புதன், 30 மார்ச், 2016

காங்கிரஸூக்கு 25, தாமாகாவுக்கு 25? திமுக முடிவு....காங்கிரஸ் அதிர்ச்சி... மீண்டும் அதிமுக அழைத்தால்...வாசன் ரெடி

0a1wதமாகாவை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக மேற்கொண்டு வரும் முயற்சிகள் காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால் தமாகாவுக்கு 25 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும் ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 13-ம் தேதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தது. அதைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி (மமக), எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளும் இணைந்தன. இதில் முஸ்லிம் லீக், மமகவுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் திமுக வேகம் காட்டி வருகிறது. வாசன் ஒரு வெறும் டப்பா......இவரின் வண்டவாளம் தெரிந்துதான் ஜெயலலிதா இவரை கழற்றி விடுகிறார்  
இந்நிலையில், கடந்த 25-ம் தேதி திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், எடுத்த எடுப்பிலேயே காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் 85 தொகுதிகளை கேட்டுள்ளார். இதனால் கருணாநிதி, ஸ்டாலின் மட்டுமல்ல, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆசாத் 85 கேட்க, காங்கிரஸில் ஏற்பட்ட பிளவு, கோஷ்டிப் பூசல் ஆகியவற்றை காரணம் காட்டிய கருணாநிதி, 15 தொகுதிகளில் இருந்து தொடங்கியுள்ளார். ஆசாத் 60-க்கு இறங்கிவர, 25-க்குமேல் வாய்ப்பு இல்லை என திமுக தெரிவித்துள்ளது. இதனால் சோனியா, ராகுலுடன் பேசிவிட்டு மீண்டும் சந்திப்பதாக கூறிவிட்டு திரும்பியுள்ளார் ஆசாத்.
இதுகுறித்து இளங்கோவனுக்கு நெருக்கமான தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தமிழக கள நிலவரம் தெரியாமல் தங்கபாலுவின் பேச்சை கேட்டுக்கொண்டு 85 தொகுதிகளை ஆசாத் கேட்டுள்ளார். இளங்கோவனின் கை ஓங்கிவிடக் கூடாது என்பதற்காக எதிரணியினர் திமுக கூட்டணியை சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்பதயே இது காட்டுகிறது’’ என்றார்.
இந்நிலையில், தமாகாவை கூட்டணிக்குள் கொண்டுவர திமுக தீவிர முயற்சியில் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸுடன் தமாகாவும் வந்தால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெரும் வெற்றி பெறலாம் என திமுகவின் தென் மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தமாகா மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கட்சி தொடங்கியது முதல் அதிமுகவுக்கு ஆதரவாகவே வாசன் செயல்பட்டு வருகிறார். ஆனால், தமாகாவுக்கு 16 தொகுதிகள் வரை மட்டுமே தர முடியும் என அதிமுக கூறுகிறது. 25 தொகுதிகளாவது இருந்தால்தான் கட்சியில் உள்ள முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்களை சமாளிக்க முடியும் என வாசன் நினைக்கிறார். அதிமுக விடாப்பிடியாக இருந்தால் திமுக அல்லது மக்கள் நலக் கூட்டணிக்கு செல்வதைத் தவிர வேறுவழியில்லை. திமுக தரப்பில் வாசன் குடும்பத்தினரிடம் கடந்த ஒரு வாரமாகவே பேசி வருகின்றனர். ஆரம்பத்தில் பிடி கொடுக்காத வாசன், இப்போது அது குறித்து ஆலோசிக்க தொடங்கியுள்ளார்’’ என்றார்.
தமாகா வரும் பட்சத்தில் அக்கட்சிக்கு 25 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும் ஒதுக்க திமுக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் 25-க்கு மேல் வாய்ப்பு இல்லை என கருணாநிதி கறாராக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், ஜெயலலிதா தன்னை கைவிடமாட்டார் என வாசன் நம்புவதாக அவருக்கு நெருக்கமான தமாகா நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததுபோல, பாஜகவுடன் பேசிக்கொண்டே சரத்குமார் அதிமுக கூட்டணியில் சேர்ந்தது போல, திமுக கூட்டணியிலும் அதிரடி திருப்பங்கள் நடக்கலாம் என அக்கட்சியினர் காத்திருக்கின்றனர்.
Courtesy: tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக