வெள்ளி, 1 மே, 2015

20 தமிழர்கள் கொலை lசிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது: ராஜ்நாத் சிங்

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ராஜ்யசபாவில் தமிழக எம்.பி.க்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். தமிழர்கள் படுகொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 'Order CBI probe on Chittoor killings,' demands Opposition அப்போது அதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியவர்களை பிடிக்க சென்ற போலீசாரை நூற்றுக்கணக்கான கடத்தல்காரர்கள் சூழ்ந்து கொண்டு கற்களாலும், பயங்கர ஆயுதங்களாலும் தாக்கினர். இதையடுத்து தற்காப்புக்காக அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 20 பேர் பலியாகினர். இறந்தவர்களின் உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று சிலரின் உடல்கள் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது நீதிமன்றத்திடம் தான் தெரிவிக்க வேண்டும் என்று ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார். இதையடுத்து திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதால் தமிழகம் வேதனையில் உள்ளது. கடத்தல்காரர்களை பாதுகாக்க கூலி தொழிலாளர்களை கொன்றுள்ளனர். இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறுகையில், தமிழர்கள் கொல்லப்பட்டது வருந்தக்கூடிய சம்பவம். என்கவுன்ட்டரை ஏன் நடத்தினோம் என்று போலீசார் தெரிவித்துள்ளது நம்பும் வகையில் இல்லை. இந்த சம்பவம் குறித்து சிபிஐ அல்லது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றார். காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் கூறுகையில், ஆந்திர அரசு தெரிவித்த தகவலை உள்துறை அமைச்சர் நம்மிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி புலனாய்வுத் துறை அளித்த அறிக்கையின் விவரத்தை தெரிவிக்க வேண்டும். கூட்டணி கட்சி அரசு என்ற முறையில் தான் ஆந்திர அரசை மத்திய அரசு பார்க்கிறது. தமிழர்கள் கொலை விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார். இதற்கு ராஜ்நாத் சிங் கூறுகையில், 20 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்றும், நீதி விசாரணை வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். சிபிஐ விசாரணை நடத்த அந்த மாநில அரசு கோரிக்கை விடுக்க வேண்டும். ஆந்திரா அரசு கோரிக்கை விடுக்காததால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது. விசாரணை கமிஷன் அமைக்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டால் நாங்கள் நிச்சயம் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Read more at://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக