வெள்ளி, 27 நவம்பர், 2015

பொள்ளாச்சியில் கந்துவட்டி..குடும்பம் தற்கொலை முயற்சி...தாய் மகன் பலி...தந்தை மருமகள் உயிருக்கு....

பொள்ளாச்சியில் கந்துவட்டி கொடுமையால் புத்தகக்கடை உரிமையாளர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். விஷம் குடித்த அவரது மனைவி, மகன் இருவரும் பலியானார்கள். மாமனார், மருமகள் ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- புத்தக கடை உரிமையாளர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் பால கிருஷ்ணமூர்த்தி (வயது 63). இவர் கடை வீதியில் ஒரு புத்தக கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் சின்னாம்பாளையம் ஊராட்சி தலைவர் பானுமதி ரவி என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். பாலகிருஷ்ணமூர்த்தியின் மனைவி உஷாராணி (53), மகன் பாலவிஜயபிரகாஷ் (35), அவரது மனைவி நித்யா (30) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.


நித்யா பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பாலகிருஷ்ணமூர்த்தியின் மகள் சித்ராவுக்கு திருமணம் ஆகி கோவையில் கணவருடன் வசித்து வருகிறார்.

கந்துவட்டி

இந்த நிலையில் பாலகிருஷ்ணமூர்த்தி தொழிலை விரிவுப்படுத்த ரூ.80 லட்சம் வரை கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. புத்தக கடையில் போதிய அளவு வருமானம் இல்லாததால், அவரால் கடனையும், அதற்குரிய வட்டியையும் திரும்ப செலுத்த முடியவில்லை.

கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர். இதற்கிடையில் வஞ்சியாபுரம் பிரிவை சேர்ந்த மோகன்குமார் (42) என்பவர், பாலகிருஷ்ணமூர்த்திக்கு கடனாக வழங்கிய ரூ.5 லட்சத்தை கேட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது மோகன்குமார் தகாத வார்த்தைகளால் பேசி, பணத்தை கொடுக்கவில்லை என்றால், மீண்டும் தகராறு செய்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

குடும்பத்துடன் விஷம் குடித்தனர்

இதை வீட்டுக்குள் இருந்தபடி பாலகிருஷ்ணமூர்த்தியின் மகன் பாலவிஜயபிரகாஷ் கேட்டு உள்ளார். இதனால் மனமுடைந்த பாலவிஜயபிரகாஷ், கடனால் தனது குடும்பத்தின் மானமே போய்விட்டது. இதற்கு மேல் உயிருடன் இருக்கக்கூடாது. அனைவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று குடும்பத்தினரிடம் பேசி முடிவு செய்ததாக தெரிகிறது.

பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு தென்னை மரத்திற்கு வைக்க கூடிய பூச்சிக் கொல்லி மாத்திரையை தண்ணீரில் கரைத்து குடும்பத்துடன் குடித்துள்ளனர். பாலகிருஷ்ணமூர்த்தி, விஷத்தை குடிக்கும் போது, பதற்றத்தில் முகத்தில் மருந்தை சிந்தி உள்ளார். பின்னர் அவர், தனது குடும்பம் கண்முன்னே பிணமாகபோவதை எண்ணி துடிதுடித்தார். இதன் காரணமாக அவரையும் மீறி வீட்டிற்கு வெளியே ஓடி வந்து கதறி அழுதார். சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே உஷாராணி, பாலவிஜயபிரகாஷ், மருமகள் நித்யா ஆகியோர் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

தாய்- மகன் பலி

இதை தொடர்ந்து ஆம்புலன்சை வரவழைத்து 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பாலவிஜயபிரகாஷ் பரிதாபமாக இறந்தார். இதில் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உஷாராணியும் இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நித்யா கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலகிருஷ்ணமூர்த்தி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

3 பேர் கைது

இதுகுறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வஞ்சியாபுரம் பிரிவை சேர்ந்த மோகன்குமார், பொள்ளாச்சியை சேர்ந்த கணேஷ்பாபு (40), பெருமாள் (41), ஆட்டோ டிரைவர் நசீர்பாய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.அவர்கள் மீது கந்துவட்டிக்கு பணம் கொடுத்தல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மோகன்குமார், கணேஷ்பாபு, பெருமாள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக