திங்கள், 7 டிசம்பர், 2015

சென்னை மழை – மக்கள் இயக்கம் சமுக ஊடகங்களின் தேவை ..சாருநிவேதா

இதுவரை சமூக வலைத்தளங்கள் மீதான என்னுடைய அவநம்பிக்கை அகன்று விட்டது.  சமூக வலைத்தளங்கள் மூலம்தான் இந்தப் பேரிடரிலிருந்து மக்களைக் காப்பாற்றும் செய்திகளும் செயல்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்டன.   ஆர்ஜே பாலாஜி, நடிகர் சித்தார்த் போன்றவர்கள் ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  பொதுவாக எந்தக் காரியத்திலும் தலையிட்டுக் கொள்ளாத பிராமணர்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வாசலில் அண்டாவை வைத்து ஆயிரம் பேருக்கு சமையல் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மீனவர்கள் படகில் போய் மக்களை ஏற்றிக் கொண்டு வருகிறார்கள்.  அரசியல்வாதிகள் ஒளிந்து கொண்டு விட்டாலும் அரசு ஊழியர்கள் தங்கள் உயிரையும் மதிக்காமல் மக்கள் சேவை செய்து வருகிறார்கள்.  பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.  போலீஸை எப்போதும் மக்கள் திட்டுவார்கள்.  ஆனால் இப்போது போலீஸ் ராப்பகலாக வீட்டுக்குப் போகாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  பேரிடர் வந்துவிட்ட நேரத்தில் மக்களே ஒரு இயக்கமாகத் திரண்டு ஒருவருகொருவர் உதவி செய்து கொண்டதை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.  இதுவரை மக்கள் கூட்டமாகச் சேரும் போது 2000, 3000 என்று மனிதர்கள் கொல்லப்பட்டதுதான் இந்திய வரலாறு.  தில்லி திர்லோக்புரியையும் குஜராத்தையும் நம்மால் மறந்து விட முடியுமா?  ஆனால் சென்னையில் இந்தப் பிரளயத்தில் மற்ற மனிதனின் துயரத்தைத் தன்னுடைய துயரமாக உணர்ந்தான் மனிதன்.  ஆர்ஜே பாலாஜி, நடிகர் சித்தார்த் போன்றவர்கள் இந்த மக்கள் இயக்கத்தின் முன்வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.  இவர்களைப் போன்றவர்கள்தான் அரசியலில் இருக்க வேண்டும்.  அரசியலுக்கு வர வேண்டும்.  வெள்ளத்தில் தத்தளிப்பவர்களைப் பார்த்து மாடமாளிகையில் இருந்து பரிகாசம் செய்து கொண்டிருக்கும் சிலருக்கு மத்தியில் இந்த இருவரின் பணி நம்முடைய வணக்கத்திற்குரியது.
ஆர்ஜே பாலாஜியின் ஒரு வேண்டுகோள் இந்த முகநூலில் இருக்கிறது.  பகிர்ந்து கொண்டால் நலம்.
www.facebook.com/rjbalajiofficial/videos/932766633472134/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக