சனி, 25 ஜூலை, 2015

இன்னொரு பூமி கண்டுபிடிப்பு

ariviyal.in :ந்மது பூமியிலிருந்து மிக மிகத் தொலைவில்  இன்னொரு பூமி -
அதாவது நமது பூமி மாதிரியில் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமது பூமியானது சூரியனை ( சூரியன் ஒரு நட்சத்திரமே) சுற்றி வருகிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூமி போன்ற கிரகமும் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இப்படி ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கலாம். சூரிய மண்டலத்துக்கு அப்பால் விண்வெளியில்  ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. அப்படியான நட்சத்திரங்களும் சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் போலவே கிரகங்களைப் பெற்றிருக்கலாம் என நீண்டகாலமாக ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் அந்தக் கிரகங்களைக் கண்டுபிடிப்பதில் நீண்ட காலமாகப்  பல பிரச்சினைகள் இருந்து வந்தன.


ஆனால் நாஸாவின் கெப்ளர் டெலஸ்கோப்  புதிய முறையைப் பின்பற்றி அந்த கிரகங்களைத் தேட முற்பட்டது. இவ்விதம் விண்வெளியை ஆராய்ந்ததில் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 1000 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இவை அனைத்துமே பனிக் கட்டியால் மூடப்பட்ட  உருண்டைகள்.

இதல்லாமல் இப்படி கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்கள் ( பனி உருண்டைகள்) எல்லாமே நமது வியாழன் கிரகம் அளவுக்கு அல்லது அதை விட வடிவில் பெரியவையாக உள்ளன.( வியாழன் கிரகம் பூமியைப் போல 1400 மடங்கு பெரியது)

கெப்ளர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ள கிரகம் இப்படியாக
இருக்கலாம் என ஓவியர் கற்பனையாக வரைந்த படம்.
பூமி மாதிரி ஒரு கிரகம் தென்படுமா என்று விஞ்ஞானிகள் தேடி வந்தனர். பூமி மாதிரி என்றால் என்ன? சூரியனுக்கு   அருகாமையில் இருந்தால் வெப்பம் பொசுக்கி விடும். சூரியனிலிருந்து மிக அப்பால் இருந்தால் போதுமான வெப்பம் கிடைக்காமல் எல்லாமே உறைந்து பனிக்கட்டி ஆகிவிடும். அப்படியில்லாமல் பூமியானது சரியான தூரத்தில் உள்ளது.

   எனவே பூமி மாதிரி என்றால் ஒரு கிரகம் தனது நட்சத்திரத்திலிருந்து  உகந்த தூரத்தில் இருக்க வேண்டும். காற்று மண்டலம் இருக்க வேண்டும். தண்ணீர் இருக்க வேண்டும்.  கிட்டத்தட்ட பூமி சைஸில் இருக்க வேண்டும். இவ்வளவு நாள் தேடியதற்குப் பிறகு இப்போது தான் பூமி மாதிரியில்   ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கிரகம் பூமியை விட சற்றே பெரியது. அதாவது 60 சத விகிதம் பெரியது. அது சுற்றி வருகின்ற நட்சத்திரம்  நமது சூரியனை விட சற்றே பெரியது.  எனவே மேற்படி கிரகத்துக்குப் போதுமான வெப்பம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நமது பூமி சூரியனிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளதோ  (15கோடி கிலோ மீட்டர்)   அதை விட சற்று அதிக தூரத்தில்  இப்போது கண்டுபிடித்துள்ள  கிரகம் உள்ளது. அனேகமாக அந்த கிரகம் பூமி போல கல், மண், பாறை ஆகியவற்றால் ஆனதாக இருக்க வாய்ப்பு உள்ளது. காற்று மண்டலம் உள்ளது. எரிமலைகளும் உள்ளன.

சூரியனை பூமியானது ஒரு தடவை சுற்றி முடிக்க 365 நாட்கள் ஆகின்றன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இன்னொரு பூமியானது தனது நட்சத்திரத்தை ஒரு தடவை சுற்றி முடிக்க 385 நாட்கள் ஆகின்றன. பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள். இன்னொரு பூமியின் வயது 600 கோடி ஆண்டுகள். எனவே உயிரினம் தோன்றியிருப்பதற்கான வாய்ப்பு உண்டு..

 இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகத்துக்கு கெப்ளர் 452b  என்று பெயரிட்டுள்ளனர். அது தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது.

கெப்ளர் விண்வெளி டெலஸ்கோப்  (Kepler Space Telescope) 2009 ஆம் ஆண்டில் உயரே செலுத்தப்பட்டது. அது சூரியனை சுற்றி வந்தபடி விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களை ஆராய்ந்து அவற்றுக்கு உள்ள கிரகங்களைக் கண்டுபிடித்து வருகிறது.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள் "இன்னொரு பூமியை" நேரில் போய் ஆராய்ந்தால் என்ன என்று கேட்கலாம். அது சாத்தியமற்றது. ஏனெனில் அது பூமியிலிருந்து 1400 கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது.

பூமியிலிருந்து சிக்னல் வடிவில் :ஹலோ: என்று சொன்னால் சிக்னல்கள் போய்ச் சேர 1400 ஆண்டுகள் ஆகும்.  452b  கிரகத்தில் உள்ளவர்கள் (யாரேனும் இருந்தால்) பதிலுக்கு ஹலோ சொன்னால் சிக்னல்கள் நமக்கு வந்து சேர மேலும் 1400 ஆண்டுகள் ஆகும். இங்கு பூமியில் அந்த சிக்னல்களைப் பெறுகிறவர்கள் என்ன என்று புரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக