செவ்வாய், 1 மார்ச், 2016

அக்காவின் ஜெபங்களோ, மாமாவின் ஊழியங்களோ எதுவும் வேலைக்காகவில்லை

Esther sister-2இந்த பெந்தெகொஸ்தே சபைக்காரனுவ கிட்ட பளக்கம் விட்டா நம்மள கிறுக்காக்கி விட்ருவானுவ. நீ அவனுவ சொல்றானுவன்னி இதெல்லாம் நம்பிக்கிட்டு அலையாத..எஸ்தர் அக்கா அலங்கரிக்கப்பட்டிருந்தாள். முகத்தின் சுருக்கங்கள் அறியாதபடிக்கு ஏதோ களிம்பைப் பூசியிருந்தார்கள். பட்டுப்புடவை ஒன்றை அவள் மேனியின் மேல் சுற்றி வைத்திருந்தனர். தலையை அழகான வெள்ளை நிற ரீத் அலங்கரித்தது. முன்பென்றால் இத்தனை அலங்காரத்திற்கும் கழுத்தெல்லாம் நகையாக போட்டு நிறைத்திருப்பாள்… ஆனால், சவப்பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருக்கும் இந்த நிலையில் அதை அவளே கூட விரும்பியிருக்க மாட்டாள்.
“எல்லாம் வல்ல எங்கள் பிதாவே.. எங்கள் சகோதரி எஸ்தரை உமது சமூகத்தில் ஒப்புக் கொடுக்க வந்துள்ளோம் அய்யா…”
வெட்டி வைக்கப்பட்ட குழியின் வலது பக்கமாக அச் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது – சுற்றிலும் உறவினர்கள் அடைத்துக் கொண்டு நின்றனர். பெட்டியின் அருகே கோயில்குட்டியார் நின்று எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

தலைமாட்டில் சாமுவேல் மாமா.. பக்கத்திலேயே டானியல் சித்தப்பா.. குழியின் இடது பக்கமாக நீண்ட அங்கியுடன், நடுங்கும் கைகளில் பைபிளைப் பிடித்து வியர்த்த முகத்தோடு ஜெபத்தை சொல்லிக் கொண்டிருந்தான் ஜோன்ஸ். உடன்படித்த நண்பன். அய்யருக்கான படிப்பு முடித்து விட்டு பல ஆண்டுகாலமாக வேறு வேறு ஊர்களில் உபதேசியாராக பணிபுரிந்து விட்டு இப்போது தான் எங்கள் சர்ச்சுக்கே அய்யராக வந்துள்ளான். அவனுக்கு இது முதல் சவ அடக்கம்.
“தேவ சமூகத்திலே எங்கள் சகோதரியைக் கண்ணீரோடு விதைக்கிறோமய்யா….”
அதற்கு மேல் அங்கே நிற்கப் பொறுக்கவில்லை. கையில் இறுக்கிப் பிடித்த வேத புத்தகத்தோடு மெல்ல விலகினேன். “தம்பிகாரன் மண்ணள்ளிப் போடாம எங்கே போகான்..?” யாரோ கிசுகிசுத்ததை பொருட்படுத்தாமல் கூட்டத்திலிருந்து விலகி வந்தேன். வார்த்தைகள் காதில் விழாத இடமாகச் சென்று ஏதோவொரு பளிங்குக் கல்லறையின் மேலமர்ந்தேன். காதுகளில் அந்த வார்த்தைகள் மீண்டும் ஒலித்தது.. “கண்ணீரோடு விதைக்கிறோம்…” அக்காவின் குழைந்த குரலில் இந்த வார்த்தைகளை ஆயிரம் முறைகளாவது கேட்டிருப்பேன்..
“இன்று கண்ட எகிப்தியனை என்றுமே இனி காண்பதில்லை..
இஸ்ரவேலைக் காக்கும் தேவன் உறங்கவில்லை தூங்கவில்லை
“கசந்த மரா.. மதுரமாகும்… வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும்..
கண்ணீரோடு நீ விதைத்தால்… கெம்பீரமாய் அறுத்திடுவாய்…”
ஐந்து ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் கசந்த மரா நதி அதன் பின் என்றைக்குமே மதுரமாகவில்லை. அது ஈஸ்டர் தினம். கோவிலில் முதல் சர்வீசு முடிந்ததும் கம்யூனியன் கூட எடுக்காமல் அக்காவும் மாமாவும் அவசரமாக கிளம்பினார்கள்.
”எங்கே மாமா?”
“திருநவேலிக்கு மருமானே.. ஒன் அக்காவுக்கு மேலுக்கு சொவமில்ல.. ஏதோ கட்டி வந்திருக்காம்.. ஆக்னஸ் டாக்டரம்மாட்ட காட்டிட்டு சாயந்திரம் வாறோம்” ஆனால் அவர்கள் மறு நாள் தான் வந்தார்கள். வந்ததும் மாற்று உடைகள் எடுத்துக் கொண்டு மேலும் விவரங்கள் ஏதும் சொல்லாமல் மதுரை அப்பல்லோவுக்கு கிளம்பினார்கள். அக்காவின் முகம் இருண்டு போய்க் கிடந்தது.
அந்த ஈஸ்டரோடு எங்கள் சந்தோஷம் மொத்தமும் ஆவியாய்க் கரைந்து போனது.
புற்றுநோய் என்பது பணக்காரர்களின் வியாதி என்று தான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். அக்காவுக்கு மார்பக புற்றுநோய் என்பதை எங்களால் முதலில் நம்ப முடியவில்லை. உண்மை உறைக்கத் துவங்கிய போது பண்டிகைகளுக்கு மட்டுமே சர்ச் வாசலை மிதிக்கும் வழக்கமுள்ள எங்கள் குடும்பம் அடியோடு மாறிப் போயிருந்தது. சுவிசேஷ தொலைக்காட்சிகளின் பிரசங்க ஓலங்கள் தவிர்த்த சப்தங்கள் மொத்தமாய் அடங்கிப் போனது.

அக்கம் பக்கத்து வீட்டினரிடம் பேசுவது கூட மெல்ல மெல்லக் குறைந்து போனது. எப்போதுமில்லாத வழக்கமாய் வீட்டுக்குள் சுவிசேஷ ஊழியர்களின் நடமாட்டம் அதிகரித்த போது முதலில் தாத்தா தான் எச்சரித்தார். பெந்தெகொஸ்தே சபையைச் சேர்ந்த தேவ ஊழியர் ஒருவர் கான்சர் கட்டியை ஜெபத்தாலேயே அகற்றும் வல்லமை கொண்டவர் என்று கேள்விப்பட்டு அவரை வீட்டுக்கு அழைத்து வந்து சிறப்பு ஜெபத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாளன்று படுக்கையில் இருந்து கத்தினார் தாத்தா…
”என் பேத்திய கொண்ணு புடாதியடே.. ஆசுபத்திரிக்கி கொண்டு போய் காட்டுங்க.. ஆசுபத்திரிக்கி கொண்டு போய் காட்ட கூடாதுன்னு ஆண்டவர் பைபிள்ள எங்கயும் சொல்லியா வச்சிருக்காரு..”
ஊழியரின் முகம் இருண்டு போனது… இருண்ட முகத்தோடே ஜெபத்தைத் துவங்கினார்.
“யேசப்பா… பொல்லாத சாத்தானின் பிடியில் இருந்து இந்த குடும்பத்தைக் காத்தருளும் அய்யா.. யெல்லாஷா ரப்பா ஷாய்யார்ரா.. இந்த நொடியில் சாத்தான் விலகட்டும்.. சகோதரி எஸ்தரின் கட்டியை இந்த நொடியில் தூக்கிப் போடும் அய்யா…” தன்னை சாத்தான் என்று மறைமுகமாக விளித்ததில் தாத்தா ரவுத்திரமாகிவிட்டார். ஜெபம் நடந்து கொண்டிருக்கும் போதே உள்ளே புகுந்து பெரும் கலவரத்தை உண்டாக்கி விட்டார்.
”அட ஆக்கங்கெட்ட மூதியளா.. இனிமெ இந்த வீட்டுப்பக்கம் வந்தியள்னா கொண்டைய அறுத்துப் போடுவேன்.. என் பேத்திய ஆசுபத்திரிக்கி அனுப்பவுடாம கொல்லப் பாக்கியளா?” அதற்கு மேல் அத்தனையும் கெட்ட வார்த்தைகள் தான்.
அதிலிருந்து அக்காவும் மாமாவும் தங்கள் நடவடிக்கைகளை மேலும் ரகசியமாக்கிக் கொண்டார்கள். ஒரே வாரத்தில் அக்காவை பக்கத்து ஊரில் இருக்கும் தனது வீட்டுக்கே அழைத்துப் போய் விட்டார் மாமா. எங்கள் வீட்டுக்கு வருவதையும் நிறுத்தி விட்டனர். நாங்கள் பார்க்கச் சென்ற போதும் கூட வீடு பூட்டியே கிடந்தது.
அதன் பின் சில வாரங்கள் கழித்து வள்ளியூர் பேருந்து நிலையத்தில் வைத்து மாமாவைப் பார்த்தேன்.. நிறைய மாறியிருந்தார். இப்போதெல்லாம் அக்காவுக்கு அடிக்கடி தேவப் பிரஸன்னம் நடக்கிறது என்றும் ஆண்டவர் அக்காவோடு அடிக்கடி பேசுகிறார் என்றும் கான்சர் கட்டிகளை அவர் விரைவில் அகற்றுவார் என்றும் சொன்னார்.
மேலும் தங்கள் குடும்பத்தில் நிகழும் அற்புதங்களை சாட்சியாக அறிவிக்க ஆண்டவர் அழைத்துள்ளார் என்றும் அதனால் தனது வேலையை விட்டு விட்டு இருவருமாக ஊழியத்தில் சேர்ந்து விட்டதாகவும் தெரிவித்தார். மூன்றாம் மனிதர் ஒருவரிடம் பேசுவதைப் போல் பேசியவரின் முகத்தில் ஏதோவொன்று குறைவதாகப் பட்டது. பேச்சில் ஒருவிதமான செயற்கைத்தனம் ஏறியிருந்தது. பேசுவதே பிரசங்கம் செய்வது போலிருந்தது.. இடையிடையே அந்நிய பாஷையில் ஏதோ உளறினார்.. திடீரென அத்தனை ஜனங்கள் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருக்க லஜ்ஜையின்றிப் பாடத் துவங்கினார்..
”தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே”
”மாமா கொஞ்சம் நிப்பாட்டுங்க.. எல்லாரும் நம்மையே பாக்காங்க”
“பாக்கட்டுமே.. ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கும் கிருபையை இந்த உலகத்துக்கு அறிவிக்க வேண்டியது நம்மோட கடமை தானே?”
pentecostal 3அதன் பின் சில மாதங்கள் கழித்து மாமாவும் அக்காவும் பிள்ளையை இங்கே யாரோ ஒருவரின் பொறுப்பில் விட்டு விட்டு ஒரிசா மாநிலத்தில் பழங்குடி மக்களிடையே சுவிசேஷத்தை அறிவிக்க கிளம்பி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். இடையில் அக்காவுக்கு நோயின் தீவிரம் குறைந்து விட்டதாகவும் கான்சரின் வீரியம் மறைந்து விட்டதாகவும் சொன்னார்கள். மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் விசுவாசத்தின் மூலமே நிகழ்ந்த இந்த அற்புதத்தை உலகுக்கு அறிவிக்கும் ஜீவ சாட்சிகளாக தங்களை அவர்கள் ஒப்புக் கொடுத்து விட்டதாக பொதுவானவர்கள் மூலம் கேள்விப்பட்டோம்.
இடையில் சில ஆண்டுகள் அக்காவைப் பற்றிய தகவலே இல்லை. அவர்களை ஒரிசாவுக்கு அனுப்பி வைத்த ஊழியக்காரர்களைக் கண்டுபிடித்து அக்காவைப் பற்றி விசாரித்தேன். அவர்கள் சொன்னதெல்லாம் ஆச்சர்யமாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தது. அக்காவுக்கு அந்நிய பாஷையும் தரிசனமும் வரமாக கிடைத்துள்ளதாம். அக்காவின் கான்சர் கட்டிகளை ஆண்டவர் முற்றிலுமாக அகற்றி விட்டாராம். தினசரி அக்காவுக்கு பரிசுத்த ஆவியின் தரிசனம் கிடைக்கிறதாம். வெளிப்படுத்தின சுவிசேஷ புத்தகத்தில் ஆண்டவரின் மறுவருகை குறித்து சொல்லப்பட்டிக்கும் தீர்க்க தரிசனங்கள் பலவற்றை அக்கா முன்னறிந்து சொல்லும் வல்லமையை அடைந்து விட்டாராம். ஆண்டவரின் வருகை சமீபத்தில் உள்ளது என்றார்கள்.
நவீன மருத்துவத்தின் துணையின்றியே ஒரு பொல்லாத நோயிலிருந்து ஆண்டவர் அக்காவுக்கு விடுதலை அளித்ததை இப்போது அவர் சாட்சியாக மக்களிடம் தெரிவித்து வருகிறார் என்றார்கள். ஒரிசாவின் பழங்குடிப் பகுதி ஏதோவொன்றில் ஊழியம் செய்து வருகிறார் என்றும் தமிழ் நாட்டுக்கு வரும் போது அவர் எந்த சபையில் பிரசங்கம் செய்வார் என்கிற தகவலை எங்களுக்குத் தெரிவிப்பதாகவும் சொன்னார்கள்.
ஆண்டவரின் வல்லமையை எங்கள் குடும்பம் இன்னும் ஏற்காமல் இருப்பதற்கு சாத்தானின் பிடியில் நாங்கள் இருப்பது தான் காரணமென்றார்கள். ஒரு குடும்ப ஜெபத்தை ஏற்பாடு செய்து அதில் எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கலந்து கொள்ளச் செய்தால் தேர்ந்த தேவசெய்தியாளர் ஒருவர் வந்து ஜெபித்து சாத்தானின் ஆதிக்கத்தை முறியடித்து விடுவார் என்றார்கள். சி.எஸ்.ஐ சர்ச்சுக்கு உள்ளேயே சாத்தானின் பிடி இறுகி வருவதாகவும், அதனால் தான் அதற்குள் அரசியல் பிரச்சினைகள் ஏறபடுவதாகவும் சொன்னார்கள். உடனடியாக சி.எஸ்.ஐ சர்ச்சுக்கு செல்வதை நிறுத்தி விட்டு தங்கள் சபையில் சேர்ந்து முழுக்கு ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் மறுமையில் ஆண்டவரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் சொன்னார்கள்.
அவர்களிடம் பேசி வந்த பின் உள்ளூர பயம் ஏற்பட்டது. அப்போது ஜோன்ஸ் நாங்குநேரி சி.எஸ்.ஐ சர்ச்சில் உபதேசியாராக பணிபுரிந்து வந்தான். வீட்டாரிடம் இந்த விசயங்கள் எதையும் சொல்லாமல் நேரே ஜோன்ஸைப் போய் சந்தித்தேன்.
“அவ்வளவும் பொய்யிடே”
“ஆண்டவரின் வருகை பொய்யா?”
”அவரு வாறாரு வரலைன்னு இவிய கிட்டக்க சொல்லிகிட்டா செய்யிதாரு? சும்மா பயங்காட்டுதானுவடே. நீ எதுக்கும் நேர்ல போயி அக்காவ பாத்துட்டு வா”
”அதான் கான்சர் கட்டியவே தூக்கிப் போட்டுட்டாராம்லா?”
”எலெ கோட்டி.. நீ படிச்சவன் தானலே? நானே சொல்லக் கூடாது… அற்புதம்லாம் வெறும் பொய்யிடே.. சும்மா ஒரு இதுக்காக சொல்லுவானுவ. இந்த பெந்தெகொஸ்தே சபைக்காரனுவ கிட்ட பழக்கம் விட்டா நம்மள கிறுக்காக்கி விட்ருவானுவ. நீ அவனுவ சொல்றானுவன்னி இதெல்லாம் நம்பிக்கிட்டு அலையாத.. மொதல்ல கெளம்பு…. இங்கே அடுத்த மாசம் அசன பண்டிகை வருது.. தலைக்கு மேல சோலி கெடக்கு”
”ஏலெ அப்ப இதெல்லாம் சும்மான்னு சொல்லுதியா?”
pentecostal 2“பங்காளி.. கடவுளே இருக்காறோ இல்லையோ.. யாருக்குத் தெரியும்? நான் இருந்த உபவாச ஜெபத்துக்கு ஆண்டவர் இருந்திருந்தா எப்பவோ இறங்கியிருப்பாரே? இதெல்லாம் வெளிய சொல்லிடாதே.. ஊருக்கு வரச்சுல இவனுவ பத்தி விவரமா சொல்லுதேன். கெளம்பு”
என்னதான் நண்பன் என்றாலும் அய்யரின் வெள்ளை அங்கியோடு அவன் இப்படிப் பேசியது சரியாகப் படவில்லை. பெந்தெகொஸ்தே ஊழியர் சொன்னது சரிதான் போலிருக்கிறது. உள்ளூர பயம் வேர் விடத் துவங்கியிருந்தது.
அதோடு சி.எஸ்.ஐ கோவிலுக்குச் செல்வதை நிறுத்தி விட்டு சுவிசேஷ தொலைக்காட்சிகளைப் பார்க்கத் துவங்கினேன். தினமும் பலமணி நேரம் முழங்காலிட்டு ஜெபம் செய்யத் துவங்கியிருந்தேன். ஆனாலும் அச்சம் குறைந்தபாடில்லை. எதற்கு அஞ்சுகிறேன் என்றே தெரியாமல் அஞ்சினேன். ஏதோவொன்று கெட்டதாக நடக்கப் போகிறது என்று எந்நேரமும் உள்ளேயிருந்து ஒரு குரல் சொல்லத் துவங்கியது. காதுகளுக்குள் எந்த நேரமும் ஏதேதோ குரல்களும் ஒரு எக்காளச் சப்தமும் கேட்கத் துவங்கியது. அது ஆண்டவரின் வருகையை அறிவிக்கும் எக்காளச் சத்தம் என்று சாது சுந்தர் செல்வராஜ் ஏஞ்சல் டி.வியில் யாருக்கோ விளக்கமளித்தது மேலும் அச்சத்தைக் கூட்டியது. மெல்ல மெல்ல உடல் எடை குறையத் துவங்கினேன்.
ஆண்டவரின் வல்லமையை நான் குறைத்து மதிப்பிட்டு விட்டேனோ? நித்திய நரகத்தில் நான் உழலப் போகிறேனா?
ஏறக்குறைய வீட்டுக்குத் தெரியாமல் பெந்தெகொஸ்தே சபையில் சரணடைந்து முழுக்கு ஞானஸ்நானம் எடுத்து மறுமை வாழ்க்கையைக் காப்பாற்றி விடலாம் என்று நான் தீர்மானித்திருந்த சமயத்தில் தான் அக்கா ஒரிசாவில் இருந்து திரும்பி வந்து விட்டாள் என்கிற தகவல் கிடைத்தது.
ஆறு மாதங்களுக்கு முன் நடந்தது அது. எப்படி வண்டியில் ஏறினேன், எப்படி அதை ஓட்டினேன் என்று எதுவும் நினைவில் இல்லை. கிட்டத்தட்ட ஜோம்பியைப் போலத் தான் அந்த ஐந்து கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து மாமாவின் வீட்டை அடைந்தேன்.
தேவனால் இரட்சிக்கப்பட்ட ஒரு ஏஞ்சலை சந்திக்கப் போகும் ஆர்வம். நடு மார்பில் ஏதோவொன்று உருளத் துவங்கியது. படிக்கும் காலத்தில் நான் குடித்திருக்கிறேன். புகைத்திருக்கிறேன். சைட் அடித்திருக்கிறேன். ஆண்டவரின் இரட்சிப்பை நேரடியாக பெற்ற இந்த ஏஞ்சல் என்னைப் பார்த்த மாத்திரத்தில் இந்தப் பாவங்களை அறிந்து கொள்வாரோ என்கிற பயம் கவ்வியது. மாமா வீட்டுக் கதவைத் தட்டி விட்டு திறப்பதற்காக உள்ளங்கை வியர்க்க காத்திருந்த அந்த 45 நொடிகளை என் வாழ்நாளில் நான் மறக்கவே மாட்டேன்.
கதவு திறந்த போது எனது உணர்வுகள் ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்குத் தாவியது. அக்காவின் சாயலில் ஒருவர் நின்றிருந்தார். சதையே இல்லாத உடல். உடல் என்று கூட சொல்ல முடியாது.. எலும்புக் கூட்டை தோல் மூடியிருந்தது. கண்கள் பிதுங்கி வெளியே விழுந்து விடத் தயாராக நின்றது. பற்கள் துருத்திக் கொண்டு தெரிந்தது. தலையில் அனேக மயிர்கள் உதிர்ந்து மண்டைத் தொலி மின்னியது.
“வாடா வின்செண்டு” அது அக்கா தான். முடிவில்லாத கிணறு ஒன்றினுள் என்னைத் தூக்கி வீசியதைப் போல் உணர்ந்தேன்.
“இது ஆண்டவரின் சித்தம். அவரோட கிருபையின் ஆழத்தை எல்லோருக்கும் காட்டனும்னு நினைக்கிறார்”
மாமாவும் ஏறத்தாழ அக்காவின் நிலையில் தான் இருந்தார். விசாரித்த போது தான் பல விசயங்கள் தெளிவாகின. அக்காவுக்கு கான்சர் உண்மையில் குணமாகவே இல்லை. அதற்காக அவர் சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை. கான்சர் என்பதை அறிந்து உளவியல் ரீதியில் நொறுங்கிப் போனவர்கள் மிக எளிதாக சுவிசேஷ மாயையில் வீழ்ந்துள்ளனர். தொடர்ந்து உபவாச ஜெபமிருந்து வந்த நிலையில் கான்சரின் அறிகுறிகள் மேலெழுந்து வருவதும், மறைந்து போவதுமாக இருந்துள்ளது. அதையே அவர்கள் நோயிலிருந்து விடுதலை பெற்று விட்டதாக நம்பியுள்ளனர். கான்சரின் அறிகுறிகள் மேலே எழுந்து வரும் சந்தர்பங்களில் தங்கள் விசுவாசத்தில் ஏதோ குறையிருப்பதாக கருதி மேலும் மேலும் ஜெபத்தில் ஆழ்ந்துள்ளனர்.
beauty girl cry; Shutterstock ID 98479565; PO: aol; Job: production; Client: drone
எங்கள் வீட்டாருக்கு விசயம் தெரிந்த போது ஒரு பிரளயமே நடந்து விட்டது. பெந்தெகொஸ்தே ஊழியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அக்காவை அவர்களோடு சண்டை போட்டு மீட்டு எங்கள் வீட்டுக்கு கொண்டு வர மேலும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகி விட்டது. பின் கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டியபோது கான்சர் மார்பகத்திலிருந்து நுரையீரலுக்கும் பிற உடல் பகுதிகளுக்கும் பரவி விட்டதாகச் சொன்னார்கள். மூன்றாம் நிலையின் இறுதியில் சாவின் எல்லைக் கோட்டுக்கு மிக அருகில் அக்கா இருந்தாள்.
இத்தனைக்கு இடையிலும் அவளது விசுவாசம் குறையவே இல்லை. இறுதி நாளிலாவது ஆண்டவரின் கிருபை தனக்கு எப்படியும் கிட்டும் என்று உளமாற நம்பினாள். இந்த உலகத்திற்கு தனது வல்லமையை நிரூபிக்க தனது உடலையே ஆண்டவர் களமாகத் தெரிவு செய்துள்ளார் என்று புலம்பினாள். எங்கள் வீட்டிலிருந்த கடந்த மூன்று மாதங்களில் அவள் உறங்கிப் பார்த்ததேயில்லை – விழித்திருந்தும் பார்த்ததில்லை. எப்போதும் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் ஏதோவொரு நிலையிலேயே இருந்தாள். ”ஆண்டவரே கிருபை தாரும்” என்று அவளது வாய் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தது.
மாமாவோ பித்துப் பிடித்த நிலையில் இருந்தார். ஆண்டவரின் இரட்சிப்பு கண் முன்னே தோற்றுப் போகும் என்று அவர் நம்பவில்லை. நள்ளிரவின் அமைதியில் திடீரென்று பெருங்குரலெடுத்து பாடத் துவங்குவார். அவர் உடலில் இருந்த நீரெல்லாம் கண்கள் வழியே வழிந்து தீர்த்தது.
கடந்து போன இந்த மூன்று மாதங்களின் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக கழிந்தது. அக்காவுக்கு நோயின் தீவிரம் கூடிக் கொண்டே போனது. அக்காவின் பிள்ளையே அவளைக் கண்டு அருகே செல்ல அஞ்சினாள். கான்சரின் வலி அதிகரித்த சமயங்களில் அவளது உடல் அவளின் கட்டுப்பாடின்றி எழுந்து நடக்கும். இலக்கின்றி தனது அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தாள்.. பொருட்களின் மேல் தட்டுத் தடுமாறி விழுந்தாள். உடல் கூட்டை விட்டு வெளியேற உயிர் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் அதன் பயங்கரங்களையும் எங்கள் குடும்பம் மிக அருகிலிருந்து கண்டது.
முன்கோபியான தாத்தா தனது பேத்தியை பெந்தெகொஸ்தே ஊழியர்கள் தான் கொன்று விட்டார்கள் என்று கருதினார். வீட்டுக்குள் யாராவது பெந்தெகொஸ்தே ஊழியர் வந்தால் வெட்டிப் போடுவதற்காக கருக்கறிவாளை தலை மாட்டுக்குக் கீழ் வைத்துக் கொண்டே காத்திருந்தார்.
”அய்யா ஆண்டவரே.. தாயும் தகப்பனும் இல்லாத இந்த பிள்ளையள பொன்னு போல பொத்தி வளத்தனே.. இப்படி பாதில தூக்கிட்டு போகப் பாக்கீரே உமக்கு மனசாச்சி இல்லையா…” தாத்தா தனிப்பட்ட முறையில் ஏசப்பாவை ஒருமையில் பேசத் துவங்கி ஒருகட்டத்தில் வீட்டிலிருந்த பைபிள்கள் பாமாலை புத்தகங்கள் என்று அனைத்தையும் கிணற்றில் தூக்கி வீசுமளவிற்கு போனார்.
Pentecostal 4அக்காவின் ஜெபங்களோ, மாமாவின் அரற்றல்களோ, தாத்தாவின் மிரட்டல்களோ எதுவும் வேலைக்காகவில்லை. கடைசி வரை ஆண்டவர் தனது கிருபையின் ஆட்சியை நிரூபிக்காமலே மௌனம் சாதித்து விட்டார். அக்கா செத்துப் போனாள். இறப்பதற்கு கொஞ்சம் முன்பாக என்னை அழைத்தாள்.
“என்னிய தூக்கி அந்த படுக்கைல கிடத்துலெ.. வின்செண்டு இனிமே நான் பிழைச்சிகிட மாட்டேன் போல தெரியுது. பாப்பாவை நீ தான் நல்லா பாத்துக்கிடனும். செய்வியாடே?”
பதில் சொல்லும் முன் பட்டென்று உயிர் போனது. உடலைத் தூக்கி படுக்கையில் கிடத்தி விட்டு மற்றவர்களுக்குச் சொல்ல கீழிறங்கினேன். கண்களில் கொஞ்சமும் நீர் வழியவில்லை.
“ஏ.. வின்செண்டு.. என்னலே யோசிக்கா?” யாரோ தோளை உலுக்கி நினைவை நிகழ்காலத்திற்கு மீட்டனர்.
“நீயும் வந்து கடேசியா மண்ணள்ளிப் போடுலே” யாரோ கையைப் பிடித்து எழுப்பினார்கள்.
“அவிய அப்பா கல்லறை மேலயே கால் போட்டு உக்காந்திருக்கான் பாரேன்” யாரோ குற்றம் சாட்டினார்கள்.
எழுந்து சென்றேன். கல்லறைக் குழிக்குள் பெட்டி இறக்கப்பட்டு ஏற்கனவே சில பிடி மண் போடப்பட்டிருந்தது. எனது இடது கையில் வேதாகமம் இருந்தது. கீழே குனிந்து வலது கையில் ஒரு பிடி மண்ணை அள்ளி வேதாகமத்தோடு சேர்த்து குழியில் போட்டேன். திரும்பிப் பாராமல் நடந்தேன்.
“அவம் அக்காகாரி பைபிளையும் சேர்த்துப் போடுதாம்” யாரோ யூகித்தார்கள்.
அது அக்காவுடையதல்ல.. எனது வாசிப்பிற்காக வைத்திருந்த வேத புத்தகம் தான்.
ஏனோ சந்தோஷமாய் உணர்ந்தேன்.
– மாடசாமி
(புனைகதை வடிவில் உண்மைச் சம்பவம்)  வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக