புதன், 30 மார்ச், 2016

பி.ஆர்.பழனியை (நரபலி) விடுவித்த நீதிபதியின் செயல் நேர்மையான அதிகாரிகளை அச்சுறுத்தும்... நீதிபதி மீது நடவடிக்கை சிபிஎம் வேண்டுகோள்

நேர்மையான அதிகாரிகளை இது அச்சுறுத்தும், குற்றவாளிகளை ஊக்குவிக்கும் என்று சுட்டிக்காட்டுகிறோம். ஏற்கனவே இம்மாதம் 24ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றம், கிரானைட் கொள்ளை வழக்குகளில் தம் உத்தரவை மீறி செயல்படுவதாக, இந்த நடுவரின் பேரில் குற்றம்சாட்டி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இவர் மீது தொடரப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், அனைத்தையும் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் அளித்தும்,  அதை மீறி, பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலேயே மிகச் சிறிய வழக்கை மட்டும் எடுத்து நடத்தி, மற்றவற்றை நிலுவையில் தன் நீதிமன்றத்திலேயே மேலூர் நீதித்துறை நடுவர் வைத்துக்கொண்டிருக்கிறார். அந்த வழக்கில் தான் தற்போதைய உத்தரவை வழங்கியிருக்கிறார்.
இந்த தீர்ப்பை ஏற்க முடியாது. ஏற்கனவே 2015 ஆகஸ்டில், சட்டவிரோத கிரானைட் வெட்டி எடுக்கும் பிரச்சனையுடன் தொடர்புடையதாக, மேலவளவு காவல்துறையினர், பழனிச்சாமி உள்ளிட்ட 9 பேர் மீது போட்டிருந்த மோசடி மற்றும் போலி கையெழுத்து வழக்கில், முதல் கட்ட ஆதாரம் கூட இல்லை என்று கூறி அவர்கள் அத்தனை பேரையும் விடுவித்தவர் இதே நடுவர் தான் என்பதை கவனிக்க வேண்டும். வருவாய்த்துறை பதிவேடுகளில் போதுமான ஆதாரம் இருந்தும் நடுவர் அதைக் கணக்கில் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி, இந்த உத்தரவை எதிர்த்து, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், அப்போதே மேல் முறையீட்டுக்குப் போயிருக்கிறார். 

கிரானைட் மோசடி குறித்த விவரங்கள் வெளிவந்த போது, ஸ்தல காவல்துறை மிக லேசான வழக்குகளையே பதிவு செய்தது. எனவே அவர்கள் மீது நம்பிக்கையற்ற நிலை உருவானது. அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் அவர்கள், மே 2012ல் அரசுக்கு அனுப்பிய ரகசிய அறிக்கையில் ரூ.16,000 கோடி அளவுக்கு கொள்ளை நடந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அடுத்த நாளே அவர் மதுரை ஆட்சியர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார். அடுத்து ஆட்சியராக வந்த திரு. அன்சுல் மிஸ்ரா, ஆகஸ்ட் 2012ல் 18 சிறப்பு குழுக்களை அமைத்து ஆய்வு செய்து, 94 குவாரிகளை மூடி, சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்கினார். 2013ல் அவர் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் ரூ.10,000 கோடி அளவுக்கு சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் ஊழல் நடந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக தமிழ்நாடு கனிமவள நிறுவன (டாமின்) உயர்மட்ட நிர்வாகமும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் வந்தது. 

உதாரணமாக அரசு டாமினுக்கு அளிக்கும் குத்தகையை, அரசின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, தனியாருக்கு உப குத்தகை அல்லது குத்தகை மாற்றம் செய்யக் கூடாது என்ற விதி இருக்கிறது. ஆனால் டாமின், அத்தகைய அனுமதி பெறாமலேயே, தன்னிடம் போதுமான உபகரணங்கள் இல்லை என்று காரணம் சொல்லி, தனியாருக்கு உப குத்தகைக்கு விட்டிருக்கிறது. குத்தகைக்கு விடும் இடங்களில் கிடைக்கக் கூடிய கிரானைட் அளவை மிகவும் குறைத்துக் காட்டி, இதன் மீது ஒரு சிறு தொகையை மட்டும் கட்டணமாகப் பெற்று வந்திருக்கிறது. பி.ஆர்.பி. போன்ற நிறுவனம், பெரும் அளவு கிரானைட்டை சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்து, அதை விற்று பிரம்மாண்ட லாபம் சம்பாதிப்பதற்கான சூழலை டாமின் நிறுவனத்தின் நடவடிக்கை உருவாக்கியிருக்கிறது. இது போன்ற விசாரணையை அன்சுல் மிஸ்ரா முழுமையாக முடிக்கும் முன்னரே, மதுரை ஆட்சியர் பொறுப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். டாமின் அதிகாரிகள் ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுத்ததுடன், அரசு விஷயத்தை முடித்துக் கொண்டது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அரசின் மேல் மட்டம் வரை கிரானைட் ஊழல் ஊடுருவியிருக்கிறது என்ற சந்தேகத்தை எழுப்பியது. முன்னதாக பொறுப்பில் இருந்த 2 ஆட்சியர்கள் ஊழல் தடுப்புத் துறையால் விசாரிக்கப்பட்டதையும் தமிழகம் பார்த்தது.

பிறகு உயர்நீதிமன்றம் தலையிட்டே, 2014 டிசம்பரில் திரு. உ. சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் விசாரணைக்கு உத்தரவிட்டது. அவரது விசாரணைக்கு அதிமுக அரசு எவ்வித ஒத்துழைப்பையும் அளிக்காததுடன், ஓர் இரவு சுடுகாட்டில் படுத்து காவல் காக்க வேண்டிய நிலையையும் அவருக்கு உருவாக்கியது. இது அரசின் மீதான ஐயப்பாடுகளை உறுதிப்படுத்தியது. சகாயம் அவர்கள் தனது இறுதி அறிக்கையை 2015 நவம்பர் 23 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கிரானைட் முறைகேட்டால் மாநில அரசுக்கு ரூ. 1.06 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சகாயம் அறிக்கை கூறுகிறது. உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதுவரை மாநில அரசு விளக்கம் அளிக்கவில்லை.
மத்திய புலனாய்வு பிரிவு விசாரிக்க வேண்டும் என்பது தான் சகாயம் அவர்களின் பரிந்துரையாகவும் இருந்துள்ளது. ஆனால் 20 ஆண்டுகளாக கொள்ளை நடந்திருப்பதாக அறிக்கை கூறிய பின்னணியில், திமுகவும் இதன் மீது கருத்து கூறவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இக்கொள்ளை குறித்து தொடர்ச்சியாக தலையீடுகளை செய்து வந்திருக்கிறது, இயக்கம் நடத்தியிருக்கிறது. தமிழக அரசின் மீதே கடும் சந்தேகம் எழுந்துள்ள சூழலில், மாநில காவல்துறை இதை விசாரிப்பது உண்மையை வெளிக்கொண்டு வர உதவாது என்பதால், மத்திய புலனாய்வு பிரிவு விசாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. 

உயர்மட்ட ஊழல் என்பது, இயற்கை வளங்கள் தனியாரின் வேட்டைக்காடாக மாற அனுமதிக்கப்படுவதுடனும், அதற்காக விதிமுறைகளை வளைப்பதோடும் தொடர்புடையது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்திருக்கிறது. 1990களில் நவீன தாராளமய கொள்கைகள் அமலுக்கு வந்து, அனைத்துத்துறைகளும் தனியாருக்குத் திறந்து விடப்பட்டது தான், உயர்மட்ட ஊழலுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம், தாது மணல், கிரானைட், பாக்ஸைட் ஊழல்கள் அனைத்தும் அதற்குப் பின் நடந்தேறியவையே. வளங்களைக் கொள்ளை அடித்து, பெருமளவு ஏற்றுமதி செய்து பெரும் லாபம் பார்ப்பதற்காக, ஒப்பந்தம் கிடைக்க எவ்வளவு வேண்டுமானாலும் லஞ்சம் கொடுக்க தனியார் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. கோடிக்கணக்கில் லஞ்சப் பணம் பெற்று, சலுகை சார் முதலாளித்துவம் என்ற புதிய நிகழ்வு உருவாவதும் இதனால் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நவீன தாராளமயக் கொள்கைகளைத் தான் மத்தியில் காங்கிரஸ், பிஜேபியும் மாநிலத்தில் அதிமுக, திமுகவும் பின்பற்றி வருகின்றன. 

இச்சூழலில் தான் மக்கள் நலக் கூட்டணி கனிம வள வியாபாரம், அரசு நிர்வாகத்தின் மூலம் மக்களின் மேற்பார்வையுடன் நேர்மையான முறையில் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருக்கிறது. இதுகாறும் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவர்கள், துணைபோன அரசியல் தலைவர்கள், அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இதன்மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

தமிழகத்தின் இயற்கை வளத்தைத் தனியார் கொள்ளை அடிக்க அனுமதித்ததுடன், ஏராளமான விவரங்கள் வெளிவந்த பிறகும் ஒரு சிறு நடவடிக்கை கூட எடுக்க மறுத்துக் கொண்டிருக்கிற மாநில அரசின் அணுகுமுறை, தமிழக நலனுக்குத் துரோகம் இழைப்பதற்கு ஒப்பாகும். தமிழக மக்களின் நலனுக்கு எதிரானதாகும். எனவே மத்திய புலனாய்வு பிரிவு இவ்வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நீதிபதி மகேந்திரபூபதியின் இந்த உத்தரவு தடை செய்யப்பட வேண்டும் என்றும், இனி அவர் இவ்வழக்குகளை எடுத்து நடத்த அனுமதிக்கக் கூடாது, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், உ. சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் விசாரணை அறிக்கையின் மீது அரசு நடவடிக்கை எடுக்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியைக் கேட்டுக் கொள்கிறோம் என்று இராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.nakkheeran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக