செவ்வாய், 24 நவம்பர், 2015

விகடன், முரசொலி கலைஞர் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு..விகடன் facebook முடக்கம்...?

தமிழில் வெளிவரும் பிரபல வாரப் பத்திரிகையான ஆனந்த விகடன், தி.மு.கவின் அதிகாரபூர்வ இதழான முரசொலி, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இது தொடர்பாக இரண்டு வழக்குகளை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.
கடந்த வாரம் வெளிவந்த நவம்பர் 25ஆம் தேதியிட்ட இதழில், 'என்ன செய்தார் ஜெயலலிதா' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. இந்தக் கட்டுரையில் தமிழக அரசுக்கும், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியாகி உள்ளது என்றும் இதனை வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஒரு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக, இந்தக் கட்டுரையின் விவரங்களைத் தனது கலைஞர் பதில் பகுதியில் வெளியிட்டதற்காக தி.மு.க தலைவர் கருணாநிதி மீதும், அந்த கேள்வி - பதில் பகுதியில் இடம்பெற்ற விவரங்கள சரிபார்க்காமல் வெளியிட்ட முரசொலி இதழின் ஆசிரியர் செல்வம் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த இரு வழக்குகளும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வருமென நம்பப்படுகிறது.
இதற்கிடையில், தங்களுடைய ஃபேஸ்புக் பக்கம் நேற்று முதல் முடக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக ஃபேஸ்புக் நிர்வாகத்திடமிருந்து தங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லையென்றும் மேற்குறிப்பிட்ட கட்டுரைக்கும் இந்த முடக்கத்திற்கும் தொடர்பு இருக்குமோ என தாங்கள் கருதுவதாகவும் ஆனந்த விகடன் தனது இணைய தளத்தில் கூறியுள்ளது bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக