புதன், 6 மே, 2015

மோடியின் துதிபாடிகளால் நாசமாய் போன நேபாள உறவு! எழவு வீட்டில் சீரியல் எடுத்த இந்திய ஊடகங்கள் !

nepal 2ப்ரல் 25-ம் தேதி நேபாளத்தைத் தாக்கிய பூகம்பம் 7,500-க்கும் மேற்பட்ட மக்களை பலி வாங்கி 15,000-க்கும் அதிகமான மக்களைக் காயப்படுத்தியுள்ளது. 7.8 ரிக்டர் அளவில் நேபாளத்தின் இமயத்தின் அடிவாரத்திலுள்ள கோர்க்கா மாவட்டத்தின் பார்பக் பகுதியைத் தாக்கிய பூகம்பம் மொத்த நாட்டையும் குலுக்கிப் போட்டது. இதன் அதிர்வுகள் இந்தியத் துணைக் கண்டமெங்கும் எதிரொலித்தது.
கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் இடிபாடுகளிடையே இருந்து மீட்கப்படும் பிணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மீட்பு நடவடிக்கைகளில் உடனடியாக தலையிட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றென்பது ஆச்சரியமான விசயமல்ல.

மூன்று புறங்களில் இந்தியாவாலும் வடக்கே இமயத்தாலும் (சீனா) சூழப்பட்ட நேபாளத்தின் புவியியல் அமைப்பும் அதன் காரணமான வரலாறு மற்றும் அரசியல்  ரீதியான பிணைப்பும் இந்தியாவின் தலையீட்டை அவசியமானதாக்குகிறது.
வறிய நாடான நேபாளத்திற்கு பூகம்பம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் மிகவும் பாரதூரமானது. அதிர்ச்சியிலிருந்து மீளாத நேபாள மக்கள், வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இடிபாடுகளிடையேயிருந்து மீட்டெடுக்கப்படும் துண்டிக்கப்பட்ட கைகளிலும் கால்களிலும் தமது உற்றார், உறவினரின் அடையாளங்கள் ஏதும் உள்ளதாவென நெஞ்சம் பதைக்க தேடிக் கொண்டேயிருக்கிறார்கள்.
உருக்குலைந்து போன நாட்டின் வாழ்வை மீட்கும் வழியை அவர்கள் இன்னமும் கண்டடையவில்லை. கூர்க்காக்களின் நெஞ்சுரம் குறித்து அறியப்பட்ட எண்ணற்ற செவிவழிக் கதைகளை மெய்ப்பிக்கும் விதமாக தங்கள் சொந்த நாட்டு அரசும் அந்நிய தேசங்களும் நெருங்க முடியாத இடங்களில் கையில் எந்த உபகரணங்களும் இன்றி நேபாளிகள் களமிறங்கியுள்ளதாக செய்திகள் வந்த வண்ணமுள்ளன.
மீளமுடியாத சோகத்தினிடையேயும் உதவி செய்வதான போர்வையில் இந்தியா செய்திருக்கும் தலையீட்டை நேபாளிகள் இரசிக்கவில்லை. அதிலும் குறிப்பாக மீட்புப் படையினரின் எண்ணிக்கைக்கு சற்றும் குறையாத எண்ணிக்கையில் களமாடி வரும் இந்திய ஊடகங்களை தீராத வெறுப்போடு நேபாளிகள் காறி உமிழ்கிறார்கள் என்று செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன.
# gohomeindiamedia என்ற ஹேஷ்டேக் தான் கடந்த 3ம் தேதி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முதன்மையான பேசு பொருளானது.
உதாரணத்திற்கு சில ட்விட்டுகள் மட்டும்…
நேபாள அரசோடு இந்திய அரசையும் சேர்த்து எதிர்க்கும் நேபாள மக்கள்!
நேபாள அரசோடு இந்திய அரசையும் சேர்த்து எதிர்க்கும் நேபாள மக்கள்!
”மதிப்புக்குறிய பிணந்தின்னிக் கழுகுகளே, இறந்த உடல்களின் எலும்புகள் வரை சுத்தமாக பொறுக்கி விட்டீர்கள்….. இப்போது நீங்கள் வீட்டுக்குப் போகலாமே” #gohomeindiamedia
”திருவாளர் மோடி அவர்களே.. பெருமைக்குரிய எங்களது தாராகரா ஸ்தூபி வீழ்ந்து விட்டது.. ஆனால், எங்கள் இறையாண்மை இன்னும் வீழவில்லை. #gohomeindiamedia”
“திருவாளர் மோடி அவர்களே, உங்கள் ஊடகங்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள். இவர்களே எங்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை உண்டாக்குகிறார்கள் #gohomeindiamedia”
இன்னும் பல்லாயிரக்கணக்கான ட்விட்டுகள் நேபாளிகளிடமிருந்து மட்டுமல்ல இந்திய ஊடகங்களின் செயல்பாடுகளால் அவமானப்பட்ட இந்தியர்களிடமிருந்தும் குவிந்த வண்ணமுள்ளது.
பூகம்பத்தில் சிக்கி மீட்கப்பட்ட இந்தியர்களில் ஒருவரான நிமிஷ் சிரீவஸ்தவா கூறுவதைக் கவனியுங்கள். “பாதிப்புக்குள்ளான நேபாள மக்களை கும்பலாக நிறுத்தி அவர்களை “மோடி, மோடி” என்று கோஷமிடச் செய்து இந்திய ஊடகவியலாளர்கள் அந்தக் காட்சிகளை படம் பிடித்துக் கொண்டார்கள்” என்கிறார் அவர். “மீட்கப்பட்ட ஒவ்வொரிடமும் மோடியின் இரக்க குணம் பற்றி கேட்டு அவற்றைப் பதிவு செய்து கொண்டதாக”வும் தெரிவித்துள்ளார். அதே சமயம், “மீட்புப் படை தாமதமாக வந்ததாக சிலர் தெரிவித்த கருத்துக்களை கவனமாக கத்தரித்து விட்டார்கள்” என்றும் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
சி.என்.என் செய்தித் தளத்தில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட சுனிதா ஷாகியா என்ற நேபாளத்தைப் பூர்வீகமாக கொண்ட பத்திரிகையாளர், இந்திய ஊடகவியலாளர்கள் தொலைக்காட்சி சீரியல்களைப் போன்ற ‘கதைகளை’ வெறியுடன் தேடியலைந்ததை சாடியிருக்கிறார்.
பிரேக்கிங் நியூசுக்காக வெறிபிடித்து அலையும் இந்திய ஊடகங்கள்!
பிரேக்கிங் நியூசுக்காக வெறிபிடித்து அலையும் இந்திய ஊடகங்கள்!
24/7 ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் இந்திய ஊடக வெளியில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய பின் கடந்த 15 ஆண்டுகளில் ’செய்தியின்’ தன்மை பெருமளவிற்கு மாற்றமடைந்துள்ளதை நாம் அறிவோம். பாரபட்சமின்றி நடப்பு நிகழ்வுகளை செய்திகளாக வெளியிடுவது, நிகழும் செய்திகளைக் குறித்த நடுநிலையான அலசல், அரசியல், பொருளாதாரம் மற்றும் துறைசார் வல்லுநர்களைக் கொண்டு செய்யப்படும் விரிவான ஆய்வுகள் என்பவையெல்லாம் பழைய வரலாறுகள் ஆகிவிட்டன.
செய்தித் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை செய்திகள் ஒவ்வொன்றும் ’கதைகள்’. மக்களின், தேசத்தின் வாழ்வை பாதிக்கும் செய்திகள் வெறும் கதைகளாகச் சுருங்கிய பின்னர், நடக்கும் இரத்தமும் சதையுமான அந்த நிகழ்வுகளில் இருந்து தாம் சொல்லப் போகும் கோணம் எது, அந்தக் கோணத்தை விவரிக்கும் விதம் என்ன,  கதையின் நாயகன் யார், வில்லன் யார், பின்னணி இசைக் கோர்வை எப்படி இருக்க வேண்டும் என்பதே பிரதான முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களாகின.
இவ்வாறாக இந்தியாவின் செய்தித் தொலைக்காட்சி ஊடகங்களைப் பொருத்தவரை எந்த ஒரு உண்மை நிகழ்வும் மசாலா தடவப்பட்ட பதார்த்தம் தான். இதில் ’பதார்த்தத்தை’ உப்பு காரம் தூக்கலாக சுடச்சுட யார் பரிமாறுகிறார்களோ அவர்களுக்கே TRP என்ற வெற்றிக் கோப்பை சன்மானமாக கிடைக்கும்.
இந்தக் கதைகள் வெவ்வேறானதாக இருந்தாலும், இவற்றுக்கு ஒரு இணைப்பு தேவைப்படுகிறது. ஆங்கிலத்தில் Storyline என்பார்கள். ஒரு அணுவுலை வெடிப்பாக இருக்கலாம், அல்லது ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்குள்ளான சம்பவமாக இருக்கலாம், அல்லது ஏதேனும் ஒரு கொலை சம்பவமாக இருக்கலாம், அல்லது விவசாயிகள் கூட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வாக இருக்கலாம்..
சம்பவங்கள் எதுவானாலும், ஊடகங்கள் கதைகளாக சொல்லும் போது அவற்றினூடாக ஒரு கதைவரிசையை (storyline) முன்வைக்கின்றன. இப்படி பல கதைவரிசைகள் உள்ளன, நிகழ்வு எதுவோ அதற்கு பொருத்தமான கதை வரிசைக்குள் ’செய்தியை’ சொருகி தேசியவாத மசாலா தடவி இந்துத்துவ பொதுப்புத்தி என்கிற எண்ணெயில் பொரித்து சூடாகவும் சுவையாகவும் ப்ரைம் டைமில் தமது நடுத்தரவர்க்க வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவதே சமகாலத்திய ஊடக அறம்.
நிவாரணப்பணிகளில் இந்தியா முன்னணியில் இருப்பதற்காக ஒவ்வொரு நிவாரண பொட்டலத்திலும் உங்கள் போட்டோவை போட்டிருக்கிறீர்களே, வெட்கமாக இல்லையா மிஸ்டர் மோடி?
சமீபகாலத்திய கதைவரிசைகள் பலவற்றில் மோடி நாயகன், ராகுல் காந்தி காமெடி வில்லன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பழைய ஊழல்களைப் பற்றிய கதைவரிசைகளில் ஆ.இராசா வில்லன். பொதுவாக காஷ்மீரிகள், இசுலாமியர்கள், திராவிட கருத்தியல் கொண்டவர்கள், பழைய சமூகநீதி பாரம்பரியத்தில் வந்தவர்கள் எல்லாம் நிரந்தர வில்லன்கள். பார்ப்பன இந்து வெறியை உள்ளடக்கமாக கொண்ட இந்திய தேசிய வெறி (Jingoistic Nationalism) தான் எப்போதும் நிரந்தர நாயகன்.
இந்திய அச்சு ஊடகங்கள் தமது இளைய பங்காளிகளான காட்சி ஊடகங்களின் நகல் பிரதி என்பதால் அவற்றைக் குறித்து தனியே சொல்லத் தேவையில்லை.
அமெச்சூர் மல்யுத்த போட்டி பின்னர் தொழில்முறை மல்யுத்த போட்டியாக வளர்ந்து தொலைக்காட்சிகளில் Pay-per-view நிகழ்ச்சியாக இடம்பெற்று கல்லாகட்டத் துவங்கிய  தொண்ணூறுகளில் பிரபலமாக இருந்த WWF பார்த்தவர்கள் நிலைமையை இத்துடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம்.
இந்திய செய்தித் தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி வெறியை தட்டிக் கேட்க நமக்கு சொரணை இல்லை என்றாலும் அதை நேபாளிகள் சுமக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? அதனால் தான் காறி உமிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
நேபாளத்தின் வாழ்வை புரட்டிப் போட்ட பூகம்பம் இந்திய ஊடகங்களுக்கு டி.ஆர்.பி புதையலாக காட்சியளித்துள்ளது. திகிலூட்டும் பின்னணி இசையோடு மலிவான உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக ‘கண்ணீர்’ கதைகளைத் தேடியலைந்துள்ளனர் இந்திய ஊடகவியலாளர்கள். பூகம்பத்தில் பாதிக்கப்பட்டு பெற்ற பிள்ளையை பறிகொடுத்த தாய் ஒருவரிடம் சென்று “இப்போது எப்படி உணர்கிறீர்கள்?” என்று மைக்கை நீட்டியுள்ளார் ஒரு செய்தியாளர். மற்ற செய்திச் சேனல்களுக்குக் கிடைக்காத கதைகளை கண்டு பிடித்து டி.ஆர்.பியை அள்ளும் வெறியில் மீட்பு நடவடிக்கைகளுக்கே இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
நேபாள டெலிகிராப் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றின் படி, மீட்பு நடவடிக்கைகளுக்காக சென்றுள்ள இந்தியாவின் உலங்கு வானூர்திகள் ஒவ்வொன்றிலும் செய்தியாளர்களையே இடத்தை அடைத்துக் கொண்டு சென்றுள்ளனர். விளைவாக, குறைவான கட்டுமான வசதிகளைக் கொண்டிருக்கும் நேபாள இராணுவத்தை விட சொற்ப எண்ணிக்கையிலேயே இந்திய இராணுவம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளது.
தினமும் நான்கு முறை இந்தியாவிலிருந்து நேபாளத்திற்குப் பறக்கும் ’மீட்பு’ விமானம் இங்கிருந்து நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களை சுமந்து சென்றுவாறே உள்ளது. இந்திய பத்திரிகையாளர்கள் நேபாளத்தின் குறுக்கும் நெடுக்குமாக அலைபாய்ந்து தங்கள் தேசத்தின் பெரியண்ணன் தோரணையை, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நேபாளிகள் முன் பீற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து நேபாளிகள் மட்டும் தான் ஆத்திரப்பட வேண்டுமா?
அரசியல் , பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியில் இந்திய ஆளும் வர்க்கம் இந்தத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த பிற நாடுகளின் மேல் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அடாவடித்தனங்களுக்கு ஒரு பின்னணியும் உள்ளது.
சர்வதேச ஏகாதிபத்திய பொருளாதார கட்டுமானத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது இந்தியா. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டலுக்காக இந்த தேசத்தின் எல்லைகள் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அடிமைத்தனமும், அது தரும் எலும்புத் துண்டும்தான் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆன்மாவாக விளங்குகிறது.
அதுதான் பல்லாயிரம் பேரின் உயிரைக் குடித்த போபாலின் துயரத்திற்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியை பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற அனுமதித்ததிலும், அணுவுலைகள் வெடித்து அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மேற்கத்திய நாடுகளைப் பொறுப்பாக்க மாட்டோம் என்று அறிவித்ததிலும் இன்னும் எண்ணற்ற சந்தர்பங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
nepal 5தனக்கு மேலே சில எஜமானர்கள், தனக்குக் கீழே சில அடிமைகள் என்று படிநிலை கலாச்சாரத்திற்கு ஈராயிரம் ஆண்டுகளாக பழக்கப்பட்டுப் போன இந்திய ஆட்சியாளர்கள் துணைக்கண்டத்தைச் சேர்ந்த பிற சிறிய நாடுகளை தனது அடிமைகளாக இயற்கையாகவே கருதிக் கொள்கின்றனர். இந்த நாடுகளுக்கென்று சொந்த இறையாண்மை, சொந்த அரசியல், கலாச்சாரம், பண்பாடு போன்றவை இருக்கின்றன என்கிற எதார்த்த உண்மையை கெண்டைக்கால் மயிரளவுக்கும் மதிப்பதில்லை.
பாலிவுட் குப்பைகளைக் கொட்டி கலாச்சார ரீதியில் அந்நாடுகளை மாசுபடுத்துவது, இந்திய தரகு முதலாளிகளுக்கு அந்நாடுகளின் சந்தையைக் கைப்பற்றிக் கொடுப்பது, இந்திய இராணுவ நலனுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்துவது என்பது போன்ற விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் இந்தியாவின் நிரந்தர வெளியுறவுக் கொள்கை. ஒரு வகையில் பாகிஸ்தானை இந்தியாவின் தொண்டையில் சிக்கிய முள் என்றும் சொல்லலாம்.
அந்த வகையில் இந்த துணைக்கண்ட பிராந்தியத்தில் ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படிந்த வட்டார ரவுடியாக தன்னை நிலைநாட்டும் முயற்சிகளை இந்தியா தொடர்ந்து முன்னெடுத்துக்  கொண்டே இருக்கிறது. மாலத்தீவுகள், வங்க தேசம், இலங்கை, நேபாளம் போன்ற குட்டி நாடுகளை போர்தந்திர ரீதியிலான நோக்கங்களுக்கு உட்பட்டு தனது பிடியில் வைத்துக் கொள்வதற்கு கிடைக்கும் எந்த வாய்ப்பையும் இந்திய ஆளும் வர்க்கம் தவற விடுவதே இல்லை.
அது ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் போராகட்டும், நேபாள நிலநடுக்கமாகட்டும் – ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாடுகளின் குறிப்பான விவகாரங்களில் தலையிடுவதன் நோக்கமே தனது நிரந்தர நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே.
இந்தியாவின் பெரியண்ணன் மனோபாவத்தை சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் தெரிந்தே அனுமதிக்கின்றன. மன்னராட்சியை எதிர்த்துக் கிளர்ந்த நேபாள புரட்சியின் போது தனது அடிவருடியான மன்னரின் சார்பில் தலையிட்ட போதே நேபாளிகளின் ஆத்திரத்திற்கு இந்தியா ஆளானது.
புவியியல் ரீதியில் தனக்கிருக்கும் சாதகமான நிலையைப் பயன்படுத்தி நேபாளம் பொருளாதார ரீதியில் சுயேச்சையாக வளர்வதைத் இந்தியா தொடர்ந்து தடுத்து வந்துள்ளது. சீனத்தோடு நேபாளத்திற்கு இருக்கும் பொருளாதார உறவை மட்டுமின்றி, கிட்டத்தட்ட நேபாளத்தின் அயலுறவு மற்றும் இராணுவ செயல்பாடுகள் அனைத்தும் தில்லியில் வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன.
நீண்ட காலமாக பொருளாதார வளர்ச்சியின்றி, வேலையின்மையாலும் வறுமையாலும் சகல திசைகளிலிருந்து தாக்குதலுக்கு இலக்காகியிருக்கும் நேபாள மக்கள் தங்களது துன்ப துயரங்களுக்கு நேபாள ஆளும் வர்க்கம் எந்தளவுக்குக் காரணமோ அதே அளவுக்கு இந்தியாவும் காரணம் என்பதைத் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கையில் கேமரா, மறு கையில் நிவாரணம், இதுதான் இந்திய இராணுவம்!
ஒரு கையில் கேமரா, மறு கையில் நிவாரணம், இதுதான் இந்திய இராணுவம்!
ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் வாக்குகளைக் கவர நினைக்கும் நேபாளின் எதிர்க்கட்சிகளுக்கு இந்திய எதிர் நிலைப்பாடு ஒன்றே உத்திரவாதமான ஓட்டுப் பொறுக்கும் சாதனமாக இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு முறையும், தேர்தலில் வென்ற பின் சொல்லி வைத்தாற்போல இந்திய அடிவருடித் தனத்தில் மூழ்கி நேபாளிகளுக்கு துரோகமிழைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன அக்கட்சிகள்.
ஆக, #Gohomeindiamedia என்பது இப்போதைய ’ட்ரெண்டாக’ இருந்தாலும், அது இந்தக் குறிப்பான சந்தர்பத்தில் வெளிப்பட்டுள்ளதன் காரணம் இது தான். இந்திய ஊடகங்களின் சமீபத்திய கதைவரிசையின் நாயகனான மோடியின் பிம்பத்தை நேபாளிகளின் முன் தூக்கிப் பிடித்த செயலானது அவர்கள் பல்லாண்டுகளாக அனுபவித்து வரும் துன்பங்களின் குறியீடாக மாறியுள்ளது.
மோடி ஒரு இந்துத்துவ பாசிஸ்ட் என்கிற புரிதல் நேபாளிகளுக்கு இல்லாலிருக்கலாம். ஆனால் இந்தியப் பெரியண்ணனின் தேசிய மேலாதிக்கம் என்கிற சிறுமையை இந்தியப் பத்திரிகையாளர்கள் தங்கள் தலையின் மீது சுமத்துகிறார்கள் என்கிற எளிமையான உண்மையைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மேலே பணிந்து கீழே மீசை முறுக்கும் இந்திய தேசிய பெருமிதத்தின்  உச்சகட்டப் பீறிடல் மோடி என்பதையும் இந்தியப் பத்திரிகையாளர்களின் அருவெறுக்கத்தக்க பீற்றல்கள் அந்த அசிங்கம் பிடித்த பீறிடலின் குறியீடு என்றே நேபாளிகள் #Gohomeindiamedia என்று காறித் துப்பியிருக்கிறார்கள்.
நேபாளம் சின்ன நாடாக இருக்கலாம்; நேபாளிகள் எளியவர்களாக இருக்கலாம் – ஆனால், மேலாதிக்கத்தைச் சகித்துக் கொள்ள முடியாத சொரணையுள்ளவர்கள் என்பதை இந்த உலகத்திற்கு அறியத்தந்துள்ளனர்.
நாம் பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் சொரணை?
- தமிழரசன் வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக