செவ்வாய், 8 மார்ச், 2016

மதுராந்தகம் சமணர் கல்வெட்டுக்கள் கல்குவாரிகளால் அழிந்து கொண்டிருக்கிறது

மதுராந்தகம்;'பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்பு மிக்க, நாகமலையை தொல்லியல் துறையினர் காப்பாற்ற வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஓணம்பாக்கம் பகுதியில் உள்ளது, நாகமலை. கருப்பங்குன்று, பஞ்ச பாண்டவர் மலை, ஓணம்பாக்கம் மலை எனவும் இந்த மலை அழைக்கப்படுகிறது.
இந்த மலையில், கி.பி., 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சமண முனிவர்களின் கற்படுக்கைகள், குறியீடுகள், மருந்து குழிகள், இயற்கையாய் அமைந்த குகை பள்ளிகள், சிறிய குடவறைகள், கல்வெட்டு செய்திகள் போன்ற சமணத் தடயங்கள் காணப்படுகின்றன. பார்சுவநாதர் மற்றும் இரண்டு தீர்த்தங்கரரின் சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றன. சமண முனிவர்களின் வழிபாட்டிற்காக, இந்தச் சிற்பங்களை, தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த சித்தாந்த படாரர் என்பவர் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது.


இத்தகைய சிறப்பு மற்றும் தொன்மை வாய்ந்த மலைக் கோவில், அங்குள்ள, 'குவாரி'களால் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பாறைகளைத் தகர்க்க வைக்கப்படும், சக்தி வாய்ந்த வெடிகளால், பழமை வாய்ந்த வரலாற்று சின்னம் சிதிலம்அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நாகமலையை தொல்லியல் துறை, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அழியாமல் பாதுகாக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக