தமிழகத்தில் இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை அக்டோபர் 28-ல் தொடங்கியது.
இன்றளவும் மழை நீடிக்கிறது. மழையால் தமிழகமே பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்கள்
மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தானே புயலுக்குப் பிறகு கடலூர் கடுமையாக பாதிக்கப்பட்டது இந்த மழையால்தான்.
விளை நிலங்கள், பயிர் சேதம், வீடுகள் சேதம், பொருட்கள் இழப்பு என
சேதாரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
சென்னையில் வில்லிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர்
வெள்ளமாக சூழ்ந்துள்ளதால் மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரசும்,
எதிர்க்கட்சிகளும், பல தன்னார்வ அமைப்புகளும் மீட்புப் பணிகளிலும்,
நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டன.
தமிழகத்தின் வெள்ள நிவாரணத்துக்காகவும், மறு சீரமைப்புப் பணிகளுக்காகவும்
தமிழக அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், இந்த நிதி போதாது.
கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் பருவமழை நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு பணிகளுக்கு ரூ.8,481
கோடி தேவை என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதினார்.
அதற்கு மத்திய அரசு ரூ.940 கோடி நிதியளித்தது. தமிழக மக்களின் துயரத்தைப்
போக்குவதற்காக ஆசிரியர் சங்கம், தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளில்
பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தைக் கொடுக்க
முன்வந்துள்ளனர்.
ஆயிரங்களில் சம்பளம் வாங்கும் நபர்களே ஒரு நாள் சம்பளம் கொடுக்க
முன்வரும்போது, கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஏன் எந்த உதவியும்
செய்ய முன்வரவில்லை? என்பதுதான் சமூக வலைதளங்களில் பலரின் கேள்வியாக
உள்ளது.
பக்கத்து மாநிலமான ஆந்திராவின் விசாகப்பட்டிணம் மற்றும் அதன்
சுற்றுப்புறங்களில் கடந்த ஆண்டு ஹூட் ஹூட் புயல் தாக்கியது. அதனால் அந்த
மாவட்டப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. அதற்காக தெலுங்கு திரையுலகைச்
சார்ந்த நடிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் நடிகர்களும் லட்சங்களில் நிதி
கொடுத்து உதவிக்கரம் நீட்டியதை மறக்க முடியாது. நடிகைகளும் நிதி கொடுத்து
தங்கள் மனித நேயத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.
கடந்த ஆண்டு ஹூட் ஹூட் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மக்களுக்காக தமிழ்
நடிகர்கள் கொடுத்த நிவாரண நிதியின் பட்டியலையும் சில ஃபேஸ்புக் இணையவாசிகள்
வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்: ரஜினி - ரூ.5 லட்சம், விஜய் - ரூ.5
லட்சம், விஷால் - ரூ. 15 லட்சம், சூர்யா - ரூ. 25 லட்சம், கார்த்தி - ரூ.
12.5 லட்சம், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் - ரூ.12.5 லட்சம், சமந்தா
- ரூ.10 லட்சம், காஜல் அகர்வால் - ரூ.5 லட்சம்...
ஆனால், தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இதுவரை எந்த நடிகரும் வெள்ள
நிவாரண நிதியாக ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஓர்
அறிவிப்பு கூட வெளியிடவில்லை என்பதுதான் கசப்பான உண்மை என்கின்றனர் சமூக
வலைதளங்களில் இயங்கும் ஆர்வலர்கள்.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. தமிழகத்தின் துயரத்தை
நீக்கும் பொறுப்பு நடிகர்களுக்கு இல்லையா? ஃபேஸ்புக், ட்விட்டரில்
பாதுகாப்பு எச்சரிக்கை விடுப்பதோடு நடிகர்களின் கடமை முடிந்துவிடுமா?
என்றும் அவர்கள் கேட்கின்றனர்.
ஆந்திரத்துக்கு அவசர அவசரமாக உதவியவர்கள், தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டு
பலநாட்கள் ஆகியும் நிதானம் காத்து வருவதாக அவர்களில் சிலர் கூறுகின்றனர். /tamil.thehindu.com/
Because tamilan ilezavayan.
பதிலளிநீக்கு