புதன், 30 மார்ச், 2016

சீட் வேண்டாம் கட்சிப் பதவியே போதும்...மாட்டிகிட்ட ர ராக்கள் அலறல்

விகடன்.com :அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் என்பது ஏறக்குறைய முழுமைக்கு வந்து விட்டது. நாளையோ (31.03.2016)  அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ வேட்பாளர் பட்டியலும், கூடவே தேர்தல் அறிக்கையும் சேர்ந்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத  நேர்காணலாக இந்த நேர்காணல் அமைந்ததற்கு, கட்சித் தலைமையின் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மந்திரிகளே காரணம் என்று கூறப்படுகிறது.  ''ஒரு மந்திரிக்கு தலா மூன்று மாவட்டங்களில் ஆதரவும், செல்வாக்கும் என்ற நிலை தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. செல்வாக்கு பெற்ற அவர்களை தவிர்த்து விட்டு ஒதுக்கப்பட்டவர்களாய் மூலையில் முடங்கிக் கிடந்தவர்களை''  வரச் சொல்லுங்கள் என்றுதான் இந்த முறை நேர்காணலுக்கு சொல்லி விட்டிருக்கிறார், கட்சியின் பொ.செ.வான ஜெயலலிதா.


' தொகுதிக்கு  ஐந்துபேர் , நாளொன்றுக்கு  ஐந்து தொகுதி என்ற கணக்கில் இதுவரையில்  ஆயிரத்து ஐநூறு பேருக்கு குறையாமல்  அம்மா  நேர்காணல் மூலம் பார்த்து விட்டார். அதிலிருந்து சிலரை  அவர் தேர்வு செய்யலாம். அதேபோல் நேர்காணலின்போது  அம்மாவை  அருகிலிருந்து பார்ப்பதற்கே  ஒவ்வொரு தேர்தலின் போதும் பணத்தைக் கட்டியவர்கள்தான் அதிகம். இம்முறை அப்படி அனைவரையும்  அம்மா அழைக்காதது ஏமாற்றமே' என்கின்றனர், கார்டன் வாசலில் காத்துக் கிடக்கும் கட்சியினர்.
கைகளில் பளபளா தங்க வளையல்களோ,  நூறு கிராம் எடையைக் கடந்த கம்மல்களோ, அடிவயிற்றைக்  தொட்டுக் கொண்டிருக்கும்  டாலர்  அடையாளங்களோ  இல்லாத முகங்கள்தான் இம்முறை   கார்டனில் நடந்த நேர்காணலுக்கு அதிகமாய் சென்று திரும்பிய முகங்கள்.

மந்திரிகள், மாவட்ட மற்றும் மாநிலப் பொறுப்பில் இருப்பவர்கள், இம்முறை  கார்டனில்  இருந்து வந்த அழைப்புக்காக சென்றதில் அதிகபட்சம் தங்களை நல்லவர்கள் என்று நிரூபிப்பதற்கான சந்திப்பாகவே இருந்தது. சபாநாயகர்   பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட டி.ஜெயகுமாருக்கு மாற்றாக,  அவருடைய மகன் ஜெயவர்த்தனுக்கு எம்.பி. தேர்தலில், ஜெயலலிதா வாய்ப்பளித்தார். இம்முறை அதே போன்ற திருப்பமாக பல மந்திரிகளின் பிள்ளைகளுக்குத்தான்  வாய்ப்பு கொடுக்கப்படும் என்கிறார்கள்.  செல்வாக்கான மந்திரிகளின் தொகுதிகளில் செல்லாக்காசாக இருந்தவர்களுக்கு வாய்ப்பும் அதிகபட்சமாக இருக்கலாம் என்கிறார்கள்.

செங்கோட்டையன், சி.வி.சண்முகம், செம்மலை போன்றவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் கார்டனுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தலைக் கவனித்து வெற்றியைப் பெற்றுத்தரும் பொறுப்பாளர்களாக அவர்களை நியமிக்கும் முடிவு ஏற்பட்டுள்ளதாம்.
பிரச்னைக்குரியவர்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்கு ஆளாகி நின்ற மந்திரிகளிடம் ஆளுக்கு 5 முதல் 10 தொகுதிகளை ஒப்படைத்து, அந்த தொகுதிகளுக்கான 'அத்தனையையும்' ஏற்று வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதே அவர்களுக்கான அசைன்மெண்ட். பிரச்னையில் சிக்கியிருக்கும் மந்திரிகளுக்கு  மீண்டும் தேர்தலில் போட்டியிட ' சீட்' கொடுத்தாலும், அவர்களால் பத்து தொகுதிகளையும்  'தாராளமாக' கவனித்து தங்கள் தொகுதியையும் காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்பதும் கேள்விக்குறி.

இவைகள் ஒரு பக்கம் இருக்க, ' கட்டுகள் குறித்த ' விசாரிப்புகள் இன்னும் முழுமையாவதாகத் தெரியவில்லை என்கிறார்கள். சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள இரண்டு மாவட்டங்களில்தான் அதிகபட்சமாக சீட்டுக்கு நோட்டு செலவழித்து ஏமாந்தவர்களின் பட்டியல் இருப்பதாக கார்டனுக்கு தகவல் பல ரூபங்களில் போயிருக்கிறது. 'சீட்'  கேட்டு பல ரூட்களில் ஆளைப் பிடித்து பணத்தை இறைத்தவர்கள் இப்போது,  'தாங்கள் செலவழித்த பணம் குறித்த எந்த தகவலும் வெளியில் வராமல் இருந்தாலே போதுமானது, எங்களுக்கு சீட்டே வேண்டாம்... அதைவிட கொடுத்த பணமும் வேண்டாம்'  என்று அலற ஆரம்பித்திருப்பதும் அதே ரூபத்தில் கார்டனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.

சென்னையில் இரண்டு மண்டலக் குழுத்தலைவர்கள்,  காஞ்சிபுரத்தில் இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று அணித்தலைவர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர்,  திருவள்ளூரில்  இதே லிஸ்ட்டில் ஆறு பேர் போக, மகளிருக்கும் அவர்களுடைய உறவு முறைகள் மூலமாக  'கட்டுகள்' வீணான இடத்தில்  போய்ச் சேர்ந்திருக்கிறதாம்.

கட்டுகளை வாங்கிய பிரமுகர்கள், " அதைவிட கொஞ்சம் அதிகமாகவே திருப்பிக் கொடுத்துடறேன்... நான் வாங்கிய பணத்தை  ' அந்த' ரூட்டில் போய்த்தான் கொடுத்தேன் என்று மட்டும் காட்டிக் கொடுத்து விடாதீர்கள்" என்று அலறுகின்றனராம்.
கட்டுகளை மூட்டைக் கட்டிக் கொடுத்தவர்களோ,  "இன்னும் கூடுதலாக வேண்டுமென்றால் கூட எந்த ரூட்டிலாவது  கட்டுகளை ஏற்பாடு செய்து கொடுத்து விடுகிறோம்.  நாங்கள்  உங்களிடம் கொடுத்த கதை மட்டும் வெளியே தெரியவேண்டாம். 

இருக்கிற உள்ளாட்சிப் பொறுப்போடும், கட்சிப் பொறுப்போடும் கவுரவமாக இருந்து விட்டுப் போய்விடுகிறோம். கட்சிப் பொறுப்பில் கை வைத்தால், அத்தோடு நாங்கள் மொத்தமாக காலி ஆகி விடுவோம். எங்களை  விட்டுடங்கப்பா" என்று “கோடி'களில் கதறுகின்றனராம்.

ஏப்ரல் முதல் வாரத்தில் மாற்றம், முன்னேற்றம்... ஏற்றம், இறக்கம்... உள்ளே, வெளியே... என்று பல காட்சிகள் அரங்கேறுவதைக் காணலாம்.

- ந.பா.சேதுராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக