ஞாயிறு, 6 டிசம்பர், 2015

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு

சென்னை மற்றும் புறநகரில் பெய்த கன மழையால் ஏரிகள் நிரம்பி உபரி தண்ணீர் அனைத்தும் திறந்து விடப்பட்டதால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
தற்போது ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் ஒவ்வொரு ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 16–ந்தேதியன்று 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு 30–ந்தேதி 18 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டனர். 1–ந்தேதி 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வீடுகள் மூழ்கி பெருத்த சேதம் ஏற்பட்டது.
தாழ்வான பகுதிகளான வழுதலம்பேடு, குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர் மலை, அனகாபுத்தூர், ராமாபுரம், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை, நந்தனம், கோட்டூர்புரம் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.

போரூர் ஏரி உபரி தண்ணீரும் சேர்ந்து வந்ததால் பரணிபுத்தூர், மதனந்தபுரம், மவுலிவாக்கம், கொளப்பாக்கம், மணப்பாக்கம் பகுதிகளும் மூழ்கின.
இப்போது ஏரிக்கு வரும் தண்ணீர் குறைந்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று 3500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 3000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போது மழை பெய்து வருவதால், ஏரிக்கு 2600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி ஏரி உயரம் 35அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்துவைக்கலாம். கன மழை காரணமாக ஏரி முழுவதுமாக நிரம்பியதால் கடந்த 6 நாட்களுக்கு முன் ஏரியிலிருந்து வினாடிக்கு 34484 கனஅடி தண்ணீர் குசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் குசஸ்தலை ஆற்றுகரை ஓரங்களில் உள்ள ஆட்ரம்பாக்கம். ஒதப்பை, மோவூர் உட்பட 82 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் 3 நாட்களுக்கு முன் வினாடிக்கு 10500 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்ததால் ஏரியிலிருந்து திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் மழை குறைந்ததால் ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் குறைந்தது. இன்று காலை வினாடிக்கு 7151 கனஅடிவிதம்தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஏரியிலிருந்து வினாடிக்கு 7150 கனஅடிவிதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
புழல் ஏரி நிரம்பி உள்ள நிலையில் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து 1550 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோல் சோழவரம் ஏரியும் நிரம்பி ஏரிக்கு 100 கன அடி தண்ணீர் வருவதால் ஏரியில் இருந்து 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. maalamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக