தது, பிரிக்கால் நிறுவனம்.
இதற்கெதிராக, கடந்த 2007-இல் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து புதிய தொழிற்சங்கத்தை ஏ.ஐ.சி.சி.டி.யு. தலைமையில் நிறுவி உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கியதும், கொத்துக்கொத்தாக வேலை நீக்கம், தொழிற்சங்க முன்னோடிகள் பணியிட மாற்றம் – எனத் தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். சம்பள வெட்டு, பிரேக் இன் சர்வீஸ், ஊதிய உயர்வு முடக்கம், இன்சென்டிவ் பிடித்தம் – எனப் பலவகையிலும் தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை நிர்வாகம் பறித்தது. தொழிலாளர்கள் மீது பொய்வழக்குகள் சோடித்து, பெண் தொழிலாளிகள் உள்ளிட்டு 50-க்கும் மேற்பட்டோரைச் சிறையிலடைத்து தண்டித்தது. தொழிலாளர்களின் சட்டரீதியான உரிமைகளை நிலைநாட்டுமாறு தொழிலாளர் ஆணையமும் உயர்நீதி மன்றமும் போட்ட அனைத்து உத்தரவுகளையும் ஆலை நிர்வாகம் குப்பைக் கூடையில் வீசியது. இதன் உச்சகட்டமாக, கடந்த 2009 செப். 19 அன்று மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராய் ஜார்ஜினால், தொழிற்சங்க முன்னணியாளர்களான 42 தொழிலாளர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த இத்தொழிலாளர்கள், ஏ.ஐ.சி.சி.டி.யு. சங்கத் தலைவர்களுடன் இணைந்து கொலைச்சதியில் ஈடுபட்டதாகவும், வேலை நீக்கம் செய்த உன்னைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று கூச்சலிட்டபடியே ராய் ஜார்ஜை இரும்புத் தடியால் தாக்கியதாகவும், அதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மாண்டதாகவும் ஆலை நிர்வாகத்தாலும் அரசு தரப்பிலும் வழக்கு சோடிக்கப்பட்டது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே, போலீசாரின் அச்சுறுத்தலுக்கும் சித்திரவதைகளுக்கும் அஞ்சி மணிகண்டன் என்ற தொழிலாளியும், சம்பத் குமார் என்ற தொழிலாளியின் மனைவியும் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்கள்.
ஏ.ஐ.சி.சி.டி.யு. சங்கத்தை கோவை வட்டாரத்தில் தலைதூக்க விடாமல், முளையிலேயே கிள்ளியெறியும் நோக்கத்துடன்தான் பிரிக்கால் தொழிலாளர்கள் மட்டுமின்றி, மைய சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகளும் இப்பொய் வழக்கில் சேர்க்கப்பட்டனர். தொழிற்சங்க முன்னோடியாகச் செயல்பட்ட காரணத்தால், 2007-இல் பிரிக்கால் நிறுவனத்தின் உத்தராஞ்சல் மாநிலக் கிளைக்கு மாற்றப்பட்ட ஒரு தொழிலாளியின் பெயரையும் சம்பந்தமே இல்லாமல் இந்தப் பொய்வழக்கில் போலீசும் நிர்வாகமும் சேர்த்தது.
இந்த மோசடியை நியாயப்படுத்த முடியாத நிலையில், அத்தொழிலாளி உள்ளிட்டு, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளிகள் 19 பேர் மீதான கொலைச்சதி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம், அதேசமயம் நிரூபிக்கப்படாத கொலைக் குற்றத்தின் அடிப்படையில், மணிவண்ணன், சரவணக்குமார், சிவகுமார், வேல்முருகன், ராஜேந்திரன், சம்பத்குமார், ராமமூர்த்தி, குணபாலன் ஆகிய 8 தொழிலாளர்களுக்கு அநியாயமாக இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், நீதிமன்றத்தால் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த 8 தொழிலாளர்கள் எவருமே செப்.19,2009 அன்று வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்ல. அந்த 8 தொழிலாளர்களும் ராய் ஜார்ஜின் மரணத்துக்குப் பின்னர்தான் நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த 8 பேரும் மனித வள அதிகாரியின் அலுவலகம் உள்ள யூனிட்டில் வேலை செய்தவர்கள் அல்ல. அவர்கள் மலுமிச்சம்பட்டியிலுள்ள மற்றொரு யூனிட்டில் வேலை செய்தவர்கள். இந்த 8 தொழிலாளர்களும் தொழிற்சங்க முன்னோடிகள் என்பதாலேயே இவர்கள் மீது கொலைவழக்கு சோடிக்கப்பட்டு அநியாயமாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இரட்டை ஆயுள் தண்டனை என்பது காமவெறி சாமியார் பிரேமானந்தா போன்ற மிகக் கொடிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு அரிதினும் அரிதாகத்தான் வழங்கப்படுகிறது. இனி எந்த வழியிலும் தொழிற்சங்கம் தலைதூக்க முடியாதபடி ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன்தான், அத்தகையதொரு கொடிய தண்டனையை 8 தொழிலாளர்களுக்கு விதித்து, தனது முதலாளித்துவ கைக்கூலித்தனத்தை நீதிமன்றம் அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது.
ஒரு வாதத்துக்கு இப்படியொரு தாக்குதல் நடந்ததாக வைத்துக் கொண்டாலும்கூட, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றும் அந்த ஆலையில், எவருமே இதுபற்றி 10 நிமிட நடை தூரத்திலுள்ள போலீசு நிலையத்தில் புகார் கூட செய்யவில்லை. முதல் தகவல் அறிக்கையில் காலை 11.40 மணியளவில் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆலை வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த ஆயுதப் படை போலீசாருக்கு கூச்சலோ, அலறலோ கேட்கவில்லை. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த போலீசு ஆய்வாளரோ, சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் பகல் 11.41 முதல் 11.46 வரையிலான நேரத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை நீதிமன்றத்திலேயே கூறியிருக்கிறார்.
சம்பவம் அனைத்தும் ஆலையிலுள்ள கண்காணிப்பு காமெராவில் (சிசிடிவி) பதிவாகியுள்ளதாகவும், இது மிக முக்கியமான சாட்சி என்றும் அரசு தரப்பு கூறியிருந்தது. ஆனால், அன்று கண்காணிப்புக் காமெரா பழுதடைந்ததால் இச்சம்பவம் பதிவாகவில்லை என்று ஒரேயொரு சாட்சி கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது குறித்து அரசு தரப்பிடம் குறுக்கு விசாரணை நடத்த மறுத்து, பொய்சாட்சி புனைந்த போலீசைக் காப்பாற்றியது. ராய் ஜார்ஜ் மரணமடைந்த பிறகு அவரைச் சோதித்த மருத்துவர், தலையில் ஒரு காயம் இருந்துள்ளது என்று பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் 3 காயங்கள் இருந்ததாகவும், 8 பேரால் 8 இரும்புத் தடிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்ததாகவும் எழுதப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் போலீசும் ஆலை நிர்வாகமும் கொண்டுவந்து நிறுத்திய சாட்சிகள் அனைத்தும் பொய்சாட்சிகள் என்பது நீதிமன்ற விசாரணையின்போது அம்பலமானது. இருப்பினும், தொழிற்சங்கமே கூடாது என்ற ஒத்த கருத்தைக் கொண்டுள்ள போலீசு, முதலாளிகள், அரசு ஆகிய அனைத்தும் கூட்டுச் சேர்ந்து அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி புனைந்துள்ள இந்தப் பொய் வழக்கில் முதலாளிகளின் நோக்கத்துக்கு ஏற்பவே நீதிமன்றம் 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது.
இப்படித்தான் மாருதி மற்றும் ஹோண்டா தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்கத்திற்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன. 2005-இல் சட்டபூர்வ வழியில் தொழிற்சங்க உரிமை கேட்டுப் போராடிய ஹோண்டா தொழிலாளர்களைக் குருதி வெள்ளத்தில் மிதக்கவிட்டது அரியானா போலீசு. கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அந்நிறுவனத்தின் 63 தொழிலாளர்கள் இன்னமும் நீதிமன்றத்திற்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். இத்தாக்குதல் தொடர்பாக ஒரு போலீசுக்காரன் மீதோ, ஒரு தலைமை நிர்வாகி மீதோ, முதலாளி மீதோ எந்த வழக்கும் இல்லை.
கடந்த 2012 ஜூலை 18 அன்று குர்கானிலுள்ள மாருதி நிறுவனத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்துப் போர்க்குணத்துடன் போராடிய 546 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வீதியில் வீசியெறியப்பட்டனர். தொழிற்சங்கம் அமைப்பதற்கு தொழிலாளர்களுக்கு உதவியாக இருந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரியான அவனிஷ் தேவ் என்பவரை நிர்வாகமே சதி செய்து கொன்றுவிட்டு, கொலைப்பழியைத் தொழிலாளர்கள் மீது சுமத்தியது. கொலைக்குற்றம் சாட்டப்பட்டு 36 மாருதி தொழிலாளர்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளாகச் சிறையில் வாடுகின்றனர். ஆனாலும், இன்றுவரை அவர்களுக்குப் பிணை கூட வழங்கப்படவில்லை. அப்பட்டமாக மாருதியின் அடியாளாகவே அரசும் போலீசும் நீதித்துறையும் இயங்கி வருகின்றன.
இப்படித்தான் 1944-ஆம் ஆண்டில் கோவை – சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த தொழிற்சங்க முன்னோடிகளான ராமைய்யன், வெங்கடாச்சலம், ரங்கைய்யன், சின்னைய்யன் ஆகிய 4 மில் தொழிலாளர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு பொய்வழக்கில் சிறையிடப்பட்டனர். அந்நால்வரும் ஜனவரி 8, 1946 அன்று தூக்கிலிடப்பட்டு தியாகிகளாயினர். அது காலனியாதிக்கக் காலம். இன்று பிரிக்கால் நிறுவனத்தின் 8 தொழிலாளர்கள் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு பொய்வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது மறுகாலனியாதிக்கக் காலம்.
இன்றைய ஆட்சியாளர்களும் நீதிபதிகளும் முதலாளிகளின் தரகர்களாக மாறி, முதலாளிகளது நிகழ்ச்சி நிரலின்படியே செயல்படுகின்றனர். தொழிலாளர்கள் உரிமைக்கான சட்டங்களைக் கட்டிக்காத்து செயல்படுத்த வேண்டிய அரசு, நீதிமன்றம் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தும் தாங்களே வகுத்துக் கொண்டுள்ள சட்டங்கள், விதிகள், கடமைகள், பணிகள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு அப்பட்டமாக தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக நிற்கின்றன.
வேலைக்கு அமர்த்து, துரத்து (Hire and Fire) என்பதற்கு மேல், தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் தரவேண்டும் என்ற சட்டமோ, நிபந்தனையோ எதுவும் கூடாது; அப்போதுதான் முதலாளிகளின் மனம் குளிர்ந்து, மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெறும் என்கிறது மோடி அரசு. இதற்கேற்ப தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டு, தொழிலாளர் சட்டம் என்பதே கிரிமினல் சட்டமாக மாற்றப்பட்டு வருகிறது.
நடப்பது தொழிலாளி வர்க்கத்தின் மீதான பலமுனைத் தாக்குதல். மறுகாலனியாதிக்கத்தின்கீழ் உரிமைகள் ஏதுமற்ற கொத்தடிமைகளாக தொழிலாளி வர்க்கத்தை மாற்றுவதற்கான பயங்கரவாதத் தாக்குதல். உள்நாட்டு, வெளிநாட்டு தரகுப் பெருமுதலாளிகளின் அடியாள்தான் இன்றைய அரசமைப்பு என்ற உண்மையை நிரூபிக்கும் தாக்குதல்.
தங்களது அடிப்படை உரிமைகளை நசுக்கி இலாப வெறிக்காக தங்களின் மீது போர் தொடுக்கும் முதலாளி வர்க்கத்தையும், அதன் அடியாளாகச் செயல்படும் இன்றைய அரசமைப்பையும் பிரிக்கால் மற்றும் மாருதி தொழிலாளர்கள் எதிர்கொண்டு நிற்கிறார்கள். அவர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து, சிறையிடப்பட்டுள்ள பிரிக்கால் மற்றும் மாருதி தொழிலாளர்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது, போராட்ட மரபில் வந்த கோவை தொழிலாளி வர்க்கத்தின் – இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் இன்றைய அவசர, அவசியக் கடமையாகும்.
– பாலன் வினவு.com
கடந்த வாரம் வியாழக்கிழமை 19.01.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றம் பிரிக்கால் தோழர்கள் 6 பேருக்கு விடுதலை அளித்துள்ளது. மேலும் மணிவண்ணன் மற்றும் ராம்மூர்த்தி ஆகியோருக்கு தண்டணையை உறுதி செய்துள்ளது.
பதிலளிநீக்கு