சனி, 7 நவம்பர், 2015

சவுதியில் கை துண்டிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் நிதி உதவி..முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ...

சவுதியில் கை துண்டிக்கப்பட்ட வேலூர் பெண் கஸ்தூரிக்கு உதவும் விதமாக அவருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் என்ற ஏழைப் பெண், சவுதி அரேபியாவில் வீட்டு வேலைப் பணியில் இருந்த போது அந்த வீட்டின் உரிமையாளர், கஸ்தூரி முனிரத்தினத்தை கொடூரமாக தாக்கியதால் அவரது கை துண்டிக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவம் பற்றி தெரிய வந்ததும், எனது உத்தரவின் பேரில் தமிழக அரசு இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சகம் ஆகியவற்றை தொடர்பு கொண்டு கஸ்தூரி முனிரத்தினத்துக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கும், அவர் பணி புரிந்த வீட்டு உரிமையாளரிடமிருந்து இழப்பீடு பெற்று தரவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.
இது தொடர்பாக 23.10.2015 அன்று பிரதமருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தில், கஸ்தூரி முனிரத்தினத்துக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவும், பத்திரமாக நாடு திரும்பவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், சவுதி அரேபியாவில் அவர் தங்கியிருக்கும் வரை அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கிடவும், உரிய இழப்பீடு பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
எனது உத்தரவின் பேரில், தமிழக அரசு அதிகாரிகள் இது குறித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். கஸ்தூரி முனிரத்தினம் இன்று (7.11.2015) மதியம் விமானம் மூலம் சென்னை திரும்பினார். எனது உத்தரவின் பேரில் தமிழக அரசு அதிகாரிகள் விமான நிலையத்திற்குச் சென்று கஸ்தூரி முனிரத்தினத்தை வரவேற்று, தேவையான உயர் மருத்துவ சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

கஸ்தூரி முனிரத்தினத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவரின் வாழ்வாதாரத்திற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த நிதி தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து பெறப்படும் மாத வட்டியான 8,330 ரூபாய் கஸ்துரிக்கு மாதந்தோறும் அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக