ரியூனியன் தீவில் கரை ஒதுங்கிய விமான இறக்கைப் பகுதி |
அந்த விமானம் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கே கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. விமானம் விழுந்ததாகக் கருதப்பட்ட கடல் பகுதியில் கடந்த பல மாதங்களாகத் தீவிரமாகத் தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
பொதுவில் ஒரு விமானம் கடலில் விழுந்தால் ஏதாவது சிறு பகுதிகளாவது கடலில் மிதக்கும். ஆனால் மலேசிய விமான விஷயத்தில் அப்படியான எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
இப்படியான நிலையில் தான் கடந்த ஜூலை 29 ஆம் தேதி ஆப்பிரிக்காவுக்கு கிழக்கே ரியூனியன் தீவில் விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதி கரை ஒதுங்கியது.
விமான இறக்கைப் பகுதி இன்னொரு காட்சி |
பிரான்ஸ் நாட்டில் அந்த விமான இறக்கைப் பகுதியை விசேஷ முறைகளில் ஆராய்ந்த போது அது MH 370 விமானத்தின் பகுதியே என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி எப்படி ரியூனியன் தீவில் கரை ஒதுங்கியது என்பது புதிய புதிரைக் கிளப்பியுள்ள்து. ஆனால் இதில் பெரிய மர்மம் எதுவுமில்லை.
காணாமல் போன மலேசிய MH 370 விமானம் |
இந்துமாக் கடலில் உள்ளபடி இயற்கையாக கடல் நீரோட்டங்கள் உள்ளன. இவற்றில் இந்துமாக் கடல் சுழல் ( Indian Ocean Gyre) தான் பிரதானமானது. இதன் அங்கமாகக் கடல் நீரோட்டங்கள் உள்ளன. பூமி நடுக்கோட்டு தென் நீரோட்டம் (South Equitorial Current) போன்ற நீரோட்டங்கள் இதில் அடங்கும்.
மலேசிய விமானம் விழுந்ததாகக் கருதப்படும் இடத்துக்கு அருகில் உள்ளது ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையாகும். ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மலேசிய விமானப் பகுதி மேற்கு ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்காமல் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ரியூனியன் தீவில் கரை ஒதுங்கியதற்கு கடல் நீரோட்டமே காரணம்.
இந்து மாக்கடலில் உள்ள நீரோட்டத்தைக்காட்டும் படம் |
விமானம் ஒன்று கடலில் விழுந்தால் மிதக்கக்கூடிய இடிபாடுகள் சில நாட்களுக்குத் தான் கடலில் மிதக்கும். பின்னர் அவையும் மூழ்க முற்படும். ஒரு விமானம் கடலில் நிச்சயமாக இந்த இடத்தில் தான் விழுந்தது என்று உடனேயே தெரிய வந்தால் மிதக்கும் இடிபாடுகளைஅவை மூழ்கு முன்னர் கண்டுபிடித்து விட முடியும்.
ரியூனியன் தீவு உள்ள இடத்தைக் காட்டும் படம் |
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு அமைப்பானது (Australian Transport Safety Bureau) ஒரு கட்டத்தில் கடல் நீரோட்டங்களைக் கவனத்தில் கொண்டு கூறுகையில் மிதக்கக்கூடிய இடிபாடுகளில் சில முதலில் வடக்கு நோக்கிச் சென்று பின்னர் மேற்கு நோக்கி ரியூனியன் தீவு வரையில் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டது. அந்த அமைப்பு கருதியபடியே விமான இறக்கைப் பகுதி அந்தத் தீவில் கரை ஒதுங்கியுள்ளது.
உலகின் கடல்களில் பல நீரோட்டங்கள் உள்ளன. வெதுவெதுப்பான நீரைக் கொண்டு செல்லும் நீரோட்டங்கள் உள்ளன. குளிர்ச்சியான நீரைக் கொண்டு செல்லும் நீரோட்டங்களும் உள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக