புதன், 6 மே, 2015

வைரமுத்து மீது விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் நிச்சயம் இன்றைய கவிஞர்களில் அது வைரம்தான் !

நா.முத்துக்குமார், தேசிய விருதை இரண்டாவது முறை வாங்கியிருக்கிறார். அதனால் முத்துவை, வைரமுத்துவோடு ஒப்பிடுகிறார்கள் பலரும். வைரமுத்துவின் மேல் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அவருடைய வார்த்தைகள் கண்ணதாசன் வார்த்தைகளை விட ஆளுமை நிறைந்தது.; அதுபோல் பெரியார் ஆதரவை, திராவிட இயக்க ஆதரவு அரசியலை ஒரு போதும் கவிஞர் வைரமுத்து மறைத்ததில்லை. அதைப் பல நேரங்களில் தீவிரமாகப் பேசவும் செய்திருக்கிறார். பாபர் மசூதி இடிப்பதற்கு நெருக்கமான காலங்களில், பார்ப்பனர்கள் நிறைந்த சபையில், “கடவுளுக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. ராமன் கடவுளாக இருந்தால் பிறந்திருக்க முடியாது. பிறந்திருந்தால் அவன் கடவுள் கிடையாது. அயோத்தியில் அவன் பிறந்திருந்தால், அவன் மனிதன். மனிதனுக்கு எதற்குக் கோயில்? இல்லை அவன் கடவுள் என்றால், அப்புறம் அவன் எப்படி அயோத்தியில் பிறந்திருக்க முடியும்? ஆக, ராமனுக்கு அயோத்தியில் கோயில் தேவையில்லை.” என்று தீர்க்கமாகத் தீர்த்துப் பேசினார். அப்போதும் அவர் புகழின் உச்சியில் இருந்தார்.

நா. முத்துக்குமாரும் திராவிட இயக்க பின்னணியின் காரணமாகத்தான் திரைத்துறைக்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் அவர் தன் அரசியலை ரகசியமாக வைத்துக் கொண்டு, தன் தொழில் தர்மங்களை மட்டுமே தான் பிரதானப்படுத்துகிறார்.
திராவிட இயக்க எதிர்ப்பாளரான சுந்தர ராமசாமியிடம் இலக்கியச் சுவையை ருசிக்கிறார் பகிரங்கமாக. ஆனால் பெரியார் ராமசாமிக் குறித்து அதுபோல் சிலாகிப்பதில் அவரிடம் ஒரு அச்ச உணர்வு இருக்கிறது.
ஆக, வைரமுத்துவை விட இன்னும் கூடுதலாக முத்துக்குமார் தேசிய விருதுகள் கூடப் பெறலாம். ஆனால் ஒரு போதும் அவரால் வைரமுத்துவின் இடத்தைப் பிடிக்க முடியாது.
வைரமுத்துவின் இடம் வெறும் சினிமா பாடல்களால் நிரம்பியதல்ல, அது தமிழ் மொழி உணர்வும், தன் மண்ணின் மீதான அன்பும், திராவிட இயக்க அரசியல் பின்னணியும் கொண்டது.  mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக