செவ்வாய், 24 நவம்பர், 2015

தங்கபாலுவின் பச்சை பொய்: ராகுல் காந்தியை கொல்லுமாறு கோவன் பாடினாரா ?


பத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – மூன்றாம் பாகம்  

கேள்வி: தேர்தல் அரசியலில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் ஒருமையிலயோ, அவதூறாகவோ பேசுறாங்கன்னா அது இஸ்யூ கிடையாது. பிராப்ளம் இல்லை. ஆனா, கம்யூனிஸ்டு அமைப்பு, மக்கள் மத்தியில பிரச்சாரம் செய்யிற அமைப்புனு சொல்லக்கூடிய நீங்கள் சில வார்த்தைகளை மோசமா, பெண்ணுக்கு எதிரா,  5 தடவ சி.எம்.மா இருந்த முதல்வருக்கு எதிரா பயன்படுத்துறது மோசமான விசயம்தானே?
பதில்: என்னுடைய பதில் என்னவென்றால்,  தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபடும்பொழுது அதை எப்படி கௌரவமான வார்த்தைகளில் விவரிக்க முடியும்னு தெரியல.
அவதூறுக்கு என்ன விளக்கம்? கொடநாட்டுல ஓய்வெடுத்தார்னு எழுதுனதுக்கு பத்திரிக்கையாளர்கள் மேல அவதூறு வழக்கு போட்டுருக்காங்க.
ஓய்வு என்பது அவதூறா? ஊத்திக் கொடுத்த உத்தமினு எழுதியிருக்கோம். அது அவதூறா? ஊத்திக் கொடுக்கலையா? சாம்பார் சாதம் போடுறாங்க அதை வீடியோ கிளிப்பிங் காட்டியிருக்கிறோம். சாம்பார் சாதம் போடுறது உண்மை. இட்லி கொடுக்கிறது உண்மை. மிக்சி, பேன் கொடுக்கிறது உண்மை. சாராயம் ஊத்திக் கொடுக்கிறது பொய்யா? உண்மையை அப்படி சொல்லக்கூடாதுனா எப்படி சொல்லணும்? அது அவுங்க விரும்புற படி சொல்லனுமா?
ஒருமையில பேசுறாங்க, மரியாதைக்குறைவா பேசுறாங்கன்னு சொல்றாங்க. கள்ளச்சாராயம் வித்தாங்கனு போலீசோட மதுவிலக்குப் பிரிவு அவ்வப்போது பெண்களை பிடிச்சி உள்ள வைக்கிறாங்க. அப்படி கைது செய்யும்போது, அந்தப் பெண்மணிகளை போலீஸ்காரங்க எப்படி கூப்பிடுறாங்க? மேடம் வாங்கன்னு கூப்பிடுறாங்களா? அப்படி கூப்பிடத் தேவையில்லை. அவங்கள போடி, வாடி னு கூப்பிடலாம். எப்படி வேணுமானாலும் நடத்தலாம். கண் முன்னால நாம பார்க்கிறோம்.
அப்போ பத்து ரூபா திருடினா அவனுக்கு ஒரு டிரீட்மெண்ட். பத்து கோடி திருடினா ஒரு டிரீட்மெண்ட். ஒரு லிட்டர், அஞ்சி லிட்டர், பத்து லிட்டர், ஓட்டுனா ஒரு டிரீட்மெண்ட். நல்லா லாரி கணக்குல ஓட்டினா அதுக்கு ஒரு டிரீட்மெண்ட். அந்த மரியாதையை எங்களிடம் எதிர்பார்த்து, இதுதான் கம்யூனிஸ்களுக்குரிய அணுகுமுறைன்னு சொன்னா அது கேலிக்கூத்தானது. ஏழைகளை ஒருவிதமாகவும், பணக்காரர்களை ஒருவிதமாகவும் மதிக்கனும். அதுதான் கம்யூனிஸ்டுகளுக்குரிய பண்புன்னு யாராவது சொல்வாங்களா?
இல்லை, இது அவதூறாகவே இருக்கட்டும். அவதூறு என்றால் அந்த அவதூறுக்கு உரிய செக்சனை ஏன் போடாம இருக்காங்க. தொலைக்காட்சி விவாதங்களில் மட்டும் ஏன் பேசிட்டு இருக்கிறீங்க? போட்டிருக்கிறது ராஜதுரோக வழக்கு. ஒண்ணு அதுக்கு பேசனும். அது நிக்காதுங்கிறதாலே இதை சொல்கிறார்கள். அவதூறுன்னா அதற்குரிய செக்சனை போடுங்க. அங்க பேசுவோம்.
கேள்வி: உங்க மேல சொல்லக்கூடிய இன்னொரு குற்றச்சாட்டு ராகுல் காந்தியை கொன்னுருவேன் அப்படின்னு பாடல் பாடினதா காங்கிரசு கட்சித் தலைவர் தங்கபாலு ஒரு குற்றச்சாட்டை சொல்றாரு. இது ஒரு முக்கியமான குற்றச்சாட்டு உங்க மேல.
பதில்: இந்தக் குற்றச்சாட்டை தங்கபாலு சொந்தமாக கண்டுபிடித்தாரா இல்லை, மண்டபத்துல வச்சி பி.ஜே.பி எழுதிக் கொடுத்தாங்களான்னு எனக்குத் தெரியல. ராகுல்காந்தியைப் பத்தி ஒரு வரிகூட எந்தப் பாடலிலும் இல்லை. அவரை கொன்னுருவேன்னு எழுதவே இல்லை. அது வேறு விசயம். அவரைப் பத்தியே ஒரு பாட்டுக்கூட கிடையாது. இது ஒரு பச்சைப் பொய்.
இந்தப் பொய்க்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா, தாத்ரியில மாட்டிறைச்சியைக் கண்டுபிடிச்சு கொலை பண்ணினாங்க இல்லையா, அதற்கு சமமான பொய். தங்கபாலுவுக்கு அவ்வளவு விவரம் இருக்கிறதா எனக்கு தெரியல. பி.ஜே.பி.காரங்கதான் சொல்லி கொடுத்திருக்கனும். இவருக்கு ஒரு வாய்ப்பு டெல்லிக்குப் போயிட்டு வர்றதுக்கு. அதற்காக இந்தப் பொய்யை ஒரு குற்றச்சாட்டா அவரு கண்டுபிடிச்சிருக்காரு. அதுக்கு மேல இதுல சரக்கு கிடையாது.
கேள்வி: ஒரு பாட்டு பாடுறீங்க,  அந்தப் பாட்டுக்காக தமிழக அரசு உங்களை கைது பன்றாங்க. அதுல போராடி நீங்க போலீசு காவலுக்கும் போகல, ஜாமீன் வாங்கி விடுதலையாகி வர்றீங்க. வந்து சிறைவாசல்ல நின்னே மழை வெள்ளத்தைப் பத்தி ஒரு பாட்டு பாடுறீங்க? இது இந்த அரசை ஆத்திரமூட்டும் வேலைதானே?
பதில்: அரசை ஆத்திரமூட்டும் வேலை என்பதை காட்டிலும், இந்த அரசு ஈடுபடும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் இருக்கே,  அதுல எங்களை விட ஜெயலலிதா மிஞ்சி இருக்கிறாங்க. மழை வெள்ளத்துல சென்னை மாநகரமே மிதக்குது. எல்லா காரு, வண்டி எல்லாம், மூழ்கிப் போயிருக்குது. இந்த அம்மா வெள்ள அபாயம் பற்றி அறிவிப்பு வந்த பிறகும்  கொடநாட்டுலதான் இருக்காங்க. அங்க இருந்து வரல.
அதுக்குப் பிறகு வர்றாங்க. அவ்வளவு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவிச்சி, ஊடகங்களும்  கண்டனம் தெரிவிச்ச பிறகு தொகுதிக்கு வர்றாங்க. அதுக்கு முன்னேற்பாடுகள் ஏகப்பட்டது. அப்பதான் தண்ணியெல்லாம் இறைச்சி வெளியேத்துறாங்க. கண்ணாடி ஏற்றிய ஏ.சி. வேனுக்குள் உட்கார்ந்துகிட்டு வாக்காளப் பெருமக்களேன்னு வர்றாங்க. அந்தக் கண்ணாடில தண்ணிபட்டால் தொடைக்கிறதுக்கு ரெண்டுபேரு தொங்கிகிட்டே போறான். இதைவிட தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களை அவமதிக்கக் கூடிய, உயிரைப் பணயம் வைத்து செத்திருக்கின்ற மக்களை இழிவுப்படுத்தக்கூடிய, ஆத்திரமூட்டக்கூடிய ஒரு நடவடிக்கை வேறு ஏதாவது இருக்குதா? அல்லது நிவாரணம் என்ற பெயரில சும்மா நின்னு போஸ் கொடுக்கிறாங்களே இந்த அமைச்சர்கள் அவர்களுடைய நடவடிக்கையை விட ஆத்திரமூட்டும் நடவடிக்கை எதாவது இருக்குதா?
இதையெல்லாம் அம்பலப்படுத்தி பாடுறதுதான் எங்க வேலை. இதுக்கு ஒரு கேசு போட்டால்,  போடு. திரும்ப வந்து பாடுவோம். அதுதான் எங்க வேலை. இந்த அரசின் இப்படிப்பட்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்குப் பிறகும் கூட, மக்களுக்கு ஆத்திரம் வரவில்லையே,  அவங்களுக்கு ஆத்திரம் ஊட்டுறதுக்குத்தான் பாடுறோம். சந்தேகமேயில்லை. அதுக்குத்தான் பாடுறோம்.
கேள்வி: மழை வெள்ளம் அப்படிங்கிறது, சுனாமியோ, மழை வெள்ளமோ, ஜெயலலிதா சொல்லி வர்றதில்லை. இது இயற்கையோட சீற்றம்…
பதில்: இல்லை, சேலம் கலெக்டரு ஜெயலலிதா சொல்லித்தான் வர்றதா சொல்லியிருக்காரு.
கேள்வி: இல்ல… இயற்கையோட சீற்றத்தால ஓரளவுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்காங்க. இதுல அரசு மட்டுமே செயல்பட முடியாது அவ்ளோ பலவீனமா இருக்காங்க அப்படிங்கிறதால, வெவ்வேறு குழுக்கள் தங்களால் முடிந்த அளவு போர்வைகள் சோப்புகள் உணவுப் பொருட்கள் இதையெல்லாம் கொடுக்கிறாங்க. அத பேஸ்புக்ல, டுவிட்டர் ல எழுதிட்டு வந்திடறாங்க. நீங்க என்ன பண்றீங்க? அதை ஒரு பாடலா மாத்துறீங்க. அதை ஒரு பிரச்சார வடிவமா செய்றீங்க. இதுதான் மீண்டும் மீண்டும் சிக்கலான விசயமா இருக்கு. இப்படித்தான் அணுகணுமா?
பதில்: இதை இப்படித்தான் அணுகணும். அதாவது, வெள்ளத்தில் சிக்கி நிர்க்கதியாக இருக்கும் மக்களுக்கு அரசு உதவாத போது, நாம் போய் கை கொடுப்பது உதவுவது என்பது வேறு. மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள்கூட அவ்வாறு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். துணிமணிகள் எல்லாம் திரட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அதெல்லாம் தவறு என்று நான் சொல்லவில்லை.
ஆனால், இதை செய்ய வேண்டிய கடமைப் பொறுப்பிலிருந்து தவறியிருக்கிறது இந்த அரசு. குற்றவாளி இந்த அரசு  அப்படிங்கிறத எப்போ சொல்றது? இந்த அரசு என்ன நினைக்குதுன்னா, மக்கள் கையேந்தி நின்னா, ஐயாயிரமோ, பத்தாயிரமோ கொடுக்கலாம் ஓட்டை அறுவடை பன்னலாம் அப்படீங்கிறதுதான் இந்த அ.தி.மு.க.  அரசினுடைய திட்டம். மக்களை இவ்வளவு கேவலமாக, இழிவாக கருதுகின்ற ஒரு அரசாங்கத்துக்கு எதிராக, மக்களை கிளர்ந்தெழச் செய்வதுதான் நியாயமாக,  ஜனநாயக உணர்வு கொண்ட எல்லோருடைய பணியாகவும் இருக்க முடியும். நிவாரணம் என்பது ஒரு மனிதாபிமான நடவடிக்கை அவ்வளவுதான். அது அரசியல் நடவடிக்கை அல்ல. வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக