புதன், 29 ஜூலை, 2015

ஜப்பான் தோசிபா நிறுவனத்தின் மோசடிகள்! ஊதிப்பெருக்கியும் (Inflated Profit) நட்டக்கணக்கு போலியாகவும் காட்டப்பட்டு?

தோஷிபா ஊழல்2008-ல் முதலாளித்துவ சூதாட்டத்தால் விளைந்த உலகப்பெருமந்தத்தில் சந்தைகளும், சிறுமுதலீட்டாளர்களும், பலநாட்டின் அரசுகளும், லேமன் பிரதர்ஸ் போன்ற நிதி நிறுவனங்களும் கவிழ்ந்த பொழுது ஜப்பானைச் சேர்ந்த தோசிபா நிறுவனம் மட்டும் வாடாமல்லியாக காட்சிளித்தது!
காரணம் என்ன? தோசிபா கம்பெனியின் இலாபம் அபரிதமாக ஊதிப்பெருக்கியும் (Inflated Profit), கம்பெனியின் நட்டக்கணக்கு இத்துணை ஆண்டுகளாக போலியாகவும் காட்டப்பட்டு வந்துள்ளது.
மிகச் சமீபத்தில் தோசிபாவில் நடைபெற்ற விசாரணைக் கமிட்டி, கிட்டத்தட்ட 120 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ 7,200 கோடி)  அளவிற்கு இலாபக் கணக்கு மோசடியாக உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளது.

தோசிபாவின் 140 வருட வரலாற்றில் கறைபடிந்துவிட்டதாக முதலாளித்துவ கண்ணியவான்கள் கதறுகிறார்கள்!
சப்பானின் நிதியமைச்சர் டாரோ அசோ, “தோசிபாவின் ஊழல் மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என பேட்டியளிக்கிறார்.

“முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமானால் “கார்ப்பரேட் கவர்னன்ஸ்” தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும்”
முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமானால் “கார்ப்பரேட் கவர்னன்ஸ்” தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டுமென முதலாளித்துவ வெஞ்சுருட்டிகள் வெஞ்சினம் கொள்கிறார்கள்!
பங்குச் சந்தையில் தோசிபா போன்ற ஏகபோக முதலாளி, ஏன் இலாபத்தைக் கூட்டிக் காட்ட வேண்டும்? இந்தியாவில் சத்யம் ராஜூ இதே வேலையைத்தான் செய்தார் என்பதை நினைவில் கொள்க.
சத்யம் ராஜூ
பங்குச் சந்தையில் தோசிபா போன்ற ஏகபோக முதலாளி, ஏன் இலாபத்தைக் கூட்டிக் காட்ட வேண்டும்?
பங்குச் சந்தை என்பது முழுக்கவும் சூதாட்டம் தான். முதலாளிகள் ஒருதரப்பினர் இன்னொருவரிடமிருந்து மூலதனத்தை கொள்ளையிடுவதற்கான களம்தான். அதே போன்று பங்குகளை வாங்கி பணக்காரர்களாக மாறலாம் என்று நடுத்தர வர்க்கத்தை கொள்ளையிடும் இடமும் கூட.
உலகப்பெருமந்தத்தால் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்த உலகவரலாற்றின் எந்தக் காலத்திலும் உலகப் பெருமுதலாளிகளின் மூலதனத்திற்கு எந்தபங்கமும் வந்ததில்லை. பொருளியலாளர் தாமஸ் பிக்கெட்டி, கடந்த 200 வருட வரலாற்றில் பணக்காரர்கள் மிகப்பெரும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் பஞ்சப்பராரிகளாகவும் இருக்கும்படி ஏற்றத்தாழ்வு பெருகிவருவதை அம்பலப்படுத்தியிருக்கிறார். 140 வருட வரலாற்றுப் பின்னணி கொண்ட தோசிபா மட்டும் தனது மூலதனத்தை எளிதில் விட்டுக் கொடுக்குமா என்ன?
இருக்கும் வாய்ப்புகளே இரண்டு இரண்டு தான். ஒன்று கூலியைக் குறைத்து தொழிலாளிகளை கசக்கிப் பிழிவது; இரண்டு- இலாபத்தை கைப்பற்றுவதில் பிற முதலாளிகளுடன் போட்டியிடுவது. இரண்டு பிரிவிலும் பல வாய்ப்புகளை முதலாளித்துவம் மேற்கொண்டுவருகிறது.
இலாபத்தை ஊதிப்பெருக்கிக் காட்டுகிற இந்த முதலாளித்துவ வித்தை பொருளியல் வரையறைப்படி முதலாளித்துவ கருப்புச்சந்தையின் ஒரு வகைதான். ஆங்கிலத்தில் இதை Unreported economy எனவும் unrecorded economy எனவும் பிரிக்கிறார்கள்.
டாடா குழுமத்தின் கோர முகம்
டாடா போன்றவர்கள் கஞ்சா விற்றுத்தான் பெரிய முதலாளிகளாக வந்தார்கள்
அறிவிக்கப்படாத பொருளாதாரம் அல்லது பதிவுசெய்யப்படாத பொருளாதாரம் என்பதற்கு நூலிழை வேறுபாடுதான் உண்டு. சான்றாக விபச்சாரம், ஆயுத பேரம் போன்றவற்றால் கிடைக்கும் பொருளாதாரத்தை அறிவிக்கப்படாத பொருளாதாரம் என அழைப்பர். சான்றாக டாடா, அம்பானி போன்றவர்கள் கஞ்சா விற்றுத்தான் பெரிய முதலாளிகளாக வந்தார்கள். உலகின் மிகப்பெரும் வங்கிகளுள் ஒன்றான HSBC (Hongkong shanghai banking corporation) யும் கஞ்சா விற்று மூலதனம் சேர்த்த வங்கி தான். இத்தகைய பண்டங்கள் வாங்கி விற்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, வாங்கி விற்கும் பண்டம் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஆனால் உற்பத்திச் செலவுகளில், இலாபங்களில், கூலியில் கணக்கு மோசடி செய்வதன் மூலம் பெரும் கொள்ளையடிக்க முடியும்.
சான்றாக, முட்டைதிருடி வளர்மதி-ஜெயலலிதா கும்பல் நாளொன்றுக்கு 69 இலட்சம் ரூபாய் சத்துணவு முட்டையில் மட்டும் ஒதுக்குகிறார்கள். எப்படி? மொத்த முட்டை கொள்முதலை ஒரு தனியார் கம்பெனியிடம் கொடுத்துவிட்டு முட்டையின் விலையை நான்கு ரூபாய் என்று குறிப்பிட்டுவிட்டு கம்பெனிக்கு மூன்று ரூபாய் தமக்கு ஒரு ரூபாய் என்று பிரித்துக்கொள்வது.
அதானியின் சூரியமின்சாரக் கொள்ளையிலும் அ.தி.மு.க அரசு யூனிட் ஒன்றை 7 ரூபாய் என நிர்ணயித்து 25 வருட ஒப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால் மத்திய பிரதேசத்தில் அதானி குழுமம் ஆறு ரூபாய்க்குத்தான் விற்கிறது. இதன்படி தமிழக அரசுக்கு 25,000 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்படும். அது எங்கே போகும்? அம்மா ஒரு ரூபாய் சம்பளம் வாங்குவதாக அறிவித்திருக்கிறார், ஒருவேளை இது அதுவாக இருக்குமோ?
அதானி - மோடி
சூரியமின்சாரக் கொள்ளையிலும் அ.தி.மு.க அரசு அதானி குழுமத்துடன் யூனிட் ஒன்றை 7 ரூபாய் என நிர்ணயித்து 25 வருட ஒப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறது. (அதானி, மோடியுடன்)
மீண்டும் தோசிபாவிற்கு திரும்புவோம். பணவாட்டம் அதிகம் உள்ள காலங்களில் அதாவது மக்களிடம் பணம் புழங்காமல் நசிந்துபோயிருக்கும் பொழுது சந்தைகள் தோற்றுப்போயிருக்கும் பொழுது தோசிபாவின் குறியீட்டு எண் மட்டும் எல்யிடி டிஸ்பிளேயில் 2008-லிருந்து தற்பொழுது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது வரைக்கும் எகிறிக் கொண்டிருந்தது!
தோசிபா போன்ற திறமையான பெருநிறுவனங்கள் இப்படி மோசடி செய்வதன் மூலம் பி முதலாளிகளின் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று யோசிக்கமுடிகிறதா? அதாவது நியாயமாக பொருள் சம்பாதித்து முதலாளியாகி வெற்றி பெற வேண்டும் என நினைக்கிற முனைவர்களைக் கொல்வது வேறுயாரும் அல்ல முதலாளித்துவம் தான்.
தோசிபாவில் சோதனை மேற்கொண்ட விசாரணைக் கமிட்டியின்படியே தைவானின் உதிரி கம்ப்யூட்டர் பாகம் வாங்கும் சிறு முதலீட்டாளர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக விலையில் பொருட்களை விற்றிருக்கின்றது தோசிபா நிர்வாகம்.
“முதலாளித்துவம் பல முதலாளிகளைக் கொல்கிறது” என்று மார்க்சிய ஆசான்கள் கூறுவதற்கு மற்றுமொரு இரத்த சாட்சியாக நிற்கிறது கால்குலேட்டரிலிருந்து கம்ப்யுட்டர் ஈறாக அணு உலை வரை விற்பனை செய்யும் பன்னாட்டு கம்பெனி தோசிபா.
செயற்கையாக ஊதிப்பெருக்கிக் காட்டிய இலாபத்தை எப்படி சரிக்கட்டுவது? அதையும் தோசிபா இயக்குநர்களே சொல்லியிருக்கிறார்கள்.
தோஷிபா லாபப் பெருக்கம்
செயற்கையாக ஊதிப்பெருக்கிக் காட்டிய இலாபத்தை எப்படி சரிக்கட்டுவது? அதையும் தோசிபா இயக்குநர்களே சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்த செயல்பாட்டு காலத்தில் சாத்தியமேயில்லாத உற்பத்தி இலக்குகளை தொழிலாளிகளுக்கு நிர்ணயிப்பது, சம்பளத்தைக் குறைப்பது, வேலை நேரத்தை அதிகரிப்பது. இதன் மூலமாக மோசடி லாபத்தை நடைமுறையில் ஈட்டி விட முடியும் என்று நினைத்த முதலாளிகள் முதலாளித்துவத்தின் துலக்கமான முரண்பாட்டு நெருக்கடியில் கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள்.
அதாவது தோசிபாவின் இந்த ஊழல் விவகாரம் தன்னை எப்படி பாதிக்கும் என்று கருதுபவர்கள் எங்கோ முகம் தெரியாத ஒரு தொழிலாளி முதலாளித்துவ ஊழலை வெள்ளையாக மாற்றுவதற்காக தன் நிணத்தை பிய்த்துப்போட்டிருக்கிறார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
தோசிபா போன்ற பன்னாட்டு கம்பெனிகள் தாங்கள் அடைய வேண்டிய ஊதிப்பெருக்கப்பட்ட இலாபங்களுக்காக
  • ஹிசாவ் தனாகா
    வேலையிழப்பால் உள்நாட்டில் தொழிலாளிகள் செத்தால் சப்பானியர்கள் ரோசம் மிக்கவர்கள் என்று புகழ்பாடுகின்றனர் முதலாளித்துவ கூஜாக்கள். (தோஷிபாவின் ஹிசோ தனாகா)
    இந்தியா போன்ற நாடுகளில் மோடி போன்ற கைக்கூலிகளை வைத்துக்கொண்டு தொழிலாளர் நலச்சட்டங்களையே திருத்துகின்றன.
  • குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைக்கும் நாடுகளை நோக்கி இரத்த வெறியுடன் படையெடுக்கின்றன.
  • வேலையிழப்பால் உள்நாட்டில் தொழிலாளிகள் செத்தால் சப்பானியர்கள் ரோசம் மிக்கவர்கள் என்று புகழ்பாடுகின்றனர் முதலாளித்துவ கூஜாக்கள்.
  • நாடுகளின் அரசுகள் வழங்கும் மானியங்கள் இவர்களின் அட்டூழியங்களை சரிகட்டுவதற்காக வெட்டப்பட்டிருக்கின்றன.
  • வேலை நேர அதிகரிப்பால் எத்தனையோ நாட்டு தொழிலாளிகள் பைத்தியங்களாக அலைகின்றனர்.
  • சிறுநாடுகளின் பணமதிப்பு பீதுடைத்த காகிதமாக சரிந்து நிற்கிறது.
  • முதலாளித்துவத்தின் முரண்பாடு ஏகாதிபத்தியமாக நாடுபிடிக்கும் நாய்ச்சண்டையாக வந்து நிற்கிறது.
தோசிபாவின் தனித்த எடுத்துக்காட்டு மெய்ப்பிக்கும் களநிலைமைகள் இதுதான்.
இதைச் சொன்னால் முதலாளிகள் செய்த தவறுக்கு முதலாளித்துவமா காரணம் என்று சிலர் வழக்கமாக கேட்பார்கள்.  சோசலிசத்தில் ஒரு கம்பெனியின் மேலாளர் இதே போன்று உற்பத்தியை ஊதிப் பெருக்கிக்காட்டுகிறார் என்று வைப்போம். அப்பொழுது சோசலிசம் தவறு என்று சொல்லலாமா? இதுவும் ஒரு கேள்வி.
தோஷிபா தவறு
இன்றைக்கு தோசிபா நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் விசாரணைக்கமிட்டியே ஊழலைக் கண்டுபிடித்து இருக்கிறது.
இப்படிக்கேள்வி கேட்பவர்கள் அடிப்படையில் ஒரு கோட்பாட்டுடனே நம்மை அணுகுகிறார்கள். இந்தக் கோஷ்டியின் கோட்பாட்டின்படி “ஆசை என்பது மனிதனின் இயல்பு. ஆசைகள் இருக்கிற இடத்தில் இதுபோன்று தவறுகள் நடக்கும். பொதுவுடமைச் சமூகம் தனிமனித ஆசைகளைக் கட்டுப்படுத்துகிறது. ஆகையால் அத்தகைய சமூகமே நீடிக்காது” என்று கம்யூனிஸ்டுகளை புத்தம் சரணம் கச்சாமி என்று புத்தர்களாக காட்டுகிறார்கள். மறுபக்கம், “இப்படி தவறுகள் நடப்பது இயல்பு” என்கிறார்கள்.
நாம் அவர்கள் பார்வையின் படியே சற்று அணுகுவோம். ஒரு கம்பெனியில் ஆசையின் பொருட்டு மனிதன் ஊழல் செய்கிறான் என்று வைப்போம். இதைத் தீர்ப்பதற்கு அல்லது தவறுகளை களைவதற்கு கம்யுனிசமோ கம்யுனிஸ்டுகளோ தேவையில்லை. இன்றைக்கு தோசிபா நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் விசாரணைக்கமிட்டியே ஊழலைக் கண்டுபிடித்து இருக்கிறது என்று வைப்போம். சோசலிச நடைமுறை சுட்டிக்காட்டுவது இதைத்தான். தங்களுக்குள் ஏற்படும் தவறுகளை, ஆசை உணர்வுகளை மனிதர்கள் தங்கள் குழுக்களுக்குள்ளாகவே தீர்த்துக்கொள்ள இயலும்.
ஆனால், மனித உணர்வுக்கு அப்பால், குழு செயல்பாட்டுக்கு வெளியே தன்னிச்சையாக செயல்படும் மூலதனம் தோற்றுவிக்கும் முரண்பாட்டிற்கு எது தீர்வு? இது தான் கம்யுனிஸ்டுகள் முதன்மையாகக் கேட்கிற கேள்வி!
இதற்கு விடையளிக்க வேண்டிய முதலாளித்துவ சட்டமும் அரசும் தோசிபாவின் விசயத்தில்  என்ன செய்து கொண்டிருக்கின்றன?
அரசு என்பது யாருக்கானது?
கார்ப்பரேட் கவர்னன்ஸ் வேண்டும் என்று கேட்கிற வர்க்கங்களின் பிரதான நலன்கள் என்ன? இதுபற்றி மறந்தும் மூச்சுக்கூட விடமாட்டார்கள் முதலாளிகளும் அவர்தம் அடிப்பொடிகளும்.
ஏனெனில் ஓர் உற்பத்தி சமூகமயமாகிருக்கிறபொழுது, இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ முறையில் இலாபம் கிடைக்க வேண்டுமானால் சுரண்டுபவன் ஒருவனாக சுரண்டப்படுபவன் ஒருவனாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தொழிலாளர்கள்
குறைந்த கூலியைப் பெறும் தொழிலாளிகள் இருக்க வேண்டும்.
அதாவது தோசிபாவின் இலாபவெறியை நிறைவு செய்ய,
  • குறைந்த கூலியைப் பெறும் தொழிலாளிகள் இருக்க வேண்டும்.
  • கைப்பாவை அரசு இருக்க வேண்டும்.
  • கைக்கூலி மோடி இருக்க வேண்டும்! மானியங்கள் வெட்டப்பட வேண்டும்.
  • அரசும் சட்டமும் நீதி எந்திரங்களும் வளைக்கப்படவேண்டும்.
ஆக இங்கு தெளிவாக நிரூபணமாகியிருப்பது விசாரணைக் கமிசன்களின் தேவையல்ல. அது எந்த உற்பத்தி சமூகத்திலும் செயல்பட முடியும்.
ஆனால் தொழிலாளிகளுக்கென்று சட்டமும் அரசும் அதிகாரமும் இல்லையென்றால் நடப்பது என்ன என்பதுதான் கேள்வி? அல்லது ஆசைக் கோட்பாட்டை சற்று மாற்றிப்போடுவோம். தொழிலாளிகள் தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள தடுப்பது எது? ஏன் இங்கு மட்டும் முதலாளிகள் தொழிலாளிகளின் அதிகாரத்தைக் கண்டு பயப்படவேண்டும்?
இங்கே தான் அரசு என்பதன் தார்மீக நிலைப்பாட்டை புரிந்துகொண்டு நாம் முதலாளித்துவத்தை அம்பலப்படுத்துகிறோம்.
கைக்கூலி மோடி
கைக்கூலி மோடி இருக்க வேண்டும்! மானியங்கள் வெட்டப்பட வேண்டும்.
ஒவ்வொரு நாட்டிலும் மூன்று பிரதான வர்க்கங்கள் இருக்கின்றன. பெரும்பான்மையாக தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் சுயதொழில் செய்வோர் முதல் வகை. இவர்தம் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இங்கு அரசோ, நீதிமன்றமோ, காவல்துறையோ பத்திரிகைகளோ கிடையாது. பாட்டாளி வர்க்கம் தன்னை விடுவித்துக்கொள்ள தம்மைத் தாமே அமைப்பாக்கிக் கொண்டு போராடுவதைத் தவிர வேறு யாரையும் நம்பியிருக்க முடியாது.
இரண்டாவது வகையில் வருபவர்கள் நடுத்தரவர்க்கம். அறிவுத்துறையினர், நடுத்தர அரசு அலுவலர்கள், நடுத்தர வணிகர்கள், பெருமளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயம் செய்யும் விவசாயிகள். இவர்கள் ஒன்று இரங்கத்தக்க சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைப்பது; அல்லது சமூகத்தில் இழிநிலையில் தான் மட்டும் தப்பித்தால் போதுமானது என்று வாழ்பவர்கள்.
தண்ணீர் தனியார்மயமும் விவசாயிகளின் தற்கொலையும் இவர்களை ஒருபோதும் அசைத்ததில்லை. பங்குச்சந்தையில் முதலீடு, வாழ்நாள் முழுவதும் வீட்டு லோன், கார் லோன் கட்டுவது என்று சமூகத்திலிருந்து தம்மை துண்டித்துக் கொண்டு உதிரிகளாக இருப்பவர்கள்.
மூன்றாவதாக வருபவர்கள்; பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், அரசின் அங்கங்கள், இராணுவம், காவல் துறை, பன்னாட்டு நிதி முனையங்கள், ஏகாதிபத்திய அரசுகள்.
இதில் தோசிபாவின் விசயத்தில் தீர்மானம் செய்பவர் யார்? கார்ப்பரேட் கவர்னென்ஸ் வேண்டுமென்று கேட்டவர் யார்? சப்பானின் நிதியமைச்சர் முதலீட்டாளர்களுக்கு சாதகமான நிலைமை உருவாக்கப்படும் என்று சொன்னது யாருடைய நலன்களுக்காக? தொழிலாளிகள் விசயத்தை இதில் யார் பிரதிநிதித்துவப்படுத்தியது? பத்திரிகைகள் எங்கே போயின? நீதிமன்றங்கள் எங்கே?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளை எந்தப் பாசாங்கும் இன்றி நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். மூலதனத்தின் முரண்பாட்டை தீர்க்க வேண்டுமென்றால், நாம் மேலடுக்கை அப்புறப்படுத்த வேண்டும். முதலாளிகளுக்கு முட்டுக்கொடுக்கும் நான்கு தூண்களும் நமக்கானதல்ல. இதுதான் தோசிபாவின் விசயத்தில் நாம் அடையாளம் காண்கிற விசயங்கள். vinavu.com


– இளங்கோ
குறிப்புகள் எடுக்கப் பயன்பட்டவை
  1. Toshiba CEO quits over accounting scandal
  2. Toshiba scandal grew from numbers ‘too embarrassing’ to show
  3. Comparing and Contrasting the Class Struggle in Latin America: 2000-2015 James Petras

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக