சனி, 7 நவம்பர், 2015

Over Land பெங்களூரில் இருந்து பாரிசுக்கு காரிலேயே சென்ற இந்திய குடும்பம்.

நெடுந்தூர பயணங்களின் அருமை தெரியாத முதல் தலைமுறை நாம் தான். காதில் செவிட்டு மெஷின்  (ஹெட் போன்ஸ்) மாட்டி வெளியுலக சத்தங்களுக்கெல்லாம் ம்யூட் போட்டு விட்டு, சகிக்க முடியாத ஒரு பாடலை  ஃபுல் வால்யூமில் கேட்டு  நொடிக்கு நொடி காதில் ஒரு சின்ன பூகம்பமே உருவாகும் அளவிற்கு பயணிக்கிறோம். இங்கிருந்து ஆபீஸ் சென்று வருவதற்குள்ளேயே  டயர்ட் ஆகிடுது. பேசாமல் காரை விட்டு இறங்கி நடந்தே போயிடலாம் என தோன்றும் அளவுக்கு  டிராபிக் பாடாய் படுத்துது என்று நினைப்பவரா நீங்கள்? ஒரு குடும்பம்  பெங்களூருவிலிருந்து பாரீஸ் வரை 11 நாடுகளை கடந்து, 50 க்கும் மேற்பட்ட நகரங்களை தாண்டி , 111 நாட்களாக பயணித்து தற்போது இந்தியா திரும்பியுள்ளனர். இவர்கள் ப்ளைட்டில் பறக்கவில்லை, 22, 780 கி.மீ. காரிலேயே பயணித்து இருக்கின்றனர்.


இது போன்ற சாதனைகளை மேற்கத்திய நாடுகளில் தனி நபர்கள் செய்ததாக கேள்விபட்டது உண்டு  எ.கா.-  சைக்கிளில் உலகை வலம் வருபவர்கள். ஆனால் இரண்டு சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படி இப்படி ஒரு பயணம் சாத்தியமானது என்பது ஆச்சரியம்தான். இவர்கள் பயணத்தில் சந்தித்த இன்னலகள் கொஞ்ச நஞ்சம் இல்லை.நேபாள  பூகம்பம் ஏற்பட்ட சமயம் இவர்கள் மிகவும் பாதிப்படைந்த பகுதிகளுக்கு மிக அருகிலேயே இருந்தனர். வெயில் மலை, பனிச்சரிவுகள், உணவு, விசா அனுமதிகள் என பல பல.

ஆனந்த பெயிட், அவரது மனைவி புனிதா பெயிட் மற்றும் இரு குழந்தைகள் யஷ் , த்ரிஷ்டிதான் இந்த இமாலய பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றனர்.
ஏப்ரல் 8-ம் தேதி பெங்களுரில் தொடங்கிய இந்த பயணம், மத்திய இந்தியாவின் நகரங்களை கடந்து, வாரணாசி, டெல்லி வழியாக பார்டரை தாண்டி நேபாளை அடைந்த சமயம்தான் அங்கு பூகம்பம். ஐந்து நாட்களுக்கு மேல் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டனர். 'ஓவர்லேண்ட் ஸ்டோரீஸ்' என்ற தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்கள் போட்டு வந்தவர், பூகம்பம் தாக்கிய இடத்திற்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என ஒரு படத்தையும் போட்டிருக்கிறார்.

திபெத், சீனா, மத்தியா ஆசியா என இவர்களது பயணம் பல தட்ப வெப்ப நிலைகளையும், இயற்கை வளங்களையும் தாண்டி சென்றது. சைவ உணவு எல்லா இடங்களிலும் கிடைக்காது என்பதால் இரு சின்ன அடுப்பையும், பாத்திரங்களையும் கூடவே எடுத்து சென்றனர்.

உஸ்பெகிஸ்தான், ஈரான், துர்க்மேனிஸ்தான் என வித்தியாசமான கலாச்சாரங்களை கொண்ட நாடுகளை கண்டு களித்தனர்.
ஐரோப்பிய நாடுகளான இத்தாலி,  ஃபிரான்ஸ் வழியாக பாரீஸ் நகரத்தை வந்தடைந்தனர். அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா  வந்தனர். காரை என்ன செய்தார்கள் என்று யோசிக்கிறீர்களா?

குடும்பத்தில் ஒருவராகி விட்ட அந்த காரை விமான கார்கோ மூலம் கொண்டு வந்து விட்டனர். பள்ளிக்கூடம் கற்று தர இயலாத பாடங்களை ,இந்த நீண்ட் நெடும் பயணம் நிச்சயம் கற்பித்து இருக்கும்.

துர்க்மேனிஸ்தானின்  'டோர் டு ஹெல்', கிரீஸின் பழமையான கட்டிடங்கள், கிரிகிஸ்தானின் பனி படர்ந்த மலைகள், துருக்கியின் இயற்கை அழகு, சைவ உணவே கிடைக்காத ஈரான் என எண்ணில் அடங்காத அனுபவங்கள் நிறைந்தது இவர்களது பயணம்.
இவர்கள் குடும்பத்தின் ஐந்தாவது உறுப்பினரான கார், தற்போதுதான் இந்தியா வந்து அடைந்துள்ளது. குடும்பம் ஒரு வழியாக ஒன்று சேர்ந்து விட்டது.

ஐ.மா.கிருத்திகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக