ஞாயிறு, 28 ஜூன், 2015

பாலியல் வன்முறை வழக்குகளில் புதுப்புது திருப்பங்கள் 3 வழக்குகளில் சர்ச்சைக்கு உரிய தீர்ப்புகள்?

சென்னை உயர் நீதிமன்றத்தில், பாலியல் வன்முறை வழக்குகளில், கடந்த வாரம், மூன்று விதமான தீர்ப்பு, ஒரே நீதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.முதல் வழக்கில் சமரசம்; அடுத்த வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி; மூன்றாவது வழக்கில், தண்டனையை குறைத்து விடுதலை என, மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.* கடலுார் மாவட்டத்தை சேர்ந்த மோகன் என்பவருக்கு, 15 வயது சிறுமியை, பாலியல் வன்முறை செய்த வழக்கில், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்க கோரிய மோகனின் மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ், இந்த வழக்கை, சமரச மையத்தில், தீர்வு காண அனுப்பி வைத்தார். மேலும், மோகனுக்கு இடைக்கால ஜாமினும் வழங்கினார். இந்தத் தீர்ப்பை, சமூக ஆர்வலர்களும், பெண் வழக்கறிஞர்களும் கடுமையாக விமர்சித்தனர். அதே நேரத்தில், நீதிபதியின் உத்தரவுக்கு, சில தரப்பில் ஆதரவும் காணப்பட்டது. 


* ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார், ஐந்து வயது சிறுமியை, பாலியல் வன்முறை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், செஷன்ஸ் நீதிமன்றத்தில், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மேல் முறையீட்டு வழக்கில், 10 ஆண்டு தண்டனையை, நீதிபதி தேவதாஸ் உறுதி செய்தார்.

* மூன்றாவது வழக்கு:

விழுப்புரம் மாவட்டம், காக்களுர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும், காதலித்தனர். திருமணம் செய்து கொள்வார் என, மனோகரனை அந்த பெண் நம்பினார்.இதனால், இருவருக்கும் உடல் ரீதியான தொடர்பு ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள, மனோகரனின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர் தலைவராக இருந்த, சுப்ரமணியனிடம் புகார் கூறினர்.இதையடுத்து, காக்களூர் போலீசில், பழங்குடியின பெண் புகார் அளித்தார். பாலியல் வன்முறை செய்ததாக, மனோகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அவரது பெற்றோர், முருகையன், சின்னப்பொண்ணு; முன்னாள் தலைவர் சுப்ரமணி மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2007ல், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை, விழுப்புரம், முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது. மனோகரனுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பெற்றோர் மற்றும் சுப்ரமணியனுக்கு, தலா, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. 2009ல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தண்டனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனோகரன் உட்பட, நான்கு பேரும் மேல்முறையீடு செய்தனர்.

மனோகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கவதனா, ''செஷன்ஸ் நீதிமன்றம் தண்டனை விதித்த பின், 2011ல், அந்தப் பெண்ணை, மனோகரன் திருமணம் செய்துள்ளார்; அவர்கள் சந்தோஷமாக உள்ளனர். பெண் குழந்தையும் பிறந்தது. அவர், சிறை தண்டனையை அனுபவிப்பது, இருவரையும் பிரிப்பது போலாகும். இருதரப்பிலும் சமாதானம் ஏற்பட்டு, சந்தோஷமாக வாழ்கின்றனர்,'' என்றார்.நீதிமன்றத்தில், மனோகரனின் மனைவியும் ஆஜரானார். அவர் தரப்பில், தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனோகரன், குழந்தையுடன், சந்தோஷமாக வாழ்வதாகவும், கணவர் வீட்டில் நன்கு கவனித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த, நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு: மனோகரனும், அந்தப் பெண்ணும் காதல் பறவைகள். பெண்ணின் சாட்சியம் மற்றும் மருத்துவ ஆதாரங்கள் மூலம், மனோகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. தண்டனை விதிக்கப்பட்ட பின், மனோகரனை மன்னித்து, கணவனாக ஏற்றுக் கொண்டதாகவும், சந்தோஷமாக வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார். மனோகரனை சிறைக்கு அனுப்பினால், குழந்தையுடன் சிறைக்கு சென்று பார்க்க வேண்டும் என்றார்.இந்த சூழ்நிலையில், என்ன செய்யலாம்; மனோகரனை சிறைக்கு அனுப்ப வேண்டுமா; அல்லது மனைவி, குழந்தையுடன் வாழ அனுமதிக்க வேண்டுமா? தண்டனை விதிக்கும் முன், குற்றத்தினால் சமூகத்தில் ஏற்படும் விளைவு, குற்ற தன்மை, குற்றம் சாட்டப்பட்டவரின் தன்மை, திருந்துவதற்கான வாய்ப்பு, போன்ற பல அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அது, வழக்கின் தன்மை, சூழ்நிலையைப் பொறுத்தது. இருவரும், திருமணம் செய்து சந்தோஷமாக உள்ளனர். மனைவி, குழந்தையின் சந்தோஷத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், கணவனை சிறைக்கு அனுப்புவதில், எந்த பலனும் இல்லை.கருணை அடிப்படையில், நீதி இருக்க வேண்டும். நீதியின் கம்பீரம், அதன் பெருந்தன்மையில் உள்ளது. நீதிமன்றங்கள், மணல், செங்கற்களால் கட்டப்பட்டவை. ஆனால், மனிதர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.எனவே, மனோகரன் அனுபவித்த சிறை தண்டனையே போதுமானது. அவருக்கான சிறை தண்டனை குறைக்கப்படுகிறது. அவரது பெற்றோர், முன்னாள் தலைவரையும், விடுதலை செய்கிறேன். இவ்வாறு, நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக