வியாழன், 2 ஜூலை, 2015

அகதிக்கான அங்கீகாரம் கொடுங்கள்: இலங்கையில் இருந்து வந்தவர்கள் கோரிக்கை

இலங்கையில் இருந்து குடும்பத்துடன் இந்தியா திரும்பிய தங்களுக்கு அகதிகளுக்கான அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது:
திருவண்ணாமலை அத்தியந்தல் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் விடுதலை செல்வன். செங்கல் சூளையில் வேலை செய்கிறார். இவரது தந்தை சத்தியசீலன், தாய் பரமேஸ்வரி, சகோதரிகள் ரோஸ் மேரி மற்றும் அஞ்சலி தேவி. இவர் கள் அனைவரும் அத்தியந்தல் முகாமில் ஒன்றாக தங்கியிருந்தனர்.
கடந்த 2010-ம் ஆண்டு இந்திய அரசின் அனுமதியுடன் சத்யசீலன், பரமேஸ்வரி, ரோஸ்மேரி, அஞ்சலி தேவி ஆகியோர் மட்டும் இலங்கை சென்றனர்.
விடுதலை செல்வன் திருமணம் செய்து கொண்டு அத்தியந்தல் முகாமில் தங்கிவிட்டார். அவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி சத்யசீலன், பரமேஸ்வரி, ரோஸ்மேரி, அஞ்சலி தேவி ஆகியோர் படகு மூலம் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்தனர். அப்போது, ரோஸ்மேரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்கள் வந்த படகு தனுஷ்கோடி அருகே பழுதடைந்தது.
கடலோர காவல் படையினர்கள் இவர்களை கைது செய்து தனுஷ் கோடிக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பிறகு அனைவரும் அத்தியந்தல் முகாமில் உள்ள விடுதலை செல்வன் வீட்டில் தங்கி யுள்ளனர். சமீபத்தில் ரேஸ்மேரிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
சத்யசீலன் உள்ளிட்ட 5 பேருக்கும் இதுவரை அகதிகளுக்கான அடையாள அட்டை மற்றும் அரசின் பிற உதவிகள் வழங்கவில்லை. இதனால், குடும்பம் நடத்த சிரமமாக உள்ளது. மேலும், வேலைக்காக வெளியிடங்களுக்கு செல்ல முடியவில்லை. எனவே, அகதிகளுக்கான அடையாள அட்டை மற்றும் மறுவாழ்வு நிதியுதவி வழங்க வேண்டும் எனக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். விரைவில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்./tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக