வெள்ளி, 1 மே, 2015

பேராசிரியர் நன்னன் : 100 ஆண்டுகள் அடங்கிக் கிடந்த பார்பனீயம் படம் எடுத்து ஆட நினைக்கிறது

சென்னையில் இராயப்பேட்டை யில் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற சென்னை புத்தக சங்கமத்தில் (21.4.2015) மாலைநேர நிகழ்வில் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் பங்கேற்று  பேசினார். பெரியார் பேருரையாளர் மா.நன்னன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் இயக்க வெளியீடுகளை வழங்கினார்.
பேராசிரியர் மா.நன்னன் பேசும்போது குறிப்பிட்ட தாவது:
இன்று ஒரு நல்ல கருத்தைப்பற்றி கொஞ்ச நேரம்  சொல்லலாம் என்று விரும்புகிறேன். இந்த புத்தகச் சங்கமம் ஏற்பட்டிருப்பதே ஒரு முன்னேற்றம்தான். நூலுக்காக, நூல் பதிப்புக்காக என்று நடைபெறுவது மனித வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்தான். ஆசிரியர் அவர்கள் இதற்காக பெருமுயற்சி எடுத்துக்கொண்டு நடத்துகிறார்கள். சென்னைப் புத்தகச் சங்கமத்தை ஏற்பாடு செய்து நடத்துபவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழா
இங்கே இசைவாணர் இசைக்கருவிகளுடன் சிறப்பாகப் புரட்சிக்கவிஞர் பாடல்களை பாடினார்கள்.  துன்பம் நேர்கையில் புரட்சிக்கவிஞரின் பாடலை அருமையாகப் பாடினார்கள். இதுபோன்ற இசையைக் கேட்பதற்கு மக்கள் முன்வரவேண்டும்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125 ஆண்டுகள் ஒன்றேகால் நூற்றாண்டு விழாவில் இருக்கிறோம். தந்தை பெரியார் பாரதிதாசன்குறித்து பாராட்டி எழுதியிருக்கிறார்கள். பெரியாரால் பாராட்டு பெற்றவர்கள் குறித்து தொகுத்து எழுதியிருக்கிறேன் நீங்கள் அனைவரும் படிக்கவேண்டும்.
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? கண்ணே! இன்பம் சேர்க்க மாட்டாயோ?
என்று ஆப்பிரிகாவிலேயோ, வேறு எங்கேயோ, தூந்திரப் பிரதேசத்திலேயோ கேட்கவில்லை, தமிழ்நாட்டில்தான் கேட்கிறார். தமிழ்நாட்டில் என்னென்னவோ இறைச்சல்களால் காது செவிடாகிவிடும்போல் இருக்கிறது. திருக்குறளில் ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? கண்ணே! என்று கதறுகிறார். வள்ளு வனின் குறளில் ஒரு சொல், அந்த ஒரு சொல்லுக்காக அந்த மாபெரும் புரட்சிக்கவிஞரின் உள்ளம் ஏங்குகிறது. அதுதான் தமிழ்நாட்டினுடைய நிலை இன்றைக்கும்.
எது அறம்? எது மறம்? அதற்கே இப்போது வேறு பாடு வந்துவிட்டது. வேறுபாடு என்ன,  மாறுபாடே வந்துவிட்டது. அறத்துக்கு மறத்துக்குக்கொடுக்கிற விளக்கங்களிலேயே முரண்பாடுகள் வந்துவிட்டன.
மறத்தையே அறம் என்கிறான். பாம்பின் நஞ்சையே அமுது என்கிறான். சாணியையே சர்க்கரைப்பொங்கல் என்கிறான். இது எல்லாருக்கும புரியும் நான் முன்னால் சொன்ன உவமைகளைவிட. அதை நிலைநாட்டுகிறான். அதற்கு பத்துபேர், நூறு பேர். எவனாவது அதைப்பற்றி யோசிக்கிறானா? வயிற்றுப்பிழைப்புக்கு சிலபேர் பேசுகிறார்கள். மற்றவர்கள் அதைப்பற்றி எண்ணிப் பார்க்க வேண்டாமா?
100 ஆண்டுகள் அடங்கிக் கிடந்த பாம்பு, இப்போது தனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டதாக நினைக்கிறது. 100 ஆண்டுகளாக இருக்கிற இடம் தெரியாமல் இருந்த அந்தக் கொடிய நஞ்சு, தனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துவிட்டதாக நினைக்கிறது.
துன்பம் நேர்கையில் இந்த சூழ்நிலையில் அந்தப் பாட்டை (துன்பம் நேர்கையில்) முழுக்க நீங்கள் நினைத்துப் பாருங்கள். வீட்டுக்குப்போய் அந்தப்பாடலை எடுத்துப் பாடுங்களய்யா. படிக்கக்கூடாது பாட வேண்டும். வீட்டில் இருப்பவர்களை உட்காரவைத்து பாட வேண்டும். பாடத்தெரியாது என்று சொல்லாதீர்கள். பாடினீர்கள் என்றால் தானாக பாட்டு வரும். பாடுவதுதானய்யா பாட்டு. அந்தப்பாட்டினுடைய அருமையை முழுக்க நான் சொல்லிக்கொண்டிருந்தால், ஒவ்வொரு அடியையும் சொல்ல வேண்டும். அவையெல்லாம் நமக்குக் கிடைக்க முடியாத அரும்பெரும் செல்வங்கள் ஆகிவிட்டன. மிகப்பெரிய தத்துவம் நிறைந்த பாடலாக அதை நான் காண்கிறேன்.
பெரியார் சொன்ன கருத்துகளையெல்லாம் நானும்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். எப்போ முதன்முதலில் பெரியாரின் பேச்சைக் கேட்டேன் என்றால், 1943ஆம் ஆண்டிலே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே புலவர் வகுப்பிலே படித்துக்கொண்டிருந்த நான் பெரியார் பேச்சை முதன்முதலாக கேட்டேன். அதற்கு முன் இதற்கு எதிரி.  நாவலர், பேராசிரியர் இன்னும் யாரோ 2, 3 பேர்தான் சுயமரியாதைக் கட்சிக்காரர்கள். பாக்கி நாங்கள் மந்தை, நாங்கள் எல்லாம் 2000பேர் காங்கிரசுதான். நானும் அந்தக் கூட்டத்திலே இருந்தவன்தான். பெரியார் பேச்சைக் கேட்ட உடனே, எவ்வளவு நல்ல கருத்தைச் சொல்கிறார்களே என்று கேட்டேன். அடுத்த ஒரு மாதத்துக்குள்ளேயே அண்ணா வந்து பேசினார். அதையும் கேட்டேன். அவ்வளவுதான். அண்ணா என்ன பேசினார் தெரியுமா? ஆற்றோரம். பதிவு செய்யப்படாத அந்தப்பேச்சு. அண்ணா பேசிய நாடும் ஏடும், ஏ தாழ்ந்த தமிழகமே என்று இதையெல்லாம் எழுதி இரண்டு அணா, ஒரு அணாவுக்கு அச்சுபோட்டு விற்றார்கள். ஆற்றோரத்தை யாருமே எழுதவில்லை.  பரிமளம்கூட என்னிடம் நினைவில் இருக்கும்வரை சொல்லுங்கள் என்றார். ஆனால், எதைப்பற்றிப் பேசினார், அதில் என்ன கருத்து என்று சொல்லத்தெரியும். பெரியார், அண்ணா பேச்சைக் கேட்டேன். மாறினேன். அதாற்குப்பிறகு இன்றுவரையிலே எனக்கு வயது 93 வரப்போகிறது. இன்றுவரையிலே அதிலே ஒரு சுணக்கமே இல்லை. இதிலே ஒன்றும் சுயநலமோ, உள்நோக்கமோ ஒன்றும் இல்லை.
எனக்கு என்ன ஏதோ எம்எல்ஏ சீட்டு கேட்கப்போகிறேனா? ஒன்றுமில்லை. அதெல்லாம் வந்தபோதுகூட மழையிலே நனைந்த பறவை அப்படியே இறக்கையெல்லாம் அடித்து சிலிர்க்கும். எல்லாத்துளியும் ஓடிவிடும். பறக்க ஆரம்பித்துவிடும். அவையெல்லாம் என்னைத் தீண்ட முடியவில்லை. அதுபோல பாவேந் தருடைய பாடலிலே அவர் பெரிய தத்துவப்பாடல் மட்டும் பாடியிருக்கிறார் என்று சொல்ல முடியாது.
காக்கையை ஒருபையன் கொன்று விட்டதால், அதைக்
காக்கைகள் அத்தனையும் கண்டு விட்டதால்
கூக்குரல் இட்டபடி குந்தி வருந்தும், அதைக்
கொன்ற பையன் தன்னின் நெஞ்சு வருந்தும்
என்று இது ஒரு பாட்டு.
ஒரு பையன் காக்கையைக் கொல்வது ஒன்று வீரச் செயல் அல்ல. கூட்டமாக அப்படியே உட்கார்ந் திருக்கும். ஒரு கல்லை எறிந்தால் எதன்மீதாவது படும். அப்படி அந்தப்பையன் அடித்தான் காக்கை செத்துப்போயிற்று. அவ்வளவு காக்கைளும் கத்துகின்றன. கதறுகின்றன. குந்தி வருந்தின.  குந்தி என்றால் உட்கார்ந்து என்று பொருள், தென்னார்க்காடு புதுச்சேரி பகுதியில் வழக்கம். அதைக்கண்டு கொன்ற பையன் தன் நெஞ்சு வருந்தும் என்று பாவேந்தர் கூறியுள்ளார். அப்படிப்பட்ட பாவேந்தர் கொலை வாளினை எடடா என்று கூறுகிறார். வெட்டுடா என்று சொல்லவில்லை. எடுத்தாலே ஓடிவிடுவானுங்க இந்த பசங்க. கொலை வாளினை எடடா, மிகு கொடி யோர் செயல் அறவே. கொடியோர் செயல் அற வேண்டும் உலகத்திலிருந்து. செய்தியாளர்கள் இது போன்ற செய்திகளை மக்களுக்குத் தெளிவாக கொண்டு செல்லவேண்டும்.
நந்தனார்,வள்ளலார்,புரட்சிக்கவிஞர்
பாவேந்தர் புரட்சி என்றால் பெரியார் புரட்சி. புரட்சி என்பது தலைகீழாக மாற்றக்கூடியது. பாவேந்தர் கடைசிவரையிலே அப்படியே மேலே  மேலே போய்க்கொண்டிருந்தார். சீர்திருத்தம் எனக்குப் பிடிக்காது என்று பெரியார் சொல்வார். நான் ஒரு சீர்திருத்தவாதி இல்லை. சீர்திருத்தக் கட்சி இல்லை திராவிடர் கழகம். அழிப்பு வேலைதான் எங்கள் முதல் வேலை. அழிக்கிறதை அழித்தால்தான் ஆக்குவதை ஆக்க முடியும்.
இராமலிங்கர் படிப்படியாக போனாரே தவிர இறங்கிவரவில்லை. இராமலிங்கரைக் கொன்று விட்டார்கள். நந்தன் கதை இருக்கிறதே, அதைக் கிந்தனாரில்தான் பிடி பிடி என்று பிடிப்பார் கலைவாணர் கிந்தனார் கதையிலே. நந்தன் சாமி கும்பிடப்போகவேண்டும் என்றான். வேற ஒரு எழவும் இல்லை அவனுக்கு அந்த நேரத்திலே. வேற படிக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லத்தெரிய வில்லை. பள்ளிக்கூடத்திலே   சேரவேண்டும், படிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. கோயி லுக்குள் போகவேண்டும் என்றான். அவன் போகக் கூடாது என்றான். அப்படியும் போனான். நெருப்பை மூட்டி இதுல இறங்குடா என்றான், அந்த முட்டாள் அதில் இறங்கினான்.  அந்த ஆளு அந்தப் பக்கமாக பூணுல் போட்டுக்கொண்டு ஒருத்தன் போனான், அதோ போகிறான் பார் அவன்தான் நந்தன் என்று சொல்லிவிட்டான். நந்தன் கதை தெரிந்துவிட்டதா? கொன்று விட்டார்கள். பொசுக்கிவிட்டார்கள். வள்ளலார் உள்ளே போனார் ஜோதி ஆயிட்டார் என்று சொன்னான். இவன் எவனாவது ஜோதி ஆகிவிடுவாய் என்று சொன்னால் எவனாவது போவானா? கொன்று விட்டான். வள்ளலாருக்கும் அதுதான் கதி.
பெரியார் ஒருத்தரைத்தான் இந்தக் கழிசடைகள் எவனும் கிட்டே நெருங்கவே முடியவில்லை (கைதட்டல்) அப்படிப்பட்ட தலைவரை அவர்தாம் பெரியார் என்று ஒரு பாட்டு பாடினார் பார்த்தீர்களா? கண்ணை மூடிக்கொண்டு பாட்டைக் கேட்டாலே பெரியாரை உணரமுடியும். தந்தை பெரியாரை நாங்கள் எல்லாம் நேரில் பார்த்தவர்கள்.  கொஞ்சநாள் நான் பெரியாருடன் இருந்து அந்த சூடு தாங்காமல் ஓடிவந்துவிட்டேன். வரலாற்றிலேயே நம்முடைய ஆசிரியர் ஒருத்தர்தான் பெரியாருடன் கடைசிவரைக்கும் இருந்து (கைதட்டல்) அங்கிருந்து பெறவேண்டியவற்றை யெல்லாம் பெற்று தேவை ஏற்படுகிறபொழுது வழங்க வேண்டியவற் றையெல்லாம் வழங்கிக்கொண்டு இருக்கின்றார்.
நான் எல்லாம் ஒரு ஆறு மாதம் இருக்கலாம். என்ன செய்யப் போகிறாய்? என்று பெரியார் கேட்டார். பின்பு வாருங்களேன் என்றார். கஜேந்திரனும் அப்பொழுது கூட இருந்தார். கஜேந்திரன் ஈ.வெ.கி.சம்பத் மைத்துனர். சம்பத் அக்காளை கஜேந்திரன் மணம் செய்து கொண்டார். கஜேந்திரனுடைய தங்கையை (சுலோசனா சம்பத்) சம்பத் மணம் செய்துகொண்டார். கஜேந்திரன் திருப்பத்தூர் சாமி குடும்பத்தினர். அந்த காலத்திலே ஒரு விதத்தில் கலப்பு மணம்தான்.
என்னைப்பொறுத்தவரையில் பகுத்தறிவுக் கோட்பாட்டிலே என்னை நான் முழுவதுமாகக் கரைத்துக்கொண்டேன். நன்னன் என்பவன் வேறு ஒன்றில் இல்லை. பெரியாருடைய சிறுசிறு அணுக் களிலே ஒரு அணுவாக நான் இருக்கிறேன். அந்தப் பேறு எனக்கு இருந்தால் போதும். கடைசிவரையிலே பெரியாரியல் அணு. அதைவிட நுட்பமானது இப்பொழுது சொல்கிறார்கள். அந்தப் பழைய காலத்து ஆள் இல்லையா நான்? அணுவுக்கு அப்புறம் என்னவெல்லாம் வந்திருக்கிறது என்று எனக்கு சட்டென்று தெரியாது. ஆகையினாலே நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை அடைகிறேன்.
பெரியாரியலை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
பெரியாரியல் கருத்துகளை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஒத்துக்கொள்கிறீர்களோ இல்லையோ, நம்புகிறீர்களோ இல்லையோ, பின்பற்றுகிறீர்களோ இல்லையோ, என்ன சொன்னார் பெரியார்? ஒழுங்காக கேளுங்கள். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அப்புறம் முடிவெடுங்கள். அவசரம் வேண்டியதில்லை. நீங்கள் எல்லாம் தெரிந்துகொண்டபிறகு சரியில்லை என்று சொல்லுங்கள் ஒத்துக்கொள்கிறேன். ஒன்றுமே தெரியாமல், பெரியார் திடலில் கேட்டுக்குமுன்னாலே வந்து கத்தினால் என்ன அர்த்தம்? என்னத் தெரியும் அவர்களுக்கு? என்னத்த கண்டான்? என்னமோ கொடுத்தான், எங்கேயோ வந்தான், கத்துடா என்றதும் கத்தினான். அவ்வளவுதான் தீர்ந்துபோச்சு. எப்பேர்ப் பட்ட இடம் அது?
அதில் என்னய்யா சொன்னார் என்று கேட் கிறவனாக இருந்தால் அங்கே போயிருக்க மாட்டான். ஏன் அதைக் கழற்றவேண்டும்? நான் தாலி கட்டித்தான் திருமணம் செய்துகொண்டேன். தாலி கட்டினாலும், அந்தக்காலத்திலே பார்ப்பான் இல்லாத திருமணத்துக்கு ஒத்துக்கொண்டதே பெரிய காரியம். ரொம்ப நாள் திருமணம் ஆகாமலே இருந்தது. எவனும் பொண்ணு கொடுக்க மாட்டேன் என்கிறான். நல்ல பையன், அழகாக இருப்பார். அரசாங்க உத்தியோகம். ஊரிலே நல்ல பெயர். ஆனால் பெண் கொடுக்க மறுக்கிறான். திருமணத்துக்குப்பிறகு இப்பொழுது என் மனைவியின் கழுத்தில் தாலி கிடையாது(கைதட்டல்) எனக்கு 93 என்றால், அந்த அம்மாவுக்கு 85 வயது இப்பொழுது ஆகிறது. நன்றாக இருக்கிறார்கள். சமையல் எல்லாம் நன்றாக செய்து போடுகிறார்கள். பாருங்கள் நான் எப்படி இருக்கிறேன் என்று. என்னுடைய மூத்த மருமகன் இங்கே இருக்கிறார். தாலியே கிடையாது. கட்டவே இல்லை. கட்டியிருந்தாத்தானே அகற்றி எறிவதற்கு? நல்ல ராகு காலம். தலைமைச் செயலாளர் திரவியம் தான் வந்திருந்தார். நெருக்கடிக்காலம். ஆசிரியர் அம்மா எல்லாம் வரமுடியவில்லை. என் பதவிக்கு ஆபத்து என்று விட்டுவிட்டார்கள்.
மனித வாழ்க்கை என்றாலே பகுத்தறிவுதான். ஏன்? பகுத்தறிவு இல்லையென்றால் மனிதன் இல்லை. உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே. தொல் காப்பியம். அஃறிணை என்பார் அவர் அலர் பிறரே. மக்கள் என்று சுட்டப்படக்கூடிய இயல்பு. மனிதன் என்று சொல்வதற்கு உரிய இயல்பு உள்ளவன்தான் மனிதன் அதுதான் பெரியாரியல். மனிதனை மனித னாக்க வந்திருக்கிறேன் என்று சொன்னவர் பெரியார். பெரியார் எனும் மருந்து எல்லோரிடத்திலும் வேலை செய்யும் என்பதற்காகவே இவ்வளவையும் எடுத்துக் கூறினேன்
_இவ்வாறு பேராசிரியர் மா.நன்னன் பேசுகையில் குறிப்பிட்டார்.

Read more: viduthalai.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக