ஞாயிறு, 6 டிசம்பர், 2015

சென்னையை விட்டு வெளியூர்வாசிகள் பலரும்.. உசுரோட ஊர் போய் சேர்ந்தா போதும்

சென்னை: நூறாண்டு காணாத கனமழை சென்னையின் இயல்பை மட்டும் தலைகீழாக புரட்டிப் போடவில்லை... வாழுகிற மக்களின் வாழ்க்கையை கவிழ்த்து போட்டுவிட்டது... இந்த பெரும் வெள்ளத்தில் பலியாடுகளாக உடைமைகளை இழந்து 'அகதிகளாக' அலைந்து கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்வாசிகள்தான்.. தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பெருமளவு படையெடுக்கத் தொடங்கியது என்பது கடந்த கால் நூற்றாண்டு காலத்தில்தான்... ஊருக்கு ஒருத்தர் இரண்டு பேர் சென்னையில் இருந்த காலமெல்லாம் மலையேறிப் போய் ஊரில் இருக்கிற அத்தனை பசங்களும் சென்னையில்தான்டா என்கிற நிலைமை உருவாகிவிட்டது...25 ஆண்டுகளுக்கு முன்னர் பல தென்மாவட்ட மக்கள் சென்னைக்கு சென்று வருவதே மலைப்பாக இருந்தது...
இன்று சென்னையில் படிப்பது கவுரவம்; சென்னையில் வேலை பார்ப்பது கவுரவம்; சென்னையில வேலை பார்த்துகிட்டு ஒரு இடம் வாங்கிப் போடலைன்னா என்ன சம்பாதிக்கிற? என்ற கேள்வி வரக்கூடாது என்பதற்காக கடனை வாங்கியாவது வீடு கட்டுவது; பொண்ணு பார்க்கப் போகிற இடத்தில் மாப்பிள்ளை சென்னையில் 15 லட்சத்துக்கு இடம் வாங்கிப் போட்டிருக்கிறாரு என தற்பெருமை அடிப்பது .... இப்படி "சென்னை டாம்பீகம்" பெரும்பாலான வெளியூர்வாசிகளின் முகவரியாகிப் போய்விட்டது... 
Outsiders to left from the இப்படி சென்னையின் பெயரால் வந்து குடியேறியவர்களில் பெரும்பாலானோருக்கு தங்களுக்கு 'தோதான' தொகையில் வாடகைக்கோ ஒத்திக்கோ விலைக்கோ கிடைக்கக் கூடிய இடங்களாக இருந்தவை அனைத்தும் புறநகர்கள்... ஒன்று கொரட்டூர், அம்பத்தூர், மதுரவாயல், மணலி.. இல்லையா மேடவாக்கம், பெரும்பாக்கம், சேலையூர், பள்ளிக்கரணை அதுவும் இல்லையா இருக்கவே இருக்கு முடிச்சூர் உள்ளிட்ட மேற்கு தாம்பரம்.. இவை அனைத்தும் நமக்கான 'மரண' வாயில்களாக ஒருநாள் இருக்கப் போகிறது என்ற உண்மை தெரியாமலே புதைகுழிகளுக்குள் காலை வைத்தார்கள் இந்த வெளியூரைச் சேர்ந்த பாவப்பட்ட மக்கள்... 
 "நட்டு நடு" சென்னையின் "சென்ட்டரில்" ஒய்யாரமாக குடியேற இவர்கள் என்ன பரம்பரை கோடீஸ்வரன் வீட்டு பிள்ளைகளா? ஊரில் இருந்த நிலம் புலனை விற்று படிக்க வைத்ததில் வளர்ந்தவர்கள்... பார்க்கிற வேலையை நம்பி கடனை வாங்கி இடம், வீடு வாங்கிப் போடுகிறவர்களுக்கு மயிலாப்பூரும், தியாகராய நகரும் நுங்கம்பாக்கமும் அண்ணாசாலையும் அவ்வளவு எளிதில் திறக்குமா என்ன? வேறுவழியில்லாமல் பிழைக்க வந்த இடத்திலேயே செட்டில் ஆகிவிடலாம் என்ற ஜஸ்ட் ஆசைப்பட்டதற்காகத்தான் பெரும் பெரும் ஏரிகளை சட்டவிரோதமாக வளைத்து சட்டப்பூர்வமாக பட்டாபோட்டு வீட்டுமனையாக்கிய மரண வியாபாரிகளிடம் சிக்கிப் போனார்கள்... அவ்வப்போது வந்து போகும் மழை வெள்ளம்... அதென்ன ஒருநாள் இரண்டு நாள்தானே.. என அதையும் கூட பாழாய்போன மனசை கல்லாக்கிக் கொண்டு பழகித் தொலைத்துவிட்டனர் இந்த மக்கள்... 
 ஒருகாலமும் ஒரு கனமும் இப்படி ஒரு அகதி வாழ்க்கையில் அல்லோல்படுவோமென நினைத்திருக்கவே மாட்டார்கள்... ஆசை ஆசையாய் கடனைப் போட்டு நகை நட்டுகளை அடகு வைத்து கட்டிய வீடு இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளத்தில் மூழ்குதலைப் பார்க்கும் போது வெம்பி வெடிக்காமல் என்ன செய்யத்தான் முடியும்? உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு குழந்தை குட்டிகளோடு மொட்டை மாடியில் குளிரில் மழையில் உண்ணாமல் உறங்காமல், பெரும்பாடு பட்டு வாங்கிய பொருட்களை வெள்ளம் கண்முன்னே வாரிச் சுருட்டிக் கொண்டு போக, இந்த லோன் முடியவே இன்னும் 5 வருஷம் இருக்கே.. வாங்குன சம்பளத்துல பெரும்பகுதி ஈ.எம்.ஐ. கட்டத்தானே சரியாகும்... இதுல அந்த பொருளை எப்படி வாங்குறது? வெள்ளம் கொண்டு போன பிள்ளைகளோட புத்தகங்களையெல்லாம் வாங்கனுமே என்கிற ரணம் ரணமான கவலைகள்... படகு வராதா? ஹெலிகாப்டர் வராதா? வழிகிடைக்காதா? யாரு அடைக்கலம் தருவாங்க? பேசாம சொந்த ஊருக்குப் போய்ட்டா என்ன? என ரத்த கண்ணீரை சிந்த வைத்திருக்கிறது வரலாறு காணாத வெள்ளம்... இதோ ரயில்கள் ரத்து; பேருந்துகள் இல்லை என்றபோதும் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் கோயம்பேட்டிலும் தாம்பரத்திலும் எழும்பூரிலும் சென்ட்ரலிலும் இத்தனை ஆயிரம் பேர் எத்தனை நாளானாலும் ஆகட்டுமென தவியாய் தவித்திருக்கிறார்கள்...
 ஏன்? பொழச்சதும் போதும்டா... மண்ணை பொன்னா சம்பாதிச்சதும்போடா... ஆளைவிட்டா சரி... உசுரோட ஊர் போய் சேர்ந்தா போதும் ... ஆமா சொந்த ஊருக்கு கிளம்பித்தான் ஆக வேண்டும் என அத்தனை கவுரவங்களையும் டாம்பீகங்களையும் அடையாற்று வெள்ளத்திலும் கூவத்தின் வெள்ளத்திலும் மழை வெள்ளத்திலும் கொட்டிவிட்டு வந்தேறியாக வந்த நாளை நினைத்து சொந்த மண்ணுக்கு கிளம்புவதற்காகத்தான்... இவர்களுக்கான ரயில்களும் பேருந்துகளும் என்றுதான் வருமென எவருக்கும் தெரியாது ஆம் இனியும் சில நாட்களுக்கு 'அதிக' 'கனமழை' நீடிக்குமாம்!

Read more at://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக