புதன், 6 மே, 2015

பவர் ஸ்டார் மோடி பாரிசில் வாங்கிய ரபேல் விமானங்களை சு.சுவாமி ஏன் எதிர்க்கிறார்? பங்காளி ? பங்கு? எது பிரச்சனை?

மோடி - பிரான்ஸ் அதிபர்மொரிசியஸ் போயாச்சு, பாரிஸ் போக வேண்டாமா என்று ஐரோப்பாவுக்கு விளம்பரச் சுற்றுலா சென்று வந்த பவர் ஸ்டார் மோடி, பல்லாயிம் கோடி ரூபாய் செலவில் 36 நவீன மூட்டைப் பூச்சி நசுக்கும் எந்திரங்களை வாங்க முடிவு செய்தார். இதற்காக பிரான்ஸ் அரசாங்கத்தோடு கையெழுத்திட்டுள்ளார். தஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவின் தலையில் கட்டவுள்ள 36 ரஃபேல் போர் விமானங்கள் தாம் அந்த ‘நவீன’ மூட்டைப் பூச்சி எந்திரங்கள்.
“ரஃபேல் போர் விமானங்களில் மைலேஜ் கம்மி என்பதால் அதை வாங்கக் கூடாது” என இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கொதித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. இந்தியா தனது இராணுவத்துக்கு தீனி போட பில்லியன் கணக்கான டாலர்களை அழுது வருவதால், அதில் அமெரிக்க மற்றும் இசுரேலின் பங்கிற்காக அந்நாடுகளின் ‘தூதர்’ சுப்பிரமணியன் சுவாமி கொதிப்பது வெறும் பங்காளிச் சண்டைதான்.

பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் ரஃபேல் விமானங்களை வாங்க கையொப்பமிட்ட தேச துரோகி மோடியின் சிரிப்பு.
இன்னொருபுறம் ‘பறக்கத் தயார்” நிலையில் உள்ள போர் விமானங்களை பிரதமர் கோரியிருப்பதால், அவரது “மேக் இன் இந்தியா” கொள்கைக்கு முரணாக உள்ளதே என்று சில ஆங்கில நாளேடுகள் கவலையை வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆனால், மேக் இன் இந்தியா என்பதே பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மோடி போடும் கறி விருந்து தான் என்பதை மூடப்பட்ட நோக்கியா ஆலையும் நாடெங்கும் பரவிக் கிடக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன.
மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களும், சில இராணுவ போர்தந்திர ஆய்வு பத்திரிகைகளும், “அதிக செலவு வைக்கும் ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு பதில், குறைந்த செலவில் அதிக செயல் திறனோடு இயங்கும் சுகோய் 35 வகைப்பட்ட விமானங்களை வாங்கியிருக்கலாம்” என்று எழுதுகின்றன. ஒருவேளை சுகோய் ரக விமானங்ளை வாங்கா விட்டாலும் ரஃபேல் விமானங்களை வாங்காமல் இருத்தல் நலம்.
இரட்டை என்ஜின்களைக் கொண்ட ரஃபேல் விமானங்கள் பல சந்தர்ப்பங்களில் கூட்டுப் பயிற்சிகளின் போது விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. இதன் என்ஜின்கள் திடீரென்று செயலிழந்து விடக்கூடிய தன்மை கொண்டதாக இராணுவத் துறை ஆய்வுப் பத்திரிகைகள் எழுதுகின்றன. இராணுவ விமானக் கண்காட்சிகளிலும் ரஃபேல் விமானங்கள் மிக மோசமான முறையில் தோல்வி கண்டுள்ளன. செயல் திறன் குறைவு என்பதோடு இதன் வகையில் உள்ள பிற போர் விமானங்களை ஒப்பிடும் போது அதிக விலை கொண்டதாகவும் ரஃபேல் விமானங்கள் உள்ளன.
உலகிலேயே பிரம்மாண்டமான தின்னி மடக் கூட்டமான இந்திய இராணுவத்திற்கு செய்யும் செலவும், ஓட்டை வாளியில் நீர் அள்ள முயற்சிப்பதும் ஒன்று தான் என்பது ஒருபுறமிருக்க, அப்படிச் செய்யப்படும் செலவு என்பது மக்கள் பணம் என்பதே நமது கவலைக்குரியது. மக்களுடைய வரிப்பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவு செய்வதை கடுமையாக எதிர்க்கும் முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள், பவர் ஸ்டார் மோடி, பை நிறைய காசைக் கொடுத்து கை நிறைய கழுதை விட்டைகளை அள்ளி வந்திருப்பதை அங்கீகரிக்கிறார்கள்.
சுப்பிரமணிய சாமி எதிர்ப்பு
ரஃபேலை எதிர்த்து, அமெரிக்க மற்றும் இசுரேலின் பங்கிற்காக அந்நாடுகளின் ‘தூதர்’ சுப்பிரமணியன் சுவாமியின் கொதிப்பு
ரஃபேல் விமானம் செயல் திறனற்றது என்கிற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, விமான பேரம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் இரத்த வெள்ளத்தின் மேல் நடந்திருக்கிறது.
1983-ம் ஆண்டு பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து ஐரோப்பாவின் எதிர்கால போர் விமானம் ஒன்றைத் தயாரிக்க முன்வந்தன. என்பதுகளின் இறுதியில் கூட்டு விமானத் தயாரிப்பிலிருந்து பிரான்ஸ் விலகி பின் சொந்த முறையில் தஸ்ஸால்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்ததுதான் ரஃபேல் விமானங்கள். மற்ற கூட்டு நாடுகள் இணைந்து “யூரோ பைட்டர்” என்ற போர் விமானத்தை தயாரித்து வருகின்றன.
இவ்விரு விமானங்களும் பனிப் போரால் உலக நாடுகளிடையே தீவிரமடைந்திருந்த முறுகல் நிலையையே தமக்கான சந்தைகளாக குறிவைத்திருந்தன. 1990-களின் துவக்கத்தில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் போர் விமானங்களுக்கான சந்தைத் தேவை திடீரென்று குறுகிப் போனது. பனிப்போரின் முடிவுக்குப் பின் வந்த இரண்டு பத்தாண்டுகளில் சர்வதேச இராணுவ தளவாட சந்தையை அமெரிக்கா, இரசியா பிரதானமாகவும் இசுரேல் குறிப்பிட்ட அளவும் கட்டுப்படுத்தின.
பனிப்போருக்குப் பின் நடந்த முதலாம் வளைகுடா அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தமும், பின்னர் ஈராக், ஆப்கான் ஆக்கிரமிப்பு போர்களும் அமெரிக்காவின் நவீன ஆயுதங்களுக்கான பரிசோதனைக் கூடங்களாக விளங்கின. இந்த நிலையில் சரியான ‘பரிசோதனைக்’ கூடங்கள் கிடைக்காமல் அல்லாடி வந்த ஐரோப்பிய நாடுகளுக்கு லிபியாவும், சிரியாவும் நல்வாய்ப்பை வழங்கின.
ஈராக், ஆப்கான் போரில் போட்ட காசை முழுமையாக எடுக்க அமெரிக்கா சிரமப்பட்டு வந்த நிலையில், லிபிய படையெடுப்பு மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒடுக்குவது என்ற பெயரில் சிரியா மற்றும் ஈராக்கில் தான் செய்த தலையீட்டிற்கான செலவுகளை மற்ற நேட்டோ நாடுகளின் தலையில் சுமத்தியது.
ரஃபேல் விமானங்கள்
செயல் திறன் குறைவு என்பதோடு இதன் வகையில் உள்ள பிற போர் விமானங்களை ஒப்பிடும் போது அதிக விலை கொண்டதாகவும் ரஃபேல் விமானங்கள் உள்ளன.
அதாவது, போர்ச் செலவுகளை நேட்டோ நாடுகள் பகிர்ந்து கொண்ட அதே வேளையில்  ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளை போர் தந்திர ரீதியில் கட்டுப்படுத்துவது மற்றும் போரினால் சீரழிக்கப்பட்ட அந்நாடுகளின் மறுகட்டுமான பணிகளில் கொள்ளையடிப்பதை அமெரிக்கா தனது பங்காக பிரித்து எடுத்துக் கொண்டது. இந்த ஏற்பாட்டில் இராணுவ ரீதியில் எதிர்த்து நிற்கும் திராணியற்ற இந்நாடுகளின் மேல் தங்களது ஆயுதங்களை பரிசோதித்துக் கொள்ளும் பொன்னான வாய்ப்பு பிரான்சுக்கும், பிரிட்டனுக்கும் கிடைத்தது.
லிபியாவின் வான்பரப்பில் சீறிப்பாய்ந்த “டைஃபூன்” மற்றும் “ரஃபேல்” விமானங்கள் எந்தத் தடையுமின்றி தமது ‘திறமையை’ பறைசாற்றிக் கொண்டன. இதில் ஏற்கனவே லிபியா, பிரான்சிடம் வாங்கி வைத்திருந்த மிராஜ் வகை போர் விமானங்களை அழித்தொழித்து தனது சாதனையை ரஃபேல் விமானங்கள் நிலைநாட்டியது ஒரு முரண்நகை.
விற்பனைக்குத் தயாராகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நாட்டாலும் சீந்தப்படாமல் மூலையில் கிடந்த ரஃபேல் விமானங்கள் லிபிய ஆக்கிரமிப்புப் போருக்குப் பின் தான் உலகின் கவனத்திற்கு வந்தது. திருப்பித் தாக்கும் வலுவற்ற நாடு ஒன்றின் மேல் தனது வலிமையைப் பறைசாற்றிக் கொண்ட பெருமையோடு பல்வேறு நாடுகளின் இராணுவத்தை அணுகியது பிரான்ஸ்.
எனினும், பிரேசில், கனடா, அல்ஜீரியா, கிரீஸ், மொராக்கோ, ஓமன், நெதர்லாந்து, நார்வே, சிங்கப்பூர், தென்கொரியா மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகள் ரஃபேல் விமானங்களின் செயல் திறன் குறைவை காரணம் காட்டி அவற்றை கொள்முதல் செய்ய மறுத்தன. வாடிக்கையாளர்கள் இன்றி தவித்து வந்த நிலையில் தஸ்ஸாட் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை ஏர்பஸ் நிறுவனம் விற்க முடிவு செய்தது நெருக்கடியை மேலும் கூட்டியது.
ஏறக்குறைய கடையை மூடும் நிலைக்குச் சென்று விட்ட தஸ்ஸாட் நிறுவனத்தை மோடி தான் காப்பாற்றி இருக்கிறார். உத்தராஞ்சல் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட 15,000 குஜராத்தியர்களை என்பது இன்னோவா கார்களின் மூலம் இரண்டே நாளில் காப்பாறியதற்குப் பின் மோடி செய்திருக்கும் பிரமாண்டமான சாகசம் இது தான். ஆனால், இந்த முறை சாகசத்தின் விலையை மக்கள் அழ வேண்டியிருக்கிறது.
எல்லாவற்றிலும் முதலாவதாக வரும் மோடி இந்த விசயத்தைப் பொருத்தவரை இரண்டாவதாகத்தான் வருகிறார். எகிப்து இந்தியாவை ஏற்கனவே முந்தி விட்டது. ஆளே இல்லாத டீக்கடையில் தன்னந்தனியாக நின்று தவித்துக் கொண்டிருந்த பிரான்சிடமிருந்து எகிப்து 5.9 பில்லியன் டாலர் மதிப்பில் 24 ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்ய பிரான்சுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.
வண்ணப்புரட்சிக்குப் பின் மேற்கத்திய நாடுகளின் பொம்மைகளைக் கொண்டு ஆளப்படும் எகிப்து பிரான்சின் பொம்மை விமானத்தை வாங்கியதைப் புரிந்து கொள்ள முடிகிறது; ஆனால், ஆர்.எஸ்.எஸின் சுதேசித் தயாரிப்பான 56 இன்சு மார்பு கொண்ட சுதேசி வீரரான மோடி பிரான்சு தயாரித்துள்ள மூட்டைப்பூச்சியைக் கொல்லும் நவீன இயந்திரத்தை ஏன் வாங்க வேண்டும்?
பவர் ஸ்டார் மோடி
பவர் ஸ்டார் மோடி, பை நிறைய காசைக் கொடுத்து கை நிறைய கழுதை விட்டைகளை அள்ளி வந்திருக்கிறார்.
இந்தியா கொள்முதல் செய்யவுள்ள 36 விமானங்களுக்கான விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளிவரவில்லை. என்றாலும், பிரேசிலைச் சேர்ந்த இராணுவ ஆய்வுப் பத்திரிகைகள் இந்த வணிகத்தின் மதிப்பை 1200 கோடி  டாலர்களாக (சுமார் ரூ 72,000 கோடி) இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளன.
ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வளவாக இருந்தாலும் அது ஏழை இந்தியர்கள் செலுத்திய வரிப்பணம். இந்திய மக்களை கசக்கிப் பிழிந்து திரட்டிய நிதியைக் கொண்டு பல்லாயிரம் லிபியர்களையும் சிரிய மக்களையும் கொன்று குவித்து தனது திறனைப் பரிசோதித்துக் காட்டிய போர்க்கருவியை வாங்கியுள்ளார் மோடி.
தமது போர்தந்திர நோக்கங்களைக் கடந்து பொருளாதார காரணங்களும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களைச் செலுத்தும் மிக முக்கியமான காரணி. அந்த வகையில், தமது இராணுவத் தளவாடங்களை சந்தைப்படுத்துவதற்கு முன் அவை எதார்த்த நிலைமைகளில் சோதித்தறியப்பட்டவை (Tested and prooven under practical conditions)  என்று வாடிக்கையாளர்களுக்கு நிரூபிக்கும் வாய்ப்பாகவும் போர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
எனவே, இந்தியாவின் இராணுவக் கொள்முதலை வீண் பொருளாதாரச் சுமை என்பதைத் தாண்டி தார்மீக அறத்தின் பாற்பட்டும் நாம் எதிர்த்தாக வேண்டும்.
- தமிழரசன். வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக