வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

வாசுகியின் கொலைக்கூட்டாளிகள்...எஸ்.வி.எஸ். கல்லூரி

தாளாளர் வாசுகி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவத்திற்கான இயக்குநகரம், மாவட்ட நிர்வாகம், போலீசு, ஓட்டுக் கட்சிகள், தலித் பிழைப்புவாதிகள் மற்றும் உயர்நீதி மன்றம் வரையிலான ஒரு பெரிய வலைப்பின்னல்தான் இந்த மாணவிகளின் உயிரைப் பறித்திருக்கிறது எஸ்.வி.எஸ். கல்லூரி நிர்வாகத்தின் அடாவடித்தனங்களால் படிப்பை இடைநிறுத்திய மாணவர் கண்ணதாசன் இந்தக் கல்லூரியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, நகரமைப்புத் துறை, வருவாய்த் துறை ஆகியவற்றிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விவரங்களைப் பெற்று, அந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கல்லூரி குறித்து மைய, மாநில அரசுகளைச் சேர்ந்த 45 துறைகளுக்குப் புகார் மனு அனுப்பி நடவடிக்கை எடுக்கக் கோரினார். மேலும், தன்னைப் போலவே பாதிக்கப்பட்டு படிப்பை இடைநிறுத்திய மாணவர்களை அமைப்பாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். தமிழரசியின் தந்தை மணிவண்ணனும் பல்கலைக்கழக பதிவாளர் தொடங்கி விழுப்புரம் போலீசு கண்காணிப்பாளர் முடிய பல துறைகளுக்கும் கல்லூரி குறித்து புகார் கொடுத்திருந்தார்.
இவையெல்லாம் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கவே, அம்மாணவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆர்ப்பாட்டம், தீக்குளிக்கும் போராட்டம், விஷம் அருந்தும் போராட்டங்களை அடுத்தடுத்து நடத்தினர். குறிப்பாக, ஆறு மாணவர்கள் உண்மையிலேயே விஷம் அருந்தி, விழுப்பும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தனர்.
கல்லூரிக்கு சீல்
கல்லூரிக்கு சீல் – திடீர் யோக்கியனாக மாறிய தமிழக அரசு
எஸ்.வி.எஸ். கல்லூரியில் நடைபெறும் கட்டணக் கொள்ளை, விதிமீறல்கள் உள்ளிட்ட அனைத்து முறைகேடுகளையும் தொகுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு 140 பக்க புகார் மனுவைப் படிப்பை இடைநிறுத்திய மாணவர்கள் அனுப்பியிருந்தனர். குறிப்பாக, அப்புகாரில் நஞ்சை நிலத்தைப் புஞ்சை நிலமாக மாற்றுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற வேண்டும். அப்படிபட்ட அனுமதியைப் பெறாமலேயே கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார், கண்ணதாசன். இப்புகாருக்கு, “உன்னை யார் கல்லூரியைப் பார்க்காம சேரச் சொன்னா?” எனத் திமிராகவும், தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தும் பதில் அளித்திருக்கிறார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்.
விஷம் அருந்தி உயிர் பிழைத்த ஐயப்பன், கோமளா உள்ளிட்ட மாணவர்களைப் பல மணி நேரம் காக்க வைத்துப் பார்த்த மாவட்ட ஆட்சியர் லெட்சுமி, “சீரியலையும் சினிமாவையும் பார்த்து டயலாக் விடுறீங்களா? சீன் கிரியேட் பண்றீங்களா? நடிக்கிறீங்களா? ஸ்கோப்பே இல்லாத படிப்பை ஏன் படிக்கிறாய்?” எனக் கொஞ்சம்கூட ஈரமின்றி மாணவர்களை அவமானப்படுத்தி, கலெக்டர் அலுவலகத்திலிருந்து வெளியேற்றியிருக்கிறார். அம்மாணவர்கள் நடத்திய தீக்குளிப்பு போராட்டத்தின் பின் அக்கல்லூரியை ஆய்வு செய்த வட்டாட்சியர், “அக்கல்லூரி சிறை போல நடத்தப்படுவதாக”க் குறிப்பிட்டு அறிக்கை அளித்திருப்பதைக்கூட மாவட்ட நிர்வாகம் பொருட்டாக எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது.
விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் சம்பத்
ஸ்.வி.எஸ்.கல்லூரியின் அட்டூழியங்களைக் கண்டும் காணாமல் நடந்துகொண்ட விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் சம்பத்…
வட்டாட்சியரின் அறிக்கையை மாணவர்களின் கண்ணில் காட்டக்கூட மறுத்துவிட்டார் உதவி ஆட்சியர் ஜெயசீலன். கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் (ஆர்.டி.ஓ.), “ஒழுங்கா படிக்கப் போ, இல்லைன்னா ஜெயில்ல தள்ளிருவேன்” எனப் புகார் அளித்த ஐயப்பனை மிரட்டித் துரத்தியடித்தார். மாணவர்கள் விஷம் அருந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின், தலைமைக் காவலராகப் பணியாற்றும் மணிவண்ணன் அக்கல்லூரியின் முறைகேடுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என விழுப்புரம் நகர போலீசு ஆய்வாளரிடம் கேட்டதற்கு, அந்த போலீசு அதிகாரி, தனது துறையில் வேலைசெய்யும் சக ஊழியர் என்றுகூடப் பார்க்காமல், மணிவண்ணனைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி யிருக்கிறார்.
* * *
விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தைக் காட்டிலும் மருத்துவப் பல்கலைக்கழக அதிகாரிகளும், கல்லூரியை ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள இந்திய மருத்துவத்திற்கான இயக்குநரகத்தின் அதிகாரிகளும்தான் வாசுகிக்கு மிகவும் விசுவாசமாக நடந்துகொண்டுள்ளனர். கல்லூரியில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பல்கலைக்கழகத்திற்கு நேரடியாகச் சென்று ஐயப்பன் புகார் மனுவைக் கொடுத்த மறுநிமிடமே, அது குறித்த விவரங்கள் கல்லூரி தாளாளர் வாசுகிக்குத் தெரியப்படுத்தப்பட, அவர் ஐயப்பனைத் தொலைபேசி வழியாக மிரட்டியிருக்கிறார். கல்லூரி குறித்து புகார் அளித்த மணிவண்ணனிடம், “இனியும் இது போன்று புகார் அளித்தால், உங்கள் மகள் தமிழரசி அக்கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்” எனப் பதிவாளர் ஜான்சி சார்லஸே மிரட்டி அனுப்பியிருக்கிறார். பல்கலைக்கழகத்திற்கு எதிராக உள்ள ஹோட்டலில் வைத்துதான் அதிகாரிகளுக்குப் பட்டுப் புடவையும் பணமும் இலஞ்சமாக வாசுகி அளிப்பார் எனத் தொலைக்காட்சி விவாதத்தில் பதிவு செய்கிறார் வாணிஸ்ரீ என்ற மாணவி.
தற்போதைய  ஆட்சியர் லெட்சுமி...
…தற்போதைய ஆட்சியர் லெட்சுமி
கல்லூரியின் அடிப்படைக் கட்டுமானங்கள் குறித்து ஆண்டுதோறும் இந்திய மருத்துவத்திற்கான இயக்குநரகத்தால் நடத்தப்பட்ட ஆய்வு மிகப்பெரும் மோசடி, கேலிக்கூத்து என்கிறார்கள் மாணவர்கள். “ஆய்வு நடைபெறவுள்ள தேதிக்குப் பத்து நாட்களுக்கு முன்புதான், கல்லூரி மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது போல போலியான கேஸ் ஷீட்டுகள் தயாரிக்கப்படும்; மாணவர்களின் உறவினர்கள், தெரிந்தவர்கள் பெயர், முகவரியெல்லாம் இந்த மோசடிக்குப் பயன்படுத்தப்படும்” என்கிறார், ஐயப்பன். ஆய்வின்பொழுது மாணவர்களின் பெற்றோர்கள்தான் நோயாளிகளாகப் படுக்க வைக்கப்பட்டிருப்பார்கள்; மேல்தளத்தில் நோயாளியாக நடித்த மாணவரே, கீழ்தளத்தில் வெள்ளை கோட்டை மாட்டிக்கொண்டு டாக்டராக வலம் வருவார். ஆய்வுக்கு வரும் அதிகாரி மணவாளனுக்கு இந்த மோசடியெல்லாம் தெரிந்திருந்தும், அவர் நடிக்கும் எங்களைப் பார்த்து, “டாக்டர், டாக்டர்” எனக் கூசாமல் அழைத்து திகைக்க வைத்துவிடுவார் என்கிறார், அம்மாணவர்.
2014-இல் நடைபெற்ற மோசடியான ஆய்வு குறித்து மாணவர்கள் மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் புகார் அளித்தனர். திருடன் கையில் பெட்டிச் சாவியைக் கொடுத்த கதையாக, இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு பல்கலைக்கழகப் பதிவாளர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழு, “2013-14 ஆம் ஆண்டுக்கான ஆய்வு ஏற்கெனவே நடைபெற்று, நீங்கள் கூறிய குறைகளை நிவர்த்தி செய்துவிட்டோம்” என நிர்வாகம் அளித்த பதிலை அப்படியே ஏற்றுக்கொண்டு, மாணவர்களின் புகாரைத் தள்ளுபடி செய்துவிட்டது. 2015-இல் மாணவர்கள் மீண்டும் புகார் அளிக்க, அதற்கு, “உங்கள் புகார் குறித்து ஏற்கெனவே விசாரணை நடத்தி முடித்துவிட்டதாக”ப் பதில் அளித்திருக்கிறது, பல்கலைக்கழகம்.
* * *
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சாந்தாராம்
எஸ்.வி.எஸ். கல்லூரியில் நடந்த அத்துணை முறைகேடுகளுக்கும் அடிக்கொள்ளியாக இருந்த எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சாந்தாராம்…
இக்கல்லூரியில் நடைபெறும் முறைகேடுகள், விதிமீறல்கள் குறித்து 2015 ஜூனில் மாணவர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், “அக்கல்லூரி குறித்து முறையாக விசாரித்துதான் அனுமதி அளித்ததாக” பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பல்கலைக்கழகம், 2015-16 ஆம் ஆண்டுக்கான ஆய்வை இனிதான் நடத்தவுள்ளதாகத் தெரிவித்தது. இதன் அடிப்படையில் 2015 ஜூனில் பல்கலைக்கழகத்தால் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மருத்துவர்கள் குழு, “அக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை” என அறிக்கை அளித்திருக்கிறது. ஆனால், இந்த அறிக்கையை அப்பொழுது பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த சாந்தாராமின் சம்மதத்தோடு முடக்கிப் போட்ட பதிவாளர் ஜான்சி சார்லஸ், அப்பல்கலைக்கழகத்தில் தட்டச்சராகப் பணியாற்றும் பட்டுசெல்வத்தைக் கொண்டு மீண்டும் ஆய்வு நடத்தி, “எஸ்.வி.எஸ். கல்லூரி நன்றாக இருப்பதாக” அறிக்கை தயார் செய்து அளித்திருக்கிறார் (நக்கீரன் பிப்.01-03). இதனை அப்படியே ஏற்றுக்கொண்ட உயர்நீதி மன்றம், “அனைத்தும் முறையாக இருப்பதாக”த் தெரிவித்து, மாணவர்களின் வழக்கை முடித்து வைத்தது.
இதன் பிறகும் மாணவர்கள் துவண்டு விடாமல் சாகத் துணியுமளவிற்குப் போராடத் துணிந்ததால், டிசம்பர் இறுதியில் பல்கலைக்கழகம் மீண்டும் ஆய்வுக் குழுவை அனுப்பி வைத்தது. அக்குழுவின் அறிக்கை மூன்று மாணவிகள் இறந்தபிறகும்கூட தயாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதற்குள்ளாகவே 2015 நவம்பரில் நடந்த கலந்தாய்வு மூலம் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரியிலும், ஹோமியோபதி கல்லூரியிலும் 60 மாணவர்கள் சேருவதற்கு பல்கலைக்கழகம் அனுமதித்திருக்கிறது. உண்மை இவ்வாறிருக்க, மூன்று மாணவிகள் இறந்துபோனதையடுத்துத் தங்களை யோக்கியவானாகக் காட்டிக் கொள்ள, “எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு நாங்கள் அனுமதி அளிக்கவில்லை” என பித்தலாட்டத்தனமான அறிக்கையை அளித்திருக்கிறார், துணைவேந்தர் கீதாலெட்சுமி.
எஸ்.வி.எஸ். கல்லூரி வளாகத்தில் எலக்ட்ரோபதி, இயற்கை மற்றும் யோகா, ஹோமியோபதி என மூன்று மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வந்திருக்கின்றன. இவற்றுள் எலக்ட்ரோபதி மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள் சேர விரும்பவில்லை என்பதால், அக்கல்லூரியை நிர்வாகமே மூடிவிட்டது. இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரிக்கு 2008-ஆம் ஆண்டே தமிழக அரசு தடையில்லாச் சான்றிதழை வழங்கிவிட்டது. தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட அனுமதி அ.தி.மு.க. ஆட்சியிலும் ரத்து செய்யப்படவில்லை. மருத்துவப் பல்கலைக்கழகம் இந்தக் கல்வியாண்டு வரை அக்கல்லூரிக்கு வழங்கப்பட்டிருந்த இணைப்புச் சான்றிதழைப் புதுப்பித்து வந்திருக்கிறது.
தற்போதைய துணைவேந்தர் கீதாலெட்சுமி.
… தற்போதைய துணைவேந்தர் கீதாலெட்சுமி.
2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹோமியோபதி கல்லூரிக்குத் தமிழக அரசு தடையில்லாச் சான்றிதழ் வழங்கிவிட்டாலும், மைய அரசின் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் “ஆயுஷ்” அக்கல்லூரியை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ஆனாலும், சென்னை உயர்நீதி மன்றம் 2013-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் ஆயுஷ் அங்கீகாரம் அளிக்க மறுத்ததைத் தள்ளுபடி செய்தது. நவம்பர் 2014-இல் மீண்டும் எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு ஆதரவாக, அக்கல்லூரியை ஒற்றைச் சாளர கலந்தாய்வில் சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைத்திருக்கிறது. எஸ்.வி.எஸ். ஹோமியோபதி கல்லூரியை மீண்டும் ஆய்வு செய்யுமாறு ஆயுஷுக்கு உத்தரவிட்டு, ஜூலை 2015-இல் மீண்டும் கல்லூரிக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததோடு, அக்கல்லூரி பல்கலைக்கழகத் தேர்வுகளில் கலந்து கொள்ளுவதற்கும் அனுமதி அளித்தது.
* * *
கடந்த எட்டு ஆண்டுகளாக எஸ்.வி.எஸ். மருத்துவக் கல்லூரி இயங்குவதற்கும், அந்நிர்வாகம் மாணவர்களைக் கொள்ளையடிப்பதற்கும் தமிழக அரசும், பல்கலைக்கழகமும், நீதிமன்றமும்தான் அடிக்கொள்ளியாக இருந்துள்ளன. ஆனால், கல்லூரி சம்மந்தப்பட்டவர்கள் மட்டும் கைது செய்யப்பட்டு, கூட்டுக் களவாணியாகச் செயல்பட்ட அதிகார வர்க்கம் தப்ப வைக்கப்பட்டிருக்கிறது. இறந்த மாணவிகளுக்கு ஒரு இலட்ச ரூபாய் நட்ட ஈட்டை வாய்க்கரிசி போல போட்டுவிட்டு, இயற்கை மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை அரசு கல்லூரிக்கு மாற்றிவிட்டு, தன்னை யோக்கிய சிகாமணி போலக் காட்டிக் கொள்ள முயலுகிறார், ஜெயா. இந்த அயோக்கியத்தனத்தை அனுமதிப்பது மூன்று மாணவிகளின் தியாகத்திற்கும், தன்னலம் பாராது போராடும் மாணவர்களுக்கும் இழைக்கப்பட்டுள்ள துரோகமாகும்.
அதிகார வர்க்கத்தில் புரையோடிப் போயிருக்கும் இலஞ்ச-லாவண்யத்தை மட்டும் எஸ்.வி.எஸ். கல்லூரி விவகாரம் அம்பலப்படுத்தி காட்டவில்லை. தானே வகுத்துக் கொண்ட சட்ட திட்டங்களைக்கூட அமல்படுத்த மறுக்கும் அதிகார வர்க்கத்தின் பொறுப்பற்ற தன்மையை, எத்துணை கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்கினாலும், அவை அனைத்தும் தனியாரின் கொள்ளைக்கும் அத்துமீறலுக்கும் சாதகமாக நடந்துகொள்ளும் அரசின் தோல்வியையும் எடுத்துக் காட்டிவிட்டது. இந்த அரசின் ஒவ்வொரு அங்கமும் அழுகிப் போய், ஆளத் தகுதியற்று இருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.
“இது எஸ்.வி.எஸ். கல்லூரியோடு முடிந்துபோகும் விவகாரமல்ல; தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் இது போல் நடக்கும் அடாவடித்தனங்கள் விரைவில் அம்பலத்துக்கு வரும்” என எச்சரிக்கும் முன்னாள் துணை வேந்தர் கலாநிதியும், கல்வியாளர் நெடுஞ்செழியனும், “அரசு நிறுவனங்கள் அனைத்தும் தோற்றுப்போய் விட்டதன் வெளிப்பாடு இது” எனச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிராகப் போராடும் மாணவர்களும் பெற்றோர்களும் இந்த அமைப்புக்குள் நீதி கேட்டுப் போராடுவதோடு மட்டும் தம்மை, தமது போராட்டங்களைச் சுருக்கிக் கொண்டுவிட முடியாது. தோற்றுப் போய்விட்ட இந்த அரசுக் கட்டமைவை வீழ்த்துவதை நோக்கியும் அப்போராட்டங்களை விரித்துச் செல்ல வேண்டும்.
– ரஹீம்  vinavu.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக