ஞாயிறு, 6 டிசம்பர், 2015

நிவாரணப் பொருட்களை பெற மாநகராட்சி தயார் இல்லை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை, பாதுகாப்பாக வைத்து வினியோகம் செய்ய, நேரு உள்விளையாட்டு அரங்கில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.<இங்கு ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர்கள், மாநகராட்சி கல்வி அலுவலர் ஆகியோர் ஒருங்கிணைப்பில், 100 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அண்டை மாநில அரசுகள் சார்பிலும், மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் அனுப்பி வைக்கப்படுபவை மட்டுமே, நேரு உள்விளையாட்டு அரங்கில் பெறப்படுகின்றன. தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் வழங்கும் நிவாரணப் பொருட்களை, மாநகராட்சி பெற தயாராக இல்லை. அவ்வாறு வரும் பொருட்களை, தாங்களாகவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்க வேண்டும் என்றுஅதிகாரிகள் கூறுகின்றனர்.இதனால் உதவி செய்ய முன்வந்தாலும், பாதிக்கப்பட்ட பகுதி எது, நிவாரணப் பொருட்களை யாரிடம் வழங்குவது என தெரியாமல், தவிக்கும் நிலைஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'தனியார் அமைப்புகள் வழங்கும் பொருட்கள் தரமானதாக இருக்காது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், மாவட்ட நிர்வாகங்கள், சில குறிப்பிட்ட தன்னார்வ நிறுவனங்களிடம் தரமான பொருட்களை மட்டுமே கேட்டு பெற்று, நாங்கள் வினியோகம் செய்கிறோம்' என்றார்.

சென்னை, கோவை, மதுரை, சேலம் என பல நகரங்களில் இருந்து, 'எங்களிடம், 1,000 பேருக்கான ஆடை, உணவு, மருந்து உள்ளது. எப்படி வினியோகிப்பது என தெரியவில்லை' என, தெரிவித்தபடி உள்ளனர்; அவர்களையும் ஒருங்கிணைக்க ஆளில்லை.வட சென்னைக்கு நேற்று வரை உதவிகள் போய்ச் சேரவில்லை. 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில், உதவி கேட்டு பாதிக்கப்பட்டோரும், அவர்களது சொந்தங்களும் கதறுகின்றனர். தேவைகள் அதிகமாக இருக்கும் போது, உதவி செய்ய முன்வருபவர்களை மாநகராட்சி அலட்சியப்படுத்துவது வேதனையான விஷயம். உடனடியாக, தன்னார்வலர்கள், தன்னார்வ நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு துறையினர் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் ஒரு கட்டுப்பாட்டு அறையை மாநகராட்சி உருவாக்கலாம் அல்லது வெவ்வேறு மையங்களை உருவாக்கி, அங்கு தன்னார்வ தொண்டர்களை இணைக்கலாம். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக