வெள்ளி, 1 மே, 2015

பழந்தமிழர் கடல் வணிகம் 5

தமிழக மக்களின் வணிகக் கண்ணோட்டம் எழுத்தாளர்: கணியன் பாலன் : தொல்காப்பியம், சங்க இலக்கியம் போன்றவற்றில் தலைவன் பொருள்வயிற்பிரிவு மேற்கொள்வதாக ஒரு செய்தி குறிப்பிடப்படுகிறது. இது குறித்து பொ. வேல்சாமி என்பவர், இச்செய்தி அக்காலகட்டத் தமிழ் இளைஞர்கள் பொருள் ஈட்டுவதற்காக அக்கம்பக்கத்து நாடுகளுக்குப் பயணம் செய்தார்கள் என்பதைக் குறிப்பதாகும் என்கிறார். மேலும் அவர் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மாக்கோபோலோகூட, “ஆண் மக்களுக்கு பதின்மூன்று வயதாகிவிட்டால் பெற்றோர்கள் அவர்களை வீட்டில் வைத்துக்கொள்வது இல்லை. அந்த வயதில் வணிகம் செய்து பொருள் ஈட்டும் ஆற்றலை அவர்கள் பெற்றுவிடுகிறார்கள் என்றும் அவர்களை வளர்க்கும் பொறுப்பு அதற்குமேல் தங்களுக்கு இல்லை என்றும் பெற்றோர்கள் கருதுகிறார்கள்.
எனவே அந்தப் பிள்ளையின் கையில் 20 அல்லது 24 குரோட்டோ அளவிற்குச் சமமான பணம் கொடுத்து அவர்களை வெளியில் அனுப்பிவிடுகிறார்கள். தங்கள் பெற்றோர்களது வருமானத்தில் கிடைக்கும் சோற்றில் ஒரு பருக்கையும் அவர்கள் தொடுவதில்லை எங்கிறார் அவர். கி.பி. 13ஆம் நூற்றாண்டுத் தமிழ் இளைஞர்கள் கூட வணிகம் செய்து பொருள் ஈட்டியுள்ளனர் என்பதற்கு இக்கூற்று ஒரு வரலாற்று ஆதாரமாக உள்ளது எனவும், இத்தகைய ஒரு பொது மனோபாவம் சிலப்பதிகார காலத்திற்கு முன்பிருந்தே வேரூன்றி வளர்ந்து வந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார் (ஆதாரம்: தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் மார்க்சிய ஆய்வுகள், கோவை வாணன், செப்டம்பர் 2011, பக்: 10, 11, NCBH).
ship 270 சிலப்பதிகாரக் காப்பியத்தில் கோவலன் தான் தொழில்செய்து சம்பாதித்த பணத்தை மாதவியிடம் இழந்த பின்னர் சொந்தமாக வணிகம் செய்து பொருள் சம்பாதிக்கவே கண்ணகியோடு மதுரை போகிறான். அனால் அப்பொழுது அவனது தந்தையும் சரி, கண்ணகியின் தந்தையும் சரி பெரும் பணக்காரர்களாகவே உள்ளனர், எனினும் அவர்களிடம் பொருள் கேட்டுப் பெறுவது இழுக்கு என்பதால்தான் அவன் சுயமாகப் பொருள் சம்பாதிக்க மதுரை போகிறான். அன்றைய தமிழ்ச் சமுதாய மரபுப்படி சுயமாகப் பொருள் சம்பாதித்து வாழ்வது தான் ஒரு ஆண்மகனின் கடமை ஆகும். தனது குடும்பச் செலவுக்குத் தன் தந்தையிடம் பணம் வாங்குவது இழுக்கு என்றே அன்றையத் தமிழ்ச் சமுதாயம் கருதியது. பொருள்வயிற் பிரிவு என்பது திருமணத்திற்கு முன் தனது குடும்ப வாழ்விற்குத் தேவைப்படும் பொருளை ஒரு ஆண்மகன் சுயமாகச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் எங்கிற தமிழ்ச் சமுதாயத்தின் அடிப்படைக் கருத்தில் இருந்து உருவான ஒரு இலக்கியக் கருத்தாக்கம் எனலாம். 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இக்கருத்து தமிழர்களிடம் இல்லாது போய்விடுகிறது.
யூதன் பெற்ற வணிக உரிமை:
 யூதர்கள் குறித்துச் சங்க இலக்கியம் எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் யூதன் ஒருவன் பண்டையச் சேர வேந்தனோடு தொடர்பு கொண்டு சில உரிமைகளைப் பெற்றதாகப் பாஸ்கர ரவிவர்மன் லோகன் அவர்களின் மலபார் மேன்யுவல் தெரிவிக்கிறது என்கிறார் நரசய்யா அவர்கள். அந்த யூதனின் பெயர் சோசஃப் ரப்பன் என்பதாகும். அவன் கி.மு. 192 ஆம் ஆண்டு சில உரிமைகளைச் சேர அரசரிடமிருந்து பெற்றான் எனத் தெரிகிறது என்கிறார் நரசய்யா அவர்கள் (கடல்வழி வணிகம், பக்: 65). இத்தகவல் மிக முக்கியமானதாகும். இன்றைக்கு 2200 வருடங்களுக்கு முன்பு யூதன் ஒருவன் வணிக உரிமைகள் சிலவற்றைச் சேர அரசன் ஒருவனிடம் பெற்றிருப்பதும் அதுகுறித்தத் தகவல் இதுவரை பாதுகாக்கப் பெற்றிருப்பதும் மிகப் பெரிய வியப்புக்குரிய செய்தியாகும்.
இந்திய வணிக நெறி:
 மோதி சந்திரரின் இந்திய வணிக நெறி (பக்: 222-223) என்ற நூலில் கீழ்க்கண்ட குறிப்புகள் உள்ளன என்கிறாய் நரசய்யா அவர்கள்(பக்; 62).
 “கி.பி.முதலாம் நூற்றாண்டில் இந்தியக் கப்பல் வியாபாரம் மிகவும் முன்னேற்றமடைந்திருந்தது எனத்தெரிகிறது. மிகப் பண்டைய காலத்திலிருந்து இந்தியக் கப்பல்கள் மலேயா, கிழக்கு ஆப்ரிக்கா, பாரசீக வளைகுடா முதலான நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தன. ஆனால் அரபு நாட்டவர்கள் தடை செய்திருந்ததால் அதற்கு மேலும் முன்னேறிச் செல்ல இயலவில்லை. இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரையிலிருந்து சென்ற சில பெரிய கப்பல்கள் வடகிழக்கு ஆப்ரிக்காவிலுள்ள கர்தாபுயிவரை சென்று வியாபாரம் செய்து வந்தன. ஆனால் இதற்கு அரேபியர்களிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது
 இன்னும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. இதில் தென்மேற்கு கடற்கரை என்பது தமிழ் நாட்டுக்கடற்கரையையே குறிக்கும். அரபு நாடுகளின் தடை என்பதெல்லாம் கி.பி 7ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே ஆகும். சங்ககாலத்தில் தமிழகக் கப்பல்கள் எகிப்து மற்றும் கிழக்கு ஆப்ரிக்கா வரை தடையில்லாமல் சென்று வந்தன என்பதோடு அரபியர்களோடு தமிழர்கள் நல்ல உறவு கொண்டிருந்தனர். மேற்குலக நாடுகளுக்குத் தேவைப்பட்ட பெரும்பாலான பொருட்கள் தமிழகம் மூலமே அரேபியர் பெற்று வியாபாரம் செய்து வந்தனர் என்பதும், தமிழர்கள் பெரும் கடற்படைகளைப் பராமரித்து வந்தனர் என்பதும், தமிழ் மூவேந்தர்களிடையே வணிகத்தைப் பாதுகாக்க ஒரு ஐக்கிய கூட்டணி இருந்தது என்பதும் தமிழகக் கப்பல்கள் தடையின்றி சென்று வந்ததற்கான முக்கியக் காரணங்களாகும்.
ஜவகர்லால் நேரு:
 நேரு அவர்கள் தனது ‘உலக சரித்திரம் என்கிற நூலில், “வட இந்தியாவைவிடத் தென் இந்தியா கடலோடு அதிக உறவு கொண்டாடியது. வெளிநாட்டு வியாபாரம் பெரும்பாலும் தென் இந்தியாவுடன் தான் நடைபெற்று வந்தது. பழந்தமிழ்பாடல்களிலே யவனர்களைப்பற்றிய குறிப்புகள் மிகுந்து காணப்படுகின்றன. யவன தேசத்து மதுவகைகள், பூந்தாழிகள், அணிவிளக்குகள், முதலியனவற்றைப்பற்றி தமிழ் நூல்கள் கூறுகின்றன (பக்: 184). தென்இந்தியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நல்ல வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. முத்து, பொன், தந்தம், அரிசி, மிளகு, முதலியவைகளும், மயில்களும் குரங்குகளும் பாபிலோன், எகிப்து, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கும், உரோமாபுரிக்கும் அனுப்பப்பட்டன. திராவிடர்களால் ஓட்டப்பட்ட இந்தியக் கப்பல்களிலே இப்பொருள்கள் அனைத்தும் அல்லது பெரும்பாலும் கொண்டுபோகப்பட்டன. புராதன உலகத்தில் தென்இந்தியா எத்தகைய உன்னத இடத்தை வகித்ததென்று இதன்மூலம் அறிந்துகொள்ளலாம் (தமிழாக்கம்- ஓ.வி. அளகேசன், 3ஆம் பதிப்பு, அக்டோபர்- 2006, பக்: 153) எனக் குறிப்பிடுகிறார். நேரு அவர்களும் தமிழர்கள் தங்கள் சொந்தக்கப்பல்களில் பாபிலோன், எகிப்து, கிரீஸ், உரோமபுரி போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து வணிகம் புரிந்தனர் என்பதையும், பெரும்பாலான பண்டைய வெளிநாட்டு வியாபாரங்கள் வட இந்தியாவைவிட, தென் இந்தியாவுடன் தான் நடைபெற்றன என்பதையும் இதன்மூலம் உறுதிப்படுத்துகிறார் எனலாம்.
ஆர்.எசு. சர்மா :
 “பண்டைக்கால இந்தியா (ANCIENT INDIA) என்கிற ஆங்கில நூலை வரலாற்றுத்துறையில் புகழ்பெற்றுள்ள வரலாற்று ஆய்வாளர் ஆர்.எசு. சர்மா (RRRAM SHARAN SHARMA) அவர்கள் எழுதியுள்ளார். அவர் தனது நூலில் தமிழ் நாடுகள் தமது இயற்கை வளங்களாலும், அயல்வணிகத்தாலும் பெரிதும் ஆதாயமும், அனுகூலமும் அடைந்தன எனவும், அவை செல்வச்செழிப்புடன் மிளிர்ந்தன எனவும் அவை மிளகு போன்ற வாசனைப்பொருள்கள், யானைத்தந்தங்கள், அரிய முத்துக்கள், அருமந்த மணிக்கற்கள் முதலிய மிகுந்த கிராக்கியும், பெரிதும் விலை மதிப்புமுடைய பொருட்களை தமிழகத்திலிருந்து மேலைய நாடுகளுக்குப் பெருமளவில் அனுப்பின எனவும் கூறுகிறார் (பக்: 282). அவர் மேலும், “இவையன்றி அவர்கள் மசுலின் எனப்படும் மென்துகில் வகைகளையும், பட்டையும் உற்பத்தி செய்தனர். பாம்புச்சட்டையைப்போன்ற மிகமெல்லிய பருத்தித் துணியையும் அவர்கள் தயாரித்ததாக அறிகிறோம். கலைவண்ணம் மிளிரும் பலபாணிகளில், பலதோரணைகளில் பட்டு நெய்யப்பட்டதாக ஆரம்பகாலச்செய்யுள்கள் குறிப்பிடுகின்றன. உறையூர் அதன் பருத்தி வணிகத்துக்குப் புகழ் பெற்றது. பண்டைக்காலத்தில் ஒருபுறம் கிரேக்கர்களுடனும், அச்சமயம் எகிப்தை ஆண்டுவந்த கிரேக்க இனமக்களுடனும், இன்னொருபுறம் மலாயத்தீவுக் கூட்டங்களுடனும், அங்கிருந்து சீனாவுடனும் தமிழர்கள் வணிகம் செய்து வந்தனர். இந்த வணிகத்தின் விளைவாக நெல், இஞ்சி, இலவங்கப்பட்டை, மற்றும் இதர பலபொருள்களின் தமிழ்ப்பெயர்கள் கிரேக்க மொழியில் இடம்பெற்றன என்கிறார் அவர் (தமிழில் இரா. இரங்கசாமி என்கிற மாஜினி அவர்கள், ஜூன்-2004, பக்:282).
டி.என். ஜா:
 பேராசிரியர் ஜா அவர்கள் இந்திய வரலாற்றுப் பேரவையின் தலைவராகவும், பண்டைய இந்திய வரலாற்றுத்துறையின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் இருந்தவர் ஆவார். இவரது முழுப்பெயர் திவிஜெந்திரா நாராயண் ஜா (DWIJENDRA NARAYAN JHA) ஆகும். “பண்டையக்கால இந்தியா (ANCIENT INDIA IN HISTORICAL OUTLINE)” என்கிற அவரது ஆங்கில நூலில் தமிழகம் குறித்து, தமிழர்கள் வெகுகாலத்திற்கு முன்பாகவே கடற்பயணம் மேற்கொண்டவர்கள் எனவும், கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்குள்ளாகவே அவர்கள் இலங்கையின் மீது இருமுறை படையெடுத்தார்கள் எனவும் கூறுகிறார் (தமிழில் அசோகன் முத்துசாமி, டிசம்பர்-2011, பாரதி புத்தகலாயம், பக்:149). மெகத்தனிசு பாண்டியர்களைக் குறிப்பிடும் கி.மு. 4ஆம் நூற்றாண்டிலிருந்து வடக்கிற்கும் தெற்கிக்கும் இடையிலான தொடர்புக்கான சான்றுகள் கிடைக்கின்றன எனவும், சோழர்கள், பாண்டியர்கள், கேரளபுத்திரர்கள், சத்திய புத்திரர்கள் ஆகியோர் தனது பேரரசிற்கு வெளியே இருந்தார்கள் என்பதை அசோகரின் கல்வெட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றிக் குறிப்பிடுகின்றன எனவும் தமிழ் அரசுகளின் கூட்டமைப்பைத் தோற்கடித்தது குறித்து காரவேலா(கலிங்கமன்னன்) பேசுகிறான் எனவும் அந்தக் கூட்டமைப்பு இந்த மூன்று இராச்சியங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம் எனவும் அவர் கூறுகிறார் (பக்:150).
 தந்தம், ஆமை ஓடு, இதர வர்த்தகப்பொருட்கள் இலங்கை யிலிருந்து இந்தியச் சந்தைக்கு ஏராளமாகக் கொண்டுவரப்பட்டன என சுடிராபோ (கி.மு.63-கி.பி.20) கூறுகிறார். கிழக்கு இந்தோனேசியாவிலிருந்து சந்தன மரமும், தென்கிழக்கு ஆசியாவின் பெருநிலப்பரப்பிலிருந்து இலவங்கம், பட்டை ஆகியவையும், மலேசியாத் தீபகற்பம், சுமத்ரா, போர்னியே ஆகிய இடங்களிலிருந்து கற்பூரமும் தருவிக்கப்பட்டன. கிறித்து பிறப்பதற்கு முன்னரும் பின்னருமான ஆரம்ப நூற்றாண்டுகளில் இந்த வர்த்தகம் நடைபெற்றது எனவும் அவர் கூறுகிறார் (பக்:158, 159). இங்கு இந்தியா என்பது தமிழகத்தையே குறிக்கும். அந்நிய வர்த்தகத்தால் செழித்த தென்னிந்தியாவின் நகர மையங்கள் பெரும்பாலானவற்றிலும் அப்போது கணிசமான எண்ணிக்கையில் யவனர்கள் வசித்தனர். சங்கப்பாடல்கள் அவர்களைப்பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றன. காவேரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உள்ள காவேரிப்பூம்பட்டினம் நகரத்தில் அவர்களது வசிப்பிடங்கள் இருந்தன (பக்: 166, 167). இவை ஜா தரும் தகவல்கள் ஆகும். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து பல்வேறு பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு, பின் அங்கிருந்து மேற்குலக நாடுகளுக்கு AVAIஅவை ஏற்றுமதியாகின என்பது இத்தரவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
சில பண்டைய தமிழக வணிக நகரங்கள்; அழகன்குளம்:
 சங்ககாலப் பாண்டியர் துறைமுகமாக இந்நகரம் இருந்துள்ளது. இவ்வூருக்குப் பக்கத்தில் தான் வைகை நதி கடலில் கலக்கிறது. இவ்வூர்தான் மருங்கூர்ப்பட்டினமாய் இருக்கவேண்டும் என்கிறார் நரசய்யா அவர்கள். புகார் போன்றே இதுவும் மருங்கூர்பட்டினம், ஊணூர் என இரு ஊர்களாகப் பிரிந்திருந்ததது எனவும் மதிலையும் அகழியையும் கொண்டிருந்தது எனவும் மயிலை சீனி வெங்கடசாமி மருங்கூர்பட்டினம் குறித்துக் கூறுவதாக நரசய்யா குறிபிடுகிறார். இங்கு கி.மு.2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எகிப்து பெண்ணுருவ ஓடுகளும், குடுவை ஏந்திய பெண்சித்திர ஓடு, விசிறி, கண்ணாடி ஏந்திய பெண் சித்திர ஓடு முதலியனவும் கிடைத்துள்ளன எனவும், இந்நகரம் ஒரு சிறந்த தொழிற்கூடமாய் இருந்திருக்கவேண்டும் எனவும் கூறுகிறார் நரசய்யா அவர்கள்(பக்:115-118).
 வடக்குக் கருப்புப் பளபளப்புப் பானைகள் (NORTHERN BLACK POLISHED WARE) வட இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, கி.மு.6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 3ஆம் நூற்றாண்டு வரை பயன் படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை அழகன் குளத்தில் கிடைத்துள்ளன. Aஅழகன் குளத்தில் கிடைத்துள்ள பானைகளின் காலம் கிமு 6ஆம் 5ஆம் நூற்றாண்டு என்கிறார் புகழ்பெற்ற இந்திய அகழாய்வாளர் டாக்டர் பி.பி. இலால் (DR. B.B. LAL) அவர்கள்(TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 43). அப்துல் மசீத் அவர்கள், தமிழகக் கடல் சார் வரலாறு என்கிற நூலில், இங்கு கிடைத்த தொல்பொருட்கள் சிலவற்றைக் கரிமப் பகுப்பாய்வு செய்ததில் இத்துறைமுகத்தின் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.5ஆம் நூற்றாண்டு வரை ஒரு தொடர்ச்சியான வரலாறு இதற்கு இருப்பதாகத் தெரிகிறது (பக்: 9) எனவும். நந்த அரசர்களால் வெளியிடப்பட்ட கி.மு.4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அச்சுக்குத்தப்பட்ட வெள்ளிக்காசு ஒன்றும் மொளரியப் பானை ஓடுகளும் கிடைத்துள்ளன (பக்: 12) எனவும் கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பல் உருவம் பொறித்த மட்பாண்டம் ஒன்றும் இங்குக் கிடைத்துள்ளது(பக்: 21) எனவும் இங்கு கிடைத்தத் தொல்பொருட்கள் இவ்வூர் எகிப்து, உரோம், அரேபியா, இலங்கை போன்ற அயல் நாடுகளுடனும், உள்நாட்டுடனும் கொண்டிருந்த வணிகப், பண்பாட்டுத் தொடர்பை வெளிப்படுத்துகின்றன எனவும் தெரிவித்துள்ளார்கள். (பக்; 12)
அரிக்கமேடு:
 சோழர்களின் துறைமுக நகரமாக இது இருந்துள்ளது. அகழாய்வில் இங்கு பல அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மெல்லிய உயர்தர வகையைச் சேர்ந்த துணிகள் தயாரிப்பதற்கும், சாயம் தோய்க்கவும் ஆன தொட்டிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. மெல்லிய துணிவகைகள் மேற்கத்திய நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. சோழ மண்டலக் கடற்கரையின் ஒரு நிலையான துறைமுகமாக இது இருந்துள்ளது. இங்கு தங்கம், அரிய கல்வகைகள், கண்ணாடி ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட மணிகள் இங்கு ஏராளமாய்க் கிடைத்துள்ளன. இத்துறைமுகப்பகுதி ஒரு சிறந்த தொழிற்கூட நகராய் இருந்துள்ளது. (கடல்வழி வணிகம், பக்: 101-106)
 பென்சில்வேனியா பல்கலைக்கழக விமலா பெக்ளி (VIMAL BEGLY), அவர்கள் 1989முதல் 1992 வரை மூன்று வருடங்கள் அரிக்கமேட்டுப் பகுதியில் ஆய்வு செய்தார். “கல், மணி ஆகியவை செய்யும் திறமை ஐரோப்பியர்கள் அறிவதற்கு சுமார் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அரிக்கமேட்டினருக்குத்(தமிழர்களுக்கு) தெரிந்திருந்தது என்கிறார் அவர். அரிக்கமேடு மத்தியதரைக்கடல் நாடுகளுடன் வணிகத் தொடர்பை கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்திருக்கவேண்டும் என்கிறார் பெக்ளி அவர்கள். புலி உருவம் ஒரு புறமும், யானை உருவம் ஒரு புறமும் கொண்ட சங்ககாலச் சோழர்காசு ஒன்று இங்கு கிடைதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலை நாடுகள் விரும்பிய கற்களும், மணிகளும் இங்கு தயாரிக்கப்பட்டன. பிலிப்பைன்சில் கிடைத்த இப்பொருட்களில் பெரும்பாலானவை இங்கிருந்து வந்தவையே ஆகும். இம்மணிகளையும், கற்களையும் கிழக்கு ஆப்ரிக்காவுக்கும், வட ஆப்ரிக்கவுக்கும் அரேபியர்கள் இங்கிருந்து கொண்டு சென்றனர்.
 உரோமர்கள் இதனைத் தங்கள் தொழிற்கூடமாகக் கொண்டிருந்தனர் என சில அறிஞர்கள் கருதினர். ஆனால் பெக்ளி அவர்கள் உரோமர்கள் வருவதற்கு முன்னரே கி.மு. 2ஆம் நூற்றாண்டிலேயே இந்நகரம் ஒரு சிறந்த தென்னிந்தியத் தொழிற்கூட நகரமாக இருந்தது எனவும் உரோமர்கள் சென்ற பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மது வியாபாரத்திலும், அம்போரா பண்டங்கள் தயாரிப்பதிலும் இவர்கள் ஈடுபட்டு வந்தனர் எனவும் கூறுகிறார் பெக்ளி அவர்கள். இவர்கள் அரிய கல்வகைகள், மணிகள் செய்வதில் புகழ் பெற்றவர்களாக இருந்ததால் ஐரோப்பியரின் இரூட்லெட் மண்பாண்டங்களை ஐரோப்பியரிடமிருந்து தாங்களே செய்யக் கற்றுக் கொண்டனர் என்கிறார் பெக்ளி அவர்கள். இதன்மூலம் இங்குத் தொழிநுட்பக் கைமாற்றம் (Transfer of Technology Knowledge) நடந்ததாகச்s சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். (நரசய்யா-கடல்வழி வணிகம், பக்:101-109).
 ஐரோப்பியரின் இரூட்லெட் மண்பாண்டங்களை கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இறக்குமதி செய்த தமிழர்கள், கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து அரிக்கமேட்டில் சொந்தமாகத் தயாரித்து அதன்மேல் இறக்குமதி செய்யப்பட்டது எனக் குறியிட்டு விற்றனர் என்கிறார் விமலா பெக்லி அவர்கள்(DR. VIMALA BEGLY, ROME AND TRADE, CERAMIC EVIDENCE FOR PRE-PERIPLUS TRADE ON THE INDIAN COASTS, P-176, & TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 58).எலிசபெத் லிடிங்வில்(ELIZABETH LYDING WILL) அவர்கள் அரிக்கமேட்டில் கிடைத்த அம்போரா பண்டங்களை ஆய்வு செய்து, இரு கைப்பிடி அம்போரா பண்டங்களில் பாதிக்கு மேல் கிரேக்கக் கோயன்(Greek Koyan Amphoras) அம்போரா பண்டங்கள் எனவும் இவை கிரேக்கத்தீவில் உள்ள ஏஜியன் கடலில்(Agegean sea) இருக்கும் கோச்(kos) தீவில் கி.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை எனவும் மீதியுள்ளவை கி.மு. 2ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இரோமில் உற்பத்தி செய்யப்பட்டவை எனவும் கூறியுள்ளார். (Source: Elizabeth Lyding will- The Mediterraneian Shipping Amphorae from Arikkamedu p.isi &TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 43).
பூம்புகார்:
 காவிரிப்பூம்பட்டினம் எனப்படும் சோழர்களின் தலைநகரம் இதுவாகும். 1965இல் நடந்த அகழாய்வில் இங்கு இரண்டு மரத்தூண்கள் கிடைத்துள்ளன. அவற்றை கார்பன் பகுப்பாய்வு முறையில் அறிவியல் ஆய்வுக்குட்படுத்தி அதன் காலம் கி.மு. 5ஆம் 4ஆம் நூற்றாண்டு எனக் கண்டறியப்பட்டுள்ளது என்கிறார் முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள். (Source: TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 58, 59, & S.R. RAO JOURNAL OF MARINE ARCHAEOLOGY, vol-2, 1991 page-6) இங்கு மெகாலிதிக் கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அவைகளின் காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.4ஆம் நூற்றாண்டு வரை இருக்கும் என்கிறார் நடன காசிநாதன் அவர்கள் (Source: TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 71). நடன காசிநாதன் அவர்கள் தனது நூலில் பக்கம் 69 முதல் 76 வரை இந்த பூம்புகாரில் நடைபெற்ற பல்வேறு அகழாய்வுகள் குறித்தும் அதன் விடயங்கள் குறித்தும் விரிவாகச் சொல்லியுள்ளார். இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு (கி.மு 500 வாக்கில்) முன் இந்த பூம்புகார் நகரம் கடலுக்குள் 5 கி.மீ வரை பரவி இருந்துள்ளது என்கிறார் அவர்(Source: TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 72).
பூம்புகார் நகர நாகரிகம்:
 1991, 1993 ஆகிய ஆண்டுகளில் கோவாவில் உள்ள தேசியக் கடலியல் கழகம் பூம்புகார்க் கடற்கரை அருகே கடலில் அகழாய்வை மேற்கொண்டு இறுதியில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. “இலாட வடிவில் (U) உள்ள கட்டிட அமைப்பு பூம்புகார்க் கடற்கரையிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் 23 மீட்டர் ஆழத்திலும் காணப்பட்டது. இந்த அமைப்பின் மொத்த நீளம் 85 மீட்டர்; இரண்டு சுவர்களுக்கு இடையே 13 மீட்டர் இடைவெளி, சுவர்களின் அதிக அளவு உயரம் 2 மீட்டர்; மேற்குச் சுவரைவிடக் கிழக்குச் சுவர் உயரம் அதிகம்; சுவரில் கடற்பாசிகள், செடிகள் படர்ந்திருந்ததாலும் சில இடங்களில் கட்டுமான வேலைகளும் காணப்பட்டன என்பது அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.
 அதன்பின் 2001 ஆண்டு கிரகாம் ஆன்காக் என்கிற இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர் இங்கிலாந்து 4ஆவது தொலைக்காட்சி, அமெரிக்கத் தொலைக்காட்சி ஆகியவற்றின் நிதி உதவியுடனும், கோவாவில் உள்ள தேசியக் கடலியல் கழகத்தின் உதவியுடனும் பூம்புகார்க் கடல்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த இலாட வடிவில் (U) உள்ள கட்டிட அமைப்பு படம் பிடிக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது 100 அடிகள் ஆழத்தில் மேலும் 20 பெரிய கட்டுமான அமைப்புகளைக் கண்டதாக கிரகாம் ஆன்காக் அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாய்வு பற்றிய நூலின் 14ஆவது இயல் பூம்புகார் கடல் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வை விவரிக்கிறது. 11000 ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகாரில் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்பதை அவ்வாய்வறிக்கையில் கிரகாம் ஆன்காக் அவர்கள் உறுதி செய்துள்ளார்.
 இங்கிலாந்து டர்காம் பல்கலைக்கழகத்தின் நிலவியல் ஆராய்ச்சியாளர் கிளீண் மில்னே அவர்கள், கிரகாம் ஆன்காக் அவர்களின் கருத்து சரியானது தான் என்கிறார். ஆனால் கோவா-தேசியக் கடலியல் கழகத்தின் ஆய்வாளர் முனைவர் ஏ. எசு. கவுர் அவர்கள், “இலாட வடிவில் (U) உள்ள அமைப்பைக் கட்டுவதற்கு மாபெரும் தொழில்நுட்பம் தேவை... 11500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த பண்பாடுகளின் திறமைக்கு அப்பாற்பட்டது அது எனக் கூறியுள்ளார். கிளீண் மில்னே, கிரகாம் ஆன்காக் அகியோர்களின் கருத்துப் படி பூம்புகார் நகர நாகரிகம் மெசபடோமியாவில் இருந்த சுமேரிய நாகரிகத்திற்கும் முற்பட்டது. பூம்புகார் நகர நாகரிகம் குறித்த இத்தரவுகள், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் தெரிவித்துள்ள தரவுகளாகும் (அவரது நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 22-24.)
மரக்காணம் & பந்தர்பட்டினம்:
 தமிழ்நாட்டுத்தொல்லியல் துறையினரின் காலாண்டிதழில் (ஜூலை-2004), திருமதி வசந்தி என்கிற அகழாய்வாளர், எயிற்பட்டினம் என்கிற சங்ககால ஊராகக் கருதப்படுகிற இந்நகரம் கி.மு. 300ஆம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒரு சங்ககாலத் துறைமுக நகரமாகத் திகழ்ந்துள்ளது எனக் குறிப்பிடுள்ளார் என்கிறார் நரசய்யா அவர்கள். மேலும் அவர் பெரிப்ளஸ் என்கிற கிரேக்கர் எழுதிய நூலில் இதனை சோபட்மா என அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும், நல்லியக்கோடன் என்கிற சிற்றரசனின் துறைமுகமாக இந்நகரம் இருந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார் (பக்: 125). அதுபோன்றே தஞ்சாவூருக்கு அருகிலுள்ள பந்தர்பட்டினம் என்கிற நகரம் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது எனவும் இங்கு முத்து, மணி, இரோம நாணயங்கள் முதலிய நிறைய பொருட்கள் கிடைத்துள்ளன எனவும் நரசய்யா அவர்கள் தெரிவிக்கிறார் (பக்: 172)
கரூர்:
 பொறையர்குலச் சேர அரசர்களின் தலைநகராக இந்நகர் இருந்துள்ளது. இங்கு கி.மு. 3ஆம் நூற்றாண்டு நாணயங்கள் கிடைத்துள்ளன என்கிறார் நரசய்யா அவர்கள் (பக்: 166). தினமலர் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இப்பகுதியில் இருந்து கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொல்லிப்பொறை, மாக்கோதை என்கிற எழுத்துப் பொறிப்புகளைக்கொண்ட சேர நாணயங்களையும், குட்டுவன் கோதை என்கிற கி.மு. 1ஆம் நூற்றாண்டு சேர நாணயம் ஒன்றையும் கண்டறிந்துள்ளார். மாக்கோதை என்பவன் கோட்டம்பலத்துஞ்சிய மாக்கோதை என்கிற கோதை குலச் சேர வேந்தன் ஆவான்.
 கரூரின் வணிகச் சிறப்பு குறித்தக்கட்டுரையில் திரு. இராசசேகர தங்கமணி அவர்கள் பல விடயங்களைத் தந்துள்ளார். பல வணிகப் பெரு வழிகள் சந்திக்கும் இடத்தில் கரூர் அமைந்திருந்தது. முசிறித் துறைமுகத்திலிருந்து தரைவழியாகப் பாலக்காட்டுக் கணவாய் வழியாகக் கொங்கு நாட்டில் புகுந்து கரூர், உறையூர் வழியாகப் பூம்புகாருக்குச் செல்ல முடியும். இதனால் கரூரின் வணிகம் நன்கு நடந்தது. இப்பாலஸ் பருவக்காற்றினை அறிந்து கொண்ட பின் (கி.பி.45) இரோம வணிகம் பெருகியது. ஆனால் அதற்கு முன்னரே கி.மு. 25 வாக்கில் ஆர்மஸ் துறைமுகத்தில் இருந்து 125 கப்பல்கள் இந்தியாவிற்கு புறப்படத்தயாராக இருந்ததை தான் கண்டதாக ஸ்டிராபோ எழுதியுள்ளார்(SOURCE: Srinivasa Iyengar, P.T., 1982, History of the Tamils Asian Educational Services Chennai, p.195). கரூரில் கி.மு. 3ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த SILAசில செலூசிடியன் நாணயங்களும், கி.மு. 2ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த சில பொனீசியன் நாணயங்களும் கிடைத்துள்ளன என்கிறார் நடன காசிநாதன் அவர்கள். (SOURCE: R.KRISHNAMURTHY, CELEUCID COINS FROM KARUR, STUDIES IN SOUTH INDIAN COINS VOL-3 PP.19-28 TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 44).
வட இந்தியாவிலுள்ள தட்சசீலத்தில் நடந்த அகழாய்வில் கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்குரிய பால நிலையில் இருந்த கொங்கு நாட்டின் நன்கு பட்டை தீட்டப்பட்ட ‘பெரில் கற்கள் மௌரியர்களுக்கு முற்பட்ட காலத்திய மண்ணடுக்குகளில் கிடைத்துள்ளன(Nagasamy R. (ed) Dmilica Tamil Nadu State Department of Archaeologychennai, Vol. 1. 1970, p.58). மேலும் கி.மு. 200- கி.பி.200 காலகட்டத்தில் தென்சீனாவை ஆண்ட ‘அன் அரச மரபினரின் ஈமச் சின்னங்களில் தமிழ் நாட்டு மணிக்கற்கள் கிடைத்துள்ளன. ஆகவே இங்கிருந்து வெளி நாடுகளோடு கி.மு. 4ஆம் நூற்றாண்டிலிருந்தே வணிகம் நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது. அதற்குச் சான்றாக ஆயிர்க்கணக்கான உரோமனிய நாணயங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட கிரேக்க நாணயங்களும், நூற்றுக்கணக்கான சீன நாணயங்களும், இருபதுக்கும் மேற்பட்ட பொனீசிய நாணயங்களும் அமராவதி ஆற்றுப்படுகையில் கிடைத்துள்ளன. (source: Nagasamy. R. 1995, Roman Karur, Prakat Prakasaham, Chennai; 2.Krisnamurthy. R., 2000, Non Roman Ancient Foreign Coins from Karur, India, Garnet Publishers, Chennai; 3.Krishnamurthy.R., 2009, Ancient Greek and Phoenician Coins from Karur, Tamil Nadu, India, Garnet Publishers, Chennai; 4.இராசசேகரதங்கமணி, ம., 2006, தமிழ் நாட்டு வரலாற்றில் புதிய கண்டு பிடிப்புகள்; 5.தமிழ் நாட்டில் அயல் நாட்டார் நாணயங்கள், கொங்கு பதிப்பகம், கரூர், பக்: 8-18), (நிகமம்-வணிக வரலாற்றாய்வுகள், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, பக்: 39-46).
 அழகன் குளம், அரிக்கமேடு, பூம்புகார், மரக்காணம், பந்தர்பட்டினம், கரூர் ஆகிய தமிழகத்தின் ஒரு சில நகரங்கள குறித்த ஒரு சில தரவுகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளன. இவைபோக மதுரை, வஞ்சி, மாந்தை, உறையூர், கொற்கை, தொண்டி, முசிறி, நரவு போன்ற பல இலக்கியப் புகழ் பெற்ற பெரு நகரங்களும், கொடுமணல் போன்ற அகழாய்வு நடந்த சிறு இடங்களும் உள்ளன. ஆகவே தரப்பட்டுள்ள சில நகரங்களின் தரவுகளை மாதிரியாகக் கொண்டு சங்ககாலத் தமிழகத்தில் அன்று நடந்து வந்த வணிகத்தின் அளவு, அதன் சிறப்பு குறித்த ஒரு பார்வையைப் பெற முடியும்.
தமிழரசுகளின் கடல் வல்லமை :
தமிழரசுகள் அன்று மாபெரும் கடல் வல்லரசுகளாகவும் இருந்தன. இது குறித்து வின்சென்ட் ஆர்தர் சுமித் என்கிற புகழ்பெற்ற வரலாற்றறிஞர், “தமிழ் அரசுகள் வல்லமை மிக்கக் கடற்படைகளை வைத்திருந்தனர். கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வணிகக் கப்பல்கள் தமிழகம் நாடி வந்தன எனத் தனது இந்திய வரலாறு என்கிற நூலில் குறிப்பிடுவதாகக் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் பண்டையத் தமிழ் சமூகம் என்கிற தனது நூலின் முன்னுரையில் தெரிவிக்கிறார். வின்சென்ட் ஆர்தர் சுமித் அவர்கள் தனது அசோகர் என்கிற மற்றொரு நூலில் “தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகளாக பராமரித்து வந்துள்ளன எனக் குறிபிடுகிறார் (ஆதாரம்: “அசோகர்வின்சென்ட் ஆர்தர் சுமித், தமிழில் சிவமுருகேசன் பக் :79) அன்று தென்னிந்திய நாடுகள் என்பன தமிழக நாடுகளே ஆகும்.
பண்டையத் தமிழக அரசுகள் வலிமை மிக்கக் கடற்படைகளைக் கொண்டிருந்த போதிலும் அவர்களிடையே நடைபெற்ற போர்கள் அனைத்துமே நிலப் போர்களாக இருந்தன. அவர்களுக்கிடையே கடற்போர்கள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் இமயவரம்பன் நெடிஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகிய இருவரும் கடம்ப மன்னர்களை, அவர்களின் கடற்கொள்ளைகளைத் தடுக்கும் பொருட்டு, தங்கள் கடற்படை கொண்டு அவர்களைத் தாக்கி அடக்கினர். தமிழகக் கடல் வணிகத்துக்குத் தடையாக இருந்த கடற் கொள்ளையர்களையும் தாக்கி அடக்கினர் எனப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. அதுபோன்றே சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்செட் சென்னியும், தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனும் தென் பரதவர்களை, அவர்களின் கடல் வல்லமையை, தங்கள் கடற்படை கொண்டு தாக்கி அடக்கினர் எனச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.
ஆக கடற் பகுதியையும், கடல் வணிகத்தையும் பாதுகாக்க மட்டுமே கடற்படை பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. கடல் வணிகத்தை பாதுகாப்பதில் தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி இருந்ததாகவும் தெரிகிறது. அதனால் தான் தமிழரசுகளுக்கிடையே கடற்போர் எதுவும் நடைபெறவில்லை. வடக்கே சென்று வணிகம் புரியவும், கடல் வணிகத்தை பாதுகாக்கவும், வடக்கிலிருந்து வடுகர்கள் போன்ற அநாகரிக மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கவும், மொழி பெயர் தேயப் பகுதியைப் பாதுகாக்கவும், வடக்கேயிருந்து வந்த படையெடுப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. புகழ்பெற்ற நெடியோன் எனப்படும் நிலந்தரு திருவிற்பாண்டியன் கி.மு.5 ஆம் நூற்றாண்டிலேயே மிகப்பெரும் கடற்படை வைத்திருந்தான் எனவும் “சாவகம் (இன்றைய இந்தோனேசியா தீவுகள்) அன்றே அவனது கடற்படை கொண்டு கைப்பற்றப்பட்டது எனவும், அப்பாதுரை அவர்கள் குறிப்பிடுகிறார். அதன்மூலம் “கிராம்பு எனப்பட்ட வாசனைப் பொருள் வணிகம் தமிழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. கிராம்பு என்பது உலகிலேயே இந்தோனேசியாவில் மட்டுமே விளைந்தது எனவும், உலகம் முழுவதும் அதற்கு மிக அதிகத் தேவை இருந்தது எனவும் அறிகிறோம்.
 கி.மு.5-ம் நூற்றாண்டிலிருந்தே அத்தேவை கடல் வணிகம் மூலமே பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. அதனால் தான் அவ்வணிகத்தைத் தமிழர்கள் தமது கடற்படை கொண்டு தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். சங்ககாலத்தில் சாவகத்தில் தமிழ் பேசப்பட்டதாக மணிமேகலை காப்பியத்தின் கூற்று அச்செய்தியை உறுதிப் படுத்துகிறது(ஆதாரம் : கா.அப்பாதுரை அவர்களின் “தென்னாட்டுப் போர்க்களங்கள் பக்: 43 முதல் 48 வரை). மேலும் நரசய்யா அவர்களின் “கடல் வழி வாணிகம் என்கிற நூல் தமிழர்களின் பண்டையக் கடல் வணிகம் குறித்துப் பல விரிவான தகவல்களைத் தருகிறது. கி.மு.5-ம் நூற்றாண்டிலிருந்தே பண்டையத் தமிழக அரசுகள் கடற்போரிலும், கடல்வணிகத்திலும் புகழ் மிக்கவர்களாக, வலிமை மிக்கவர்களாக இருந்து வந்துள்ளனர்.
ஆதலால் தான் கி.மு. 500 முதல் கி.பி. 250 வரையான 750 வருடங்களாக தமிழக வணிகம் இடைவிடாது உலகளாவிய அளவில் நடைபெற்று வந்தது. பண்டைய வணிகம் குறித்துக் குறிப்பிடப்படும் வணிகப் பொருட்களில் பெரும்பாலானவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் விளைகிற, உற்பத்தி ஆகிற பொருட்களே ஆகும். பண்டைய காலத்தில் இவை அனைத்தும் சிந்துவெளிப் பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், மேற்குலக நாடுகள் ஆகியவைகளுக்குத் தமிழகம் வழியாகவே அனுப்பி வைக்கப்பட்டன. keetru.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக