செவ்வாய், 24 நவம்பர், 2015

அரசு பணத்தில் அதிமுக பிரசாரம்- தி.மு.க. வழக்கு; ஜெ.வுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!

அ.தி.மு.க.வுக்காக தமிழக அரசு பணத்தை செலவழித்து பிரசாரம் செய்வதை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வின் தலைமை நிலைய முதன்மை செயலாளர் துரைமுருகன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அ.தி.மு.க, ஆட்சி காலம் 13.5.16 அன்று முடிய உள்ளது. ஆகையால் மே மாதத்துக்குள் தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்
இத்தேர்தலில் தமிழக அரசு பணம், மனித ஆற்றல் உள்பட அரசு நிர்வாகத்தை பயன்படுத்துவதற்கு, முதல்வர் ஜெயலலிதாவும் அவரது அ.தி.மு.க. கட்சியும் முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து அரசுத்துறை செயலாளர்களுக்கும் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள், அரசு திட்டங்களை பேனர்கள், கைப்பிரதிகள், டிஜிட்டல் பேனர்கள், குறும்படங்களை வெளியிடும் எல்.சி.டி. டி.வி.கள் பொருத்தப்பட்ட 32 வேன்கள், சில வீடியோ படங்கள் ஆகியவற்றின் மூலம் விளம்பரம் செய்து வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால், இதுபோன்ற பிரசாரங்களை அரசு பணம் மூலம் மேற்கொள்ள முடியாது என்பதை நன்றாக தெரிந்து, இப்போதே பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.
4 ஆண்டுகால ஆட்சி இதற்காக மக்கள் தொடர்புத்துறை செயலாளரின் அதிகாரத்துக்கு கீழ் வரும் திரைப்படப்பிரிவு மூலம் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டு ஆட்சியின் சாதனைகளைக் கூறுவதுபோல கூறி ஜெயலலிதா நிரந்தரமாக ஆட்சி செய்வார் என்று தெரிவிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளனர்.
பொது இடங்களில் அரசு பணத்தை செலவழித்து, ஜெயலலிதாதான் நிரந்தர முதல்வர் என விளம்பரம் செய்ய அதிகாரிகளுக்கு தடை விதிக்கவேண்டும். இது தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் திரும்பப்பெற உத்தரவிட வேண்டும். விளம்பரத்துக்குரிய செலவை முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு துரைமுருகன் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இம் மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, அரசுத்துறை செயலாளர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்

Read more at//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக