சனி, 7 நவம்பர், 2015

கிரின்பீஸ் இந்தியா அமைப்பின் பதிவை தமிழக அரசு ரத்து

சுற்றுச்சூழல் விவகாரங்களில் கவனம் செலுத்தும் சர்வதேசத் தன்னார்வத் தொண்டுநிறுவனமான கிரீன் பீஸ் இந்தியா அமைப்பின் பதிவை, தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக க்ரீன் பீஸ் தெரிவித்துள்ளது.
தன்னார்வத் தொண்டு நிறுவனமான கிரீன் பீஸ் இந்தியா தமிழ்நாட்டில் சென்னையில் பதிவு அலுவலகத்தைக் கொண்ட ஒரு சொசைட்டியாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த அமைப்பு பல்வேறு விதிமுறைகளை மீறியிருப்பதாக கடந்த ஜூன் 16ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பட்டிருந்தது.
அந்த நோட்டீஸில், நெதர்லாந்தில் உள்ள கிரீன்பீஸ் கவுன்சிலின் ஆணைப்படியே இங்கிருக்கும் அமைப்பு செயல்படுவதாகவும் வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்றுவருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

அந்த நிதி குறித்த கணக்குவழக்குகளைச் சமர்ப்பிக்கும்போது 2005-6ஆம் ஆண்டிலிருந்து 2011-12ஆம் ஆண்டு வரையிலான கணக்குகளில் முரண்பாடுகள் இருந்ததாகவும் தமிழ்நாடு அரசு கூறியிருந்தது.
இதையடுத்து, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இருந்தபோதும், தாங்கள் கேட்ட விளக்கத்தை கிரீன்பீஸ் அளிக்கவில்லையென்றும் தமிழக அரசு தற்போது அளித்துள்ள ரத்து நோட்டீஸில் கூறியுள்ளது.
கிரீன் பீஸ் அளித்த விளக்கம் ஏற்க முடியாத நிலையில், அதன் பதிவு ரத்துசெய்யப்படுவதாகவும் ஒரு மாதத்திற்கு அந்த அமைப்பு கலைப்படவில்லையென்றால், அரசே அதனைச் செய்யுமென்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக கிரீன் பீஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வருடமாகவே மத்திய உள்துறை அமைச்சகம் கிரீன் பீஸ் அமைப்பை முடக்க முயன்றுவருவதாகவும் அதன் அறிவுறுத்தலின்படியே தமிழ்நாடு அரசின் பதிவாளர் செயல்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
தங்கள் தரப்பு வாதம் கேட்கப்படவில்லையென்றும் சட்டரீதியாக இதனை எதிர்கொள்ளப் போவதாகவும் கிரீன் பீஸ் கூறியுள்ளது bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக