செவ்வாய், 8 மார்ச், 2016

vikatan: விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியுடனும் பேசுகிறார்.....டிமாண்ட்/ ரேட்டு கூட்டும் முயற்சி.....

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தமிழகத்தில் எந்தக் கட்சிக் கூட்டணியில் இடம்பெறும் என்று அரசியல் கட்சிகள் மத்தியில் பட்டிமன்றம் நடந்துவரும் நிலையில்,திமுக,அதிமுகவிற்கு மாற்று என்று கூறி தேர்தல் களத்தில் இறங்கியுள்ள மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த்தை இணைக்க இறுதிகட்ட முயற்சிகள் பலமாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அதே போல தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் ம.ந.கூட்டணியில் இணைய விருப்பம் கொண்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. 

தமிழக சட்டமன்றத் தேர்தல்  வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.முன்னாள் ஆளும் கட்சியான திமுக,தனது நீண்ட நாள் நண்பரான காங்கிரசுடன் கரம் கோத்து மீண்டும் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது.தற்போதைய ஆளும் கட்சியான அஇஅதிமுக 'மிஷன் 234' என்று விளம்பரம் செய்து ஏறக்குறைய தனித்தே களம் காணும் சூழலைக் கொண்டுவந்துள்ளது. இதில் திமுக வேட்பாளர் நேர்காணலை முடித்துவிட்டது.அதிமுக விறுவிறுப்பாக நடத்திவருகிறது. இன்னும் சில நாட்களில் அதிமுகவின் நேர்காணல் நிறைவுறும்.

கடந்த ஒரு வருடமாக தேர்தல் பிரசார பயணத்தை நடத்திவரும் பாமகவும் தனித்துப் போட்டி என்ற நிலையில்  இயங்கி வருகிறது.மத்தியில் ஆளும் கட்சியான பாஜக,மாநிலத்தில் தனது தலைமையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் போல  கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்று பல்வேறு கட்ட முயற்சிகள் எடுத்து வந்த போதிலும் வெற்றி பெறமுடியவில்லை என்பதால் பாஜக தரப்பு சோர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் பாஜக பெரிதும் எதிர்பார்க்கும் விஜயகாந்த்தின் தேமுதிக இன்னமும் பிடிகொடுக்கவில்லை என்பதை, பாஜக அவ்வளவாக ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.
அதனால்தான் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன்,'கூட்டணி அமையாவிட்டால் 234 தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிட தயார்' என்கிறார் என்று கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.அவர் கூறுவதில் உண்மை இல்லாமலும் இல்லை.பாஜக கூட்டணியில் இருப்பதாகச் சொல்லப்பட்ட பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியும் 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் இறங்குகிறது.ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி மட்டும் இப்போதைக்கு பாஜகவோடு இருக்கிறது.இந்தச் சூழலில் பாஜக தனித்து தான் இருக்கிறது என்றே தோன்றுகிறது.    

இந்நிலையில்,விஜயகாந்தின் பார்வை,தன்னை நீண்டகாலமாக அழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் நலக் கூட்டணி பக்கம் திரும்பியிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  முத்தரசன்,விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கடந்த 3 மாதகாலமாக தேமுதிகவை தங்கள் அணியில் இணைந்துகொள்ள பலமுறை அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு விஜயகாந்த் நேரடியாக பதிலளிக்கவில்லை.ஆனாலும் அவர்களுடன் இணைய விருப்பம் இல்லை என்றும் கூறவில்லை.

அதே நேரத்தில்,பாஜக தலைவர்களும் அவரை அடிக்கடி சந்தித்துப் பேசினார்கள்.அதற்கும் விஜயகாந்த் பிடிகொடுக்கவில்லை.இந்நிலையில்,திமுக கூட்டணியில் 59 இடங்கள் தேமுதிகவிற்கு உறுதி செயப்பட்டுவிட்டன என்று செய்திகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருந்தன.அதற்கு,தேமுதிக கடுமையாக  மறுப்புத் தெரிவித்து எந்தப்பக்கம் செல்லும் என்ற எதிர்பார்ப்பை நீட்டித்தது. இதனையடுத்து வேறு வழியில்லாமல் தனித்தே களம் இறங்குவார் விஜயகாந்த் என்றும்,மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து அதிமுக,திமுக  எதிர்ப்பு அரசியலைக் கையிலெடுப்பார் என்றும் தகவல்கள் கசிகின்றன. இதில் எது உண்மையான நிலைப்பாடு என்று இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

தேர்தல் நெருங்கியுள்ள நிலையில்,மக்கள் நலக் கூட்டணி மூன்று கட்ட பிரச்சாரத்தினை தமிழகத்தில் நிறைவு செய்து திமுக,அதிமுகவிற்கு 'பலம்' காட்டி வரும் நிலையில் தேமுதிவும் இணைந்தால் வெற்றி நிச்சயம் என்று மக்கள் நலக் கூட்டணியினர் பலமாக நம்புகிறார்கள்.அதனால் தேமுதிகவின் தேவை என்ன என்பதை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதில்,போரூர் கல்லூரி பிரமுகர் ஒருவரும்,பிரபல சிமென்ட் ஆலை அதிபர் ஒருவரும் ஈடுபட்டுள்ளதாகவும் ம.ந.கூ. வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அவர்களின் பேச்சுக்கு கேப்டன் இறங்கி வருவார் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் ம.ந.கூ. திடமாக, நம்புவதாக தெரிகிறது.
ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் மாநிலம் முழுக்க,மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தும்,கட்சியின் உறுப்பினர் சேர்க்கையைப் பலப்படுத்தியும் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது.
திமுகவுடன் இளங்கோவன் காங்கிரஸ் இருப்பதால் அந்தப்பக்கம் தமாகா திரும்பிகூட பார்க்காது.அதே போல அதிமுகவுடன் மென்மையான போக்கை ஜி.கே.வாசன் கைக்கொள்கிறார் என்று கூறப்பட்டாலும்,அவர் பெரிதும் மதிக்கும் காங்கிரஸ் தலைவர் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குக் காரணமானவர்கள் என்று கூறி 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி,பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை தமிழக அரசு விடுவிக்க முயற்சி எடுத்துவருவதை தமாகா எதிர்பார்க்கவில்லை என்பதால் அதிமுக பக்கமும் சேரமுடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மேலும் பாஜகவோடு கொள்கை ரீதியாகவே  தமாகா முரண்பட்டு இருப்பதால் பாஜக கூட்டணி சாத்தியமே இல்லை. அதனால் அடுத்த ஒரே வாய்ப்பு மக்கள் நலக் கூட்டணி என்பதால்,அதன் முக்கிய தலைவர்களுடன் திரைமறைவு பேச்சுவார்த்தை  நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த இரண்டு கட்சிகளும் தங்களுடன் இணைந்தால் அதிமுக மற்றும் திமுகவை உறுதியாகத் தோற்கடிக்கமுடியும் என்று மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். ஆக வரும் சில நாட்களில் கூட்டணிகள் சரியாக அடையாளம் காணப்பட்டு, அமைந்துவிடும் என்பதால் தேர்தல் களத்தில் சூடு பறக்கும்  என்று எதிர்பார்க்கலாம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக