செவ்வாய், 1 மார்ச், 2016

சென்னையின் அழிவில் நீதிபதிகளின் பங்கு !

கூவம் ஆக்கிரமிப்புஆறுகளும் ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டதற்குக் காரணமானவர்கள் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மட்டுமல்ல. கூவத்தைக் குடிசைகள் மட்டுமா ஆக்கிரமித்திருக்கின்றன? நீர்நிலைகளின் முக்கியத்துவத்தில் இயற்கையும் செயற்கையும்
பக்கிங்காம் தீர்ப்பு வந்த அதே ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஏரிகளை ஒழித்துக் கட்டுவதற்காகவே, இன்னொரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதையும் தமக்குச் சாதகமாக இந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டியிருந்தார்கள் (பாரா 22). அந்த தீர்ப்பின் சாராம்சம்என்னவென்றால். “இயற்கையாக அமைந்த குளங்களைப் பாதுகாப்பது சட்டப்படி மிக அவசியமாகிறது, ஆனால் செயற்கையாக அமைக்கப்பட்ட குளங்கள் அப்படிப்பட்ட சட்டப்பூர்வ பாதுக்காப்பு பெறத் தகுதியானவை இல்லை”.

இப்படியொரு நுணுக்கமான கருத்தை சட்ட அறிஞர்களோ, அறிவியலாளர்களோ கனவிலும் எண்ணி இருக்க மாட்டார்கள். பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயனில் இருந்து வந்த குளங்களை, செயற்கை என்ற ஒரே காரணத்திற்காக அடியோடு அழிக்கலாம் என்ற இந்தக் கோட்பாட்டை என்னவென்று சொல்ல? உண்மையில், தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இயற்கையாக அமைந்த குளங்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமே இல்லை என்ற உண்மையை உச்ச நீதிமன்ற நீதிமான்கள் அறிந்திருந்தார்களா என்று தெரியவில்லை.
ஒரு அறிவியல் சார்ந்த சட்டக் கேள்வியைத் தீர்மானிக்கும் முன்பு எந்த அளவுக்கு இந்திய நீதிபதிகள் தங்கள் சுய அறிவையோ அல்லது அறிவியல் அறிஞர்களின் கருத்துகளையோ முற்றிலும் தெளிவாகக் கேட்டு சீர்தூக்கி முடிவுக்கு வருகிறார்கள் என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒருவகையில், இன்றைய இந்திய நீதிபதிகளைவிட காலனிய கால நீதிபதிகள் தாங்கள் செய்யும் தொழிலின் பேரிலான மரியாதையும் (Professional honour) அறிவு நேர்மையும் (Intellectual honesty) நமக்கு வியப்பூட்டுகிறது.
உதாரணமாக, மதுரை மாவட்டக் கையேட்டை எழுதிய ஒ.ஏ. நெல்சன் அக்கால மக்கள் எப்படி ஊரெங்கும் ஏரிகளையும் குளங்களையும் வாய்க்கால்களையும் வெட்டி சிறப்பான நெறிமுறைகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர் என்று விரிவாக எழுதியிருக்கிறார். நெல்சன், முறையாகச் சட்டம் பயின்றவர், சென்னை மாகாணத்தில் வருவாய் அதிகாரியாகவும், நீதிபதியாகவும் பல காலம் பணி செய்தவர். இந்தியா முழுமைக்கும் இந்துச் சட்டம் என்பது ஒன்றேதான் என்று வட இந்தியப் பார்ப்பனர்கள் புளுகிக் கொண்டிருந்ததை மறுத்து, இந்துக்களின் வழமைகளும் முறைமைகளும் இந்தியா முழுதும் ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதை ஆதாரங்களுடன் முதன் முதலாக புத்தகமாக எழுதி வெளியிட்டு, இந்துக்கள் சட்டம் பற்றிப் புனையப்பட்ட பொய்களை மறுத்தவர்.
இதோ 1868 ம் ஆண்டு வெளியான மதுரை மாவட்டக் கையேட்டில் குளங்களைப் பற்றி நெல்சன் கீழ்கண்டவாறு எழுதியிருக்கிறார்:
ரெட்டேரி
இயற்கைசார் சுற்றுலா (எகோ டூரிஸம்) என்ற பெயரில் ரெட்டேரியைத் தனியார்மயம் விழுங்குவதற்குத் திட்டங்களைத் தயாரித்து வருகிறது, தமிழக அரசு.
“மதுரை மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் இயற்கையாய் அமைந்த குளங்களோ குட்டைகளோ எதுவுமே இல்லை. தண்ணீரை ஒருவர் எங்காவது கண்டார் என்றால் அது நிச்சயம் செயற்கையாக தேக்கி வைத்ததுதான். பழனி மலைகள் தொடங்கி கடற்கரைவரை செல்லும் பயணி ஒருவர் எந்தவொரு இயற்கையான நீர்நிலையையும் ஒருபோதும் காணவே முடியாது. (பக். 2, பாகம்-1)”
நீதிமன்றங்கள், நீதிபதிகளின் பயன்பாட்டுக்காகவென்றே இத்தகைய நூல்கள் அந்தக் காலத்தில் எழுதி வெளியிடப்பட்டன. மேற்கண்ட கூற்று மதுரை மாவட்டத்திற்கு மட்டும் அல்ல, சென்னைக்கும் பொருந்தும். நீர்நிலைகள் அனைத்தும் செயற்கையான மனித முயற்சிகள் என்பதை அறிந்து அவர்கள் மதிப்பளித்து வந்தனர்.
chennai-floods-caption-1அன்றைய ஆங்கிலேய அரசியல்வாதிகள் கூட இந்த நாட்டின் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்து வைத்திருந்தனர். எடுத்துக் காட்டாக, ஆங்கிலேய நாடாளுமன்றவாதியும், சட்டம், தத்துவம், அரசியல் அறிவில் தேர்ந்த அறிஞனுமான, எட்மண்ட் பர்கி (Edmund Burke) தென்னாட்டின் ஏரிகளை ‘ஒரு வங்கிக்கு ஒப்பிட்டு’ அவற்றின் நலத்தை நாட்டின் நலத்துக்கு ஒப்பாகவும், அதை உருவாக்கிய மூதாதையரைப் பலவாறாகப் போற்றியும் எழுதியிருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில், பாழாகிக் கிடந்த ஏரிகளை செப்பனிடாத ஊழல் மலிந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரிகளைப் பலவாறாகச் சாடி வசைமாறி பொழிந்திருக்கிறார். அவர் ஏரிகளைக் குறித்து எழுதியவற்றைப் படிக்கும் எவருக்கும் வியப்பு வரும். 1785-ஆம் ஆண்டு நடைபெற்ற எட்மன்ட் பர்கியின் மிகப் பிரபலமான சொற்பொழிவு ஒன்றில் அவர் ஏரிகளை பற்றியும் அதனை உருவாக்கிய நல்லோர்களைப் பற்றியும்இவ்வாறு பேசினார்:
“ஏரிகளே மன்னர்களின் உண்மையான நினைவுச் சின்னங்கள், இந்த மன்னர்கள் தமது மண்ணின் மைந்தர்களுக்கு உண்மையான தந்தையராக இருந்தவர்கள்; இவையே எதிர்வரும் சந்ததிகளுக்காக அவர்கள் விரும்பி விட்டுச் சென்ற உண்மையான விருப்ப ஆவணங்கள். இவை, ஒரு மாபெரும் நோக்கத்திற்காக அவர்கள் எழுப்பிய பேராலயங்கள்; அவர்களது நோக்கம் வற்றாத நல்லன்பை உடையது, இந்தப் பேரன்பு ஒரு மனிதனின் குறுகிய வாழ்நாட்களுக்குள் அடைபடும் அன்பு அல்ல, கட்டுக்குள் அடங்காத மனித மனத்தின் பேராசைகளையும் மிஞ்சுபவை; இயற்கையின் வரம்பை மிஞ்சிய பெரும் வளத்தைக் காலந்தோறும் அள்ளித்தர வல்லவை, இவை தலைமுறைகள் தாண்டி என்றென்றும் நின்று நிலைக்கத்தக்க வகையில் மனித குலத்திற்கு ஊட்டமளித்து வளப்படுத்தும் காவலர்கள்.”


ஏரிகளின் முக்கியத்துவம் குறித்து பல அறிவியல் அறிஞர்கள் எழுதியிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் பிறந்த நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் சி.வி.ராமன் கூட தமிழ்நாட்டின் ஏரிகளைப் பற்றி எழுதி இருக்கிறார். வள்ளுவன் சொன்ன வார்த்தையையே தலைப்பாக்கி “நீரே அமிழ்தம் (Elixir of Life)” என்று ராமன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை பள்ளி மாணவர்கள் பலர் படித்திருப்பார்கள். இயற்பியல் மேதையான அவர், ஏரி நீரின் நிறம் இடத்திற்கு இடம் ஏன் மாறுபடுகிறது என்று இயற்பியல் விளக்கத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இந்திய விவசாயத்திற்கு ஏரிகளின் முக்கியத்துவம் என்ன என்று விளக்குவதுடன், ஏரிகளின் அழகையும் வியந்து எழுதியிருக்கிறார். குடியிருப்புகளுக்கு இடையே அமைந்த ஏரிகளின் காட்சி எவ்வளவு அழகாயிருக்கின்றது என்று வியப்புறுகிறார். ஏரி நீரில் காலைக் கதிரவன் எழும் காட்சியும், மாலைக் கதிரவன் மறையும் காட்சியும் உள்ளத்திற்கு எத்தகைய கிளர்ச்சியைத் தருகின்றன என்று விவரிக்கிறார். “மனித முகத்திற்கு கண்கள் தரும் அழகைப் போன்று, தான் அமைந்திருக்கும் நிலப்பரப்பிற்கு ஏரிகள் அழகைச் சேர்க்கின்றன” என்பது அவர் கருத்து.
chennai-floods-caption-2இயற்பியல் என்றால் ஏதோ ஒரு வறண்ட அறிவியல் என்று கருதும் பலர் இருக்க, இந்த இயற்பியல் அறிஞரின் கண்களில்கூட அவை பராமரிப்பின்றி சீரழிந்து வருவதும் தெரிந்திருக்கிறது, அதையும் எண்ணி வருந்தியிருக்கிறார். எனவே, ஏரிகளின் முக்கியத்துவம் என்ன என்பது நீதிபதிகள் அறிந்து கொள்ள முடியாத ஒரு விசயம் அல்ல.
ஆனால், அதிமேதாவிகளாக தங்களை காட்டிக்கொள்ளும் இக்கால நீதிபதிகள் ஒரு பராமரிப்பில்லாத ஏரியை நிரந்தரமாக மூடச் சொல்லி தீர்ப்பளித்த போதுதான், ‘முக்கியத்துவத்தில் இயற்கைஎன்றும் செயற்கை என்றும்’ யாரும் அறிந்திராத ஒரு பாகுபாட்டைக் கண்டுபிடித்து அதையே சட்ட விதியாக்கி தீர்ப்பளித்தனர். தாங்கள் ஏன் அப்படிப்பட்ட ஒரு சட்டம் அல்லது அறிவியல் நிலைபாட்டை கண்டடைந்தனர் என்று அந்தத் தீர்ப்பில் எங்குமே குறிப்பிடவில்லை. ஏனெனில், இந்திய அறிவியலாளர்களோ அல்லது சர்வதேச அறிவியலாளர்களோ அப்படியொரு வேறுபாட்டை இதுவரை கண்டு பிடிக்கவுமில்லை. இட நெருக்கடி மிகுந்த இன்றைய ஐரோப்பிய நகரங்களில் உயர்ந்தோங்கிய கட்டிடங்களின் மத்தியிலும் உச்சியிலும் நீர் நிலைகளை அமைக்க முடியுமா? என்ற அறிவியல் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், நமது முன்னோர் ஊர் நடுவே கட்டி வைத்த நீர்நிலைகளை அழிக்கும் உத்தரவைப் பிறப்பித்த இந்த நீதிபதிகளை என்னவென்று சொல்ல!
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்குள் கழிவு நீரைக் கொட்டும் அக்கிரமம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்குள் கழிவு நீரைக் கொட்டும் அக்கிரமம்.
உலகமெங்கும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. எதிர்கால உலகத்திற்காக நீர் நிலைகளைக் காப்பாற்றும் முயற்சியில் சட்ட வல்லுனர்களும் இணைந்தே செயல்பட்டு வருகின்றனர். நீர்நிலைகளுக்கான சட்டம் சார்ந்த அறிவியல் நடைமுறைகளை ராம்சர் உடன்படிக்கை (Ramsar Convention) என்று அழைக்கப்படும் 1971-ஆம் ஆண்டைய “சர்வதேச முக்கியத்துவம் மிக்க நீர்நிலைகள் குறித்த எழுதாச் சட்டம் (Convention on Wetands of International Importance) வெளியிட்டுள்ளது. இந்த மிக முக்கியமான சர்வதேச உடன்படிக்கையில் இந்திய அரசும் கையெழுத்திட்டு அதைச் சீரிய முறையில் செயல்படுத்துவோம் என்று உறுதியளித்துள்ளது. அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் சட்டப் பொறுப்பு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் துறைக்கு உண்டு. குறைந்தபட்ச சட்ட அறிவு உள்ள எவரும் இந்த உடன்படிக்கையில் என்ன உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்திய உச்ச நீதிமன்றம் கண்டு பிடித்த “செயற்கையாக அமைக்கப்பட்ட குளங்கள் சட்டப்பூர்வ பாதுக்காப்பு பெறத் தகுதியற்றவை” என்ற வகையினம், ராம்சார் உடன்படிக்கையில் இல்லை. ஏன், நாம் அறிந்தவரையில் எந்த இந்தியச் சட்டங்களிலும் குறிப்பிடப்படவில்லை.
chennai-floods-caption-3இந்தியாவைப் பற்றிய மிகச் சிறிய அறிவுடைய எவரும் அப்படியொரு சட்ட நிலைப்பாட்டை அடையவே முடியாது. ஏனென்றால். உள்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் பெரும்பகுதியானவை செயற்கையாக உருவாக்கப்பட்டவையேயன்றி இயற்கையாக அமைந்தவை அல்ல.அப்படிப்பட்ட கட்டமைப்புகளை சேதப் படுத்தவோ, அழிக்கவோ அனுமதித்தால் அது நாட்டின் பொருளாதார அழிவை அனுமதிப்பதற்கு ஒப்பாகும். மத்திய அரசு பராமரித்துவரும் சிறு பாசனக் குளங்களின் 2006-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாட்டில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் உள்ளன. இவை அனைத்தும் இங்கு வாழ்ந்த மக்கள் செயற்கையாக உருவாக்கியதே தவிர, இயற்கையில் அமைந்தவை அன்று. எனவே, இக்குளங்கள் அனைத்தும் நாட்டின் கட்டமைப்புகள் என்றே கொள்ள வேண்டும்.
ஆனாலும் ஏரிகளைப் பற்றியோ அது சார்ந்த சட்டம் பற்றியோ, தென்னிந்திய வரலாறு பற்றியோ எதையும் முறையாகக் கற்று அறிந்திராத உச்ச நீதிமன்ற நீதிபதிகள், செப்பனிடப்படாத குளங்களை தூரத்துவிட்டு அந்த இடத்தில் கடைகள் கட்டிவைக்கலாம் என்று தீர்ப்பினை வழங்கினர். பக்கிங்காம் கால்வாயை தூர்க்கும்படி தீர்ப்பு எழுதியவர்கள், இந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டியதில் நமக்கு வியப்பு ஒன்றும் இல்லை.
அந்த வழக்கை விரிவாகப் பார்ப்போம்.
துரைப்பாக்கம் ரெட்டேரி வழக்கு
சென்னை மழைவெள்ளம் - மீட்புப்பணி
சென்னை மழைவெள்ளம் – மீட்புப்பணி (கோப்புப் படம்)
1996-ஆம் ஆண்டு, சென்னையின் வெள்ளச் சேதத்திற்குக் காரணமாகச் சொல்லப்பட்ட பக்கிங்காம் கால்வாய்க் குடிசைவாசிகளை வெளியேற்றி மீள் குடியேற்றம் செய்ய, தமிழக அரசு தேர்வு செய்த இடம் ஏரிகள் அதிகமாக இருந்த ஒக்கியம் துரைப்பாக்கம் கிராமம். இங்கே ஏரிகள் மட்டுமில்லாது பலவிதமான நீர் மற்றும் கடல் சார்ந்த நீர் நிலைகளும் (Inland and Coastal Wetlands) இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கிராமத்தில் இருந்த ரெட்டேரி என்ற ஒரு குளத்தை தூர்த்துவிட்டு அந்த இடத்தில் கடைகள் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. உள்ளூராட்சிக் கவுன்சிலராக இருந்த சுசேதா என்பவர் இதை எதிர்த்து ஒரு வழக்குத் தொடர்ந்தார். சுருக்கமாகச் சொன்னால், ஏரிப் புறம்போக்கைக் சீர்குலைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது தான் அவரது வாதம். சட்டப்படி அவரது வாதம் மறுக்க முடியாதது. அதோடு கூடவே, பல சான்று ஆவணங்கள், இதற்கு முன்பு வந்திருந்த சுற்றுச்சூழல் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைக் குறிப்பிட்டு தமிழக அரசின் முடிவு சட்ட விரோதமானது என்று அவர் வாதிட்டார்.
chennai-floods-caption-4சீரழிந்த அந்த ஏரியை தூர்த்தால் என்ன கேடு வந்துவிடும் என்று ஆய்ந்து சொல்ல அண்ணா பல்கலை கழகத்தின் நீர்வள ஆய்வு மையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. அவர்கள் இந்தக் குளம் குறித்த நிலவரத்தை அறிக்கையாகச் சொல்லியிருந்தார்கள். அதில், இந்தக் குளம் ஒரு சிறிய கோயில் குளம் என்றும், தற்போது அது சிதிலமடைந்து இருப்பதாகவும், இப்போதைய நிலையில் இதனைத் தூர்த்து விடுவதால் ஏற்படும் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றும் ஒரு அறிக்கையைக் கொடுத்தார்கள். வழக்கு நடந்து கொண்டிருந்தபோது “இந்து” நாளேடு வெளியிட்ட செய்தியில் இவ்வாறு வந்திருந்தது:
“ஊராட்சி மன்றக் கவுன்சிலர் சுசேதா தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் ஒக்கியம் துரைப்பாக்கம் கிராமத்தில் முன்பு இருபது குளங்கள் இருந்ததாகவும், தற்போது ஐந்து மட்டுமே இருப்பதாகவும், அதுவும் சிதிலமடைந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். …அதே மனுவில், தற்போது சீரழிந்த நிலையில் இருக்கும் இந்த ஐந்து குளங்களையாவது சீர் செய்தால் ஊருக்குள் குடியிருப்புகளை மூழ்கடிக்கும் வெள்ளத்தையும் தடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்”. (தி இந்து, பிப். 4, 2006)
ஆக, ஏரிகள் தண்ணீர் தருவது மட்டுமில்லாமல் வெள்ளத்தையும் தடுக்கும் என்ற விவரத்தையும் தெரிவித்திருந்தார். ஆனால், இதுபற்றி நீதிமன்றம் எதுவும் கண்டு கொள்ளவில்லை. அந்தக் குளத்தை சீர் செய்தால் அது தரும் பலன் என்ன என்பது பற்றியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இறுதியாக, இந்தக் குளத்தை தூர்த்து கடைகள் கட்டிக் கொள்வது சரியே என்று தீர்ப்பளித்ததுள்ளனர். சுசேதாவின் சட்டப்பூர்வ வாதங்களோ, அந்தக் குளத்தை சீர்செய்யும் கிராம சபையின் தீர்மானத்தையோ, குளம் வெள்ளப் பெருக்கை தடுக்கும் என்ற அறிவியல் கருத்தையோ உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. “இடிந்த குளத்தில் கடையைக் கட்டு” என்பதே இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாரம்.
சென்னை உயர்நீதிமனறத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுசேதா உச்ச நீதிமன்றம் சென்றார். விசாரித்து முடித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் இப்படிச் சொன்னது:
“வழக்கில் குறிப்பிடப்பட்ட இந்தக் குளம் இயற்கையான குளம் அன்று. வெறும் மழை நீரை மட்டுமே இதில் தேக்கி வைக்க முடியும். இது பல காலமாகக் குப்பை மேடாக இருந்து வருகிறது. இது எப்போது இந்தச் சீரழிவிற்கு வந்தது என்று ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றாலும்,பல காலமாகச் சீரழிந்த நிலையில்தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாதது. கூடவே, இது ஒரு குப்பை மேடாகவும் சாக்கடை தேங்கும் இடமாகவும் இருந்து வருகிறது. எனவே, எங்களது கருத்தில், இது ஒன்றும் உயிர்ப்பிக்கப்பட வேண்டிய குளம் என்று ஆணையிடத் தகுந்த வழக்கு அல்ல.”
chennai-floods-judiciary-roசென்னை மழை வெள்ளம் - மீட்புப்பணி
சென்னை மழை வெள்ளம் – மீட்புப்பணி (கோப்புப் படம்)
ஆதாரங்களே இல்லையென்றாலும், இது பல காலமாக சீரழிந்து கிடக்கிற குளம் என்று முடிவு செய்தவர்கள் சீரழிவைத் தடுக்க வேண்டும் என்று ஆணையிடவில்லை. மாறாக, தூர்த்துவிடும்படி ஆணையிடுகிறார்கள். இப்படிச் சொல்லிவிட்டு, இந்தக் கிராமத்தில் உள்ள ரெட்டேரியைவிட அளவில் சிறிய ஐந்து குளங்களை முறையாகப் பராமரித்து கிராமத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டையும், சுற்றுப்புறச் சூழ்நிலையையும் காப்பாற்றும்படி அரசுக்கு அறிவுரை விடுத்தார்கள்.
மேற்படித் தீர்ப்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வாயில் இருந்து வந்துவிட்டபடியால் இனிவரும் காலத்திற்கு இதுவே சட்டமாகும். இதைத்தான் பக்கிங்காம் கால்வாய் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன்மாதிரியாகக் காட்டியது. இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மேலும் சில ஏரிகள் தூர்க்கப்பட்டுவிட்டன. மருத்துவமனைகள், கல்லூரிகள் என்று பல விதமான கட்டங்களை ஏரிகளைத் தூர்த்த இடங்களில் கட்டிக்கொள்ளலாம் என்று நீதிமன்றங்கள் அனுமதித்திருக்கின்றன.
கடந்த நவம்பர் – டிசம்பர் வெள்ளத்தில் சுசேதா சொல்லியிருந்தபடி துரைப்பாக்கத் திற்கும் வெள்ளம் வந்தது.
ஒக்கியம் துரைப்பாக்கம் ஏரி மேடு வழக்கு
chennai-floods-caption-5ரெட்டேரியை தூர்த்துவிட்டு கடைகள் கட்டிய இதே துரைப்பாக்கம் கிராமத்தில் இருந்த இன்னொரு நீர் சார்ந்த நிலம் பற்றிய வழக்கு இது. வருவாய் துறைக் கணக்குகளில் இந்த நிலம் தீர்வை விதிக்கப்பட்ட நஞ்சைத் தரிசு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது (assessed waste wetland). சுருக்கமாக சொன்னால், இந்த நிலம் முன்பு ஒரு ஏரியின் உள்வாயாக இருந்திருக்கக் கூடும் அல்லது ஏதோ ஒரு நீர் சார்ந்த நிலமாக இருந்திருக்கும். இதே நிலம், கடந்த நூற்றாண்டின் கிராமக் கணக்குகளில் கடல் சார்ந்த கழிநிலம் (Back waters) என்று குறிக்கப்பட்டிருந்தது. கடலோரத்தில் இருக்கும் நஞ்சை விவசாயம் நடக்கும் கிராமப் பகுதிகளில் இத்தகைய நிலங்கள் இருக்கவே செய்கின்றன.
கிராமக் கணக்கு விபரங்களில் நீர் சார்ந்த நிலங்களில் மட்டுமே 133 வகைகள் இருக்கின்றன. அவ்விடத்தைக் காலி செய்து சுமார் மூவாயிரம் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுவதற்கென்று தமிழக அரசு தீர்மானித்தது. இதை எதிர்த்து சுசேதா மீண்டும் ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்தார். தமிழக அரசு அந்த நிலத்தின் தன்மையை வீடுகள் கட்டுவதற்கான இடமாக மாற்றியது செல்லாது என்பது அவரது சட்டப்பூர்வ வாதம். நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி ஒரு நீர்சார்ந்த நிலத்தை (wetland) தூர்த்து விட முடியாது என்பதால் அரசின் இந்த முடிவு செல்லாது என்று அவர் வாதிட்டார்.
பள்ளிக்கரணை சதுப்புநிலம்
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்
சென்னை உயர் நீதிமன்றம் அரசின் கட்டுமான வேலைகளுக்கு முழுமையான தடை ஏதும் விதிக்காமல் இந்த வழக்கினை விசாரிக்க மட்டும் முடிவு செய்தது. கடும் எதிர்ப்புக்கு இடையில் அரசு ஒரு ஆணையர் குழுவையும் அமர்த்தியது. இந்த குழுவில் பேர்பெற்ற சுற்றுச் சூழல் வல்லுநர் ஒருவர், நீர் இயல் வல்லுநர் ஒருவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் இடம் பெற்றிருந்தனர். அரசும், உள்ளூர் சல்லிப்பேர் வழிகளும் கொடுத்த பல இடைஞ்சல்களுக்கிடையே, இந்த வல்லுநர் குழு ஒரு அறிக்கையை வழங்கியது. இந்த அறிக்கையின்படி, குறிப்பிடப்பட்ட அந்த நிலம் மிகவும் அத்தியாவசியமான நீர் சார்ந்த நிலம் என்றும் இத்தகைய நிலங்களை மாற்றி அதில் வீடுகள் கட்டுவது பெரும் வெள்ளம் போன்ற துயரச் சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும், சென்னை போன்ற பெரு நகரங்களில் வெள்ள அபாயத்தைத் தவிர்க்க வேண்டுமானால் இத்ததகைய நிலங்களை விட்டு வைக்க வேண்டும் என்பதையே தன் முடிவாகச் சொல்லியிருந்தது.
வந்ததே கோபம், நீதிபதிகளுக்கு! கேட்காத கேள்விக்கு எப்படியடா பதில் சொன்னீர்கள்? என்று எரிச்சல் பொங்கி வழிய அந்த அறிக்கையை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிவிட்டு பள்ளிக்கூட அகராதியில் இந்த இடத்திற்கான விளக்கத்தைத் தேடினார்கள். அவர்களுக்குக் கிடைத்த புரிதலின் படி, அரசு இந்த இடத்தை குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுவதற்குத் தேர்வு செய்தது சரிதான் என்று தீர்ப்பளித்தனர். அறிக்கை எழுதிய அறிவியலாளர்களையும், அதிகாரியையும் அவமரியாதை செய்யும் அளவுக்கு தமது சொற்களைப் பயன்படுத்தியிருந்தனர். இதோ அவர்கள் “வேதனை”கொப்பளிக்க எழுதிய வார்த்தைகளைப் பாருங்கள்:
“கேட்டிருந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல வேண்டிய வல்லுநர் குழு அவர்கள் வரம்பை மீறி, ஓரடி மேலே சென்று பல விசயங்களைப் பற்றி தேவையில்லாமல் எழுதியிருப்பது எங்களை மிகவும் வேதனைப்படுத்தி விட்டது என்பதை நாங்கள் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். (பாரா 53)”
வல்லுநர் குழு எழுதியிருந்தது அனைத்தும் அறிவியல் உண்மை. சென்னையின் ஒட்டுமொத்த வெள்ளம் வடிய இருக்கும் ஒரு வடிநிலத்தை ஆய்வு செய்யும் பொழுது நகரின் ஒட்டுமொத்த பிரச்னையை ஆய்வு செய்யாமல் எப்படி எழுத முடியும்? அதனால்தான் வல்லுனர்கள் நீண்ட விளக்கம் கூறி எழுத வேண்டியிருந்தது. அதைக்கூட புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச பொறுமையோ அறிவோ இந்த நீதிபதிகளுக்கு இல்லை.
இப்பேர்பட்ட நிலங்களைப் பாதுகாக்காவிட்டால் எதிர்காலத்தில் சென்னையில் பெரும் வெள்ளம் அடிக்கடி வரக்கூடும் என்று வல்லுநர்கள் சொன்னது உண்மையே. வெள்ளம் குறித்து ஒரு ஆழமான திட்டம் தயாரித்து இத்தகைய நிலங்களை பராமரித்து நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அவர்கள் எழுதியது சர்வதேச அளவில் பின்பற்றப்படும் ஒரு நடைமுறையே. ஆனால் நீதிபதிகள் செய்து கொண்ட முன்முடிவுக்கு இந்த அறிக்கை ஒப்பவில்லை போலும். வல்லுனர்கள் சொன்னபடி இந்த ஆண்டின் வெள்ளம் இந்தப் பகுதி முழுமையையும் சுற்ச் சூழ்ந்தது. தீர்ப்பு சொன்ன நீதிமான்கள் – எலிப்பி தர்மாராவும், கே.கே. சசிதரனும் இப்போது என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.
முடிவாக,
சென்னையின் வெள்ளத்திற்கு அரசியல்வாதிகளும், ரியல் எஸ்டேட் முதலைகளும், கார்ப்பரேட் கம்பெனிகளும், ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் தொழில் செய்யும் கல்விமான்கள், மருத்துவ தர்மவான்கள் மட்டுமே காரணமல்ல. பொறுப்பற்ற அரசைக் கேள்வி கேட்க விரும்பாத நீதிமன்றங்களும் ஒரு காரணமே. சட்டத்தைப் பற்றிச் சிறிதும் கண்டு கொள்ளாததுடன் நாட்டின் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கும் இவர்களை நாம் கேள்வி கேட்டுக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய நேரம் இது.
பின் குறிப்பு:
1. நமது நாடு ஒருவேளை பிரிட்டனைப் போன்றதொரு உண்மையான முதலாளித்துவ ஜனநாயகமாக இருந்திருந்தால், லண்டன் மிர்ரர் பத்திரிக்கை செய்தது போல “அட முட்டாள்களே” என்று கூவி அழைத்து இந்த நீதிபதிகளை ஒரு பொது விவாதத்திற்கு உட்படுத்தலாம். இது இந்தியா என்பதால் நீதிபதிகள் தாம் அவமரியாதை செய்யப்பட்டதாக கூறக்கூடும்.
2. சுசேதா வழக்கின் போது நீதிபதிகள் நடந்து கொண்ட விதம், சுசேதாவையும், வல்லுனர்களையும் நடத்திய விதம், அவர்களைப் பற்றி தீர்ப்பில் குறிப்பிட்ட விதம் ஏறக்குறைய நாஜி ஜெர்மனியில் இட்லரின் ஆட்சியின் போது பாசிஸ்டுகளின் கைத்தடியாக இருந்த நீதிபதி பிரீஸ்லரின் செயல்களுக்கு ஒப்பாக இருந்ததுஎன்றால் அது மிகையில்லை. பிரீஸ்லருக்குப் எப்போதுமே பிடித்த கேள்வி “அடேய், கேட்டதற்கு மட்டும் பதில் சொல்! அதுவும் ஆம் என்று சொல், அல்லது இல்லை என்று சொல்!” நியாயமான ஜெர்மன் அதிகாரிகளை, ஜனநாயகவாதிகளை, அறிவாளிகளை, மாணவர்களை இப்படியே கேள்வி கேட்டு ஒப்புக்கு விசாரணை செய்து தூக்கிலிட்டவர் இந்த நீதிபதி. அவமானச் சின்னமான இவரது தீர்ப்புகளைப் போருக்குப் பிந்திய ஜெர்மனியில் தேடித்தேடி திருத்தினார்கள்.
– கிருஷ்ணராஜ்
(சென்ற இதழின் தொடர்ச்சி…) வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக