திங்கள், 7 டிசம்பர், 2015

வெள்ளத்தில் சிக்கிய 200 பேரை ஆளில்லா விமானம் உதவியால் மீட்டனர் ‘வாட்ஸ்–அப்’ தகவல்களை

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு போலீசார் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி உள்ளனர். அதன்மூலம் சுமார் 50 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் மீட்கப்பட்டனர். ‘வாட்ஸ்–அப்’ தகவல்களை வைத்தும் காணாமல் போனவர்களை கண்டுபிடித்தனர்.
போலீஸ் நடவடிக்கை சென்னை நகரில் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கிய மக்கள் ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்புப்படை, போலீஸ் படை, கடலோர காவல் படை மற்றும் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
சுமார் 10 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கினார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டு விட்டதாகவும், தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. சென்னை நகர போலீஸ் சார்பில் 12 ஆயிரம் போலீசார் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

கட்டுப்பாட்டு அறை மூலம்... போலீஸ் தரப்பில் நடந்த மீட்பு நடவடிக்கைகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்றிரவு கூறியதாவது:–
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 044–23452314 என்ற தனி தொலைபேசி எண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனி போலீஸ் படை 24 மணி நேரமும் இந்த தொலைபேசி மூலம் வந்த தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுதவிர உளவுப்பிரிவில் ஒரு தனிக்கட்டுப்பாட்டு அறை செயல்பட்டது. தொலைபேசி எண் ‘100’ என்ற எண்ணிற்கு வரும் தகவல்களும் தனித்தனியே சேகரிக்கப்பட்டன.
கடந்த 2–ந் தேதியில் இருந்து மேற்கண்ட தொலைபேசிகள் மூலம் சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட அழைப்புகள் வந்தன. இதன் அடிப்படையில் சுமார் 500 படகுகளில் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை சுமார் 20 ஆயிரம் பேரை சென்னை நகர போலீசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
ஆளில்லா விமானம் மீட்பு பணிக்கு ஆளில்லா விமானமும் பயன்படுத்தப்பட்டது. கடந்த 3–ந் தேதியில் இருந்து இன்று வரை ஆளில்லா விமானம் உதவியுடன் சுமார் 50 குடும்பங்களை சேர்ந்த 200 பேரை மீட்டுள்ளோம். வெள்ளத்தில் அதிகம் பாதித்த பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், நந்தம்பாக்கம், ராணுவ குடியிருப்பு, பள்ளிக்கரணை, பம்மல் போன்ற பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் மீட்பு பணி நடந்தது.
ஆளில்லா விமானத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா மூலம் எந்தெந்த பகுதிகளில் ஆட்கள் சிக்கியுள்ளனர்? என்பதை கட்டுப்பாட்டு அறையில் உள்ள டி.வி. மானிட்டரில் பார்த்து அந்தந்த பகுதிகளுக்கு வயர்லெஸ் மூலம் தகவல் சொல்லி போலீசாரை படகில் அனுப்பி பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். இந்த பணியில் மட்டும் 30 தனிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டோம்.
‘வாட்ஸ்–அப்’ தகவல் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க ‘வாட்ஸ்–அப்’ பயன்படுத்தப்பட்டது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் கூட சென்னை வெள்ளத்தில் காணாமல் போய் மீட்கப்பட்டனர். கண்டுபிடிக்கப்பட்டவர்களை படம் பிடித்து ‘வாட்ஸ்–அப்’ மூலம் புகார் கொடுத்தவர்களுக்கு அனுப்பி வைத்தோம்.
சென்னைக்கு வந்த இத்தாலிய நாட்டை சேர்ந்த கணவன்–மனைவி இருவர் வெள்ளத்தில் காணமால் போய்விட்டனர். இத்தாலி தூதரகம் அவர்கள் இருவரும் ஒரு ஆசிரமத்துக்கு வந்ததாகவும், அங்கிருந்து அவர்கள் எங்கே போனார்கள்? என்று தெரியவில்லை என்றும் தகவல் கொடுத்தனர். அந்த தம்பதி, சென்னை நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பதை கண்டுபிடித்து, அவர்களை படம்பிடித்து இத்தாலி தூதரகத்துக்கு தகவல் அனுப்பினோம். இதுபோல, வங்காளதேச நாட்டில் இருந்து அனிஸ்பூர் ரகுமான் என்பவர் தனது மகளுடன் சென்னைக்கு வந்துள்ளார். மியாட் மருத்துவமனையில் அவர் மூட்டு ஆபரேஷனுக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை என்ன? என்பது பற்றி வங்காளதேச நாட்டில் இருந்து தகவல் கேட்டனர். அனிஸ்பூர் ரகுமான் தனது மகளோடு மியாட் மருத்துவமனையில் பத்திரமாக இருப்பதை கண்டறிந்து அவரை படம் பிடித்து ‘வாட்ஸ்–அப்’ மூலம் தகவல் அனுப்பினோம்.
பாராட்டு இதுபோல வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து வந்த தகவல்களின் அடிப்படையில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து ‘வாட்ஸ்–அப்’ மூலம் தகவல் அனுப்பினோம். 3 நாட்கள் செல்போன்கள் செயல்படாத வேளையில் ‘வாட்ஸ்–அப்’ மூலம் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தகவல் அனுப்பிய நடவடிக்கைக்கு நல்ல பாராட்டு கிடைத்துள்ளது. உறவினர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்ற தகவல்களை ‘வாட்ஸ்–அப்’ மூலம் அனுப்பி வைத்தோம்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். dailythanthi.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக