ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பிரெஞ்சு பெண்ணின் தமிழிசைக் காதல் Emmanuelle Martin - Raaga Tapasya

இசைக்கு மொழி கிடையாது என்பார்கள். பிரான்ஸைச் சேர்ந்த இமானுவல் மார்ட்டினைப் பொறுத்தவரை அது நூறு சதவீதம் உண்மை.
பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணாவிடம் இவர் கர்னாடக இசையைக் கற்றுக்கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல தன் கச்சேரியில் தமிழ்ப் பாடல்களைப் பாடி ரசிகர்களை அசத்திவருகிறார். இவரது குரல் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலைப் போல முறுக்கேறிய மென்மையான குரல்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் கர்னாடக இசை மீது ஆரம்பத்தில் பெரியளவில் ஈடுபாடில்லாத மார்ட்டின், ஒரு கட்டத்தில் அந்த இசையைப் பயில்வதற்காகவே இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவுக்கு வருவதற்கு முன் அவருக்குத் தாய்மொழி பிரஞ்சு மட்டுமே தெரியும். இந்தியாவுக்கு வந்த பிறகுதான் தமிழைக் கற்றுக்கொண்டார்.
இப்போது அழகாகத் தமிழ் பேசுகிறார். சுவையாக இஞ்சி டீ போடுகிறார். இசையைப் போலவே அவரது மனதைத் தொட்டதாம் இஞ்சியின் நறுமணம். தன்னந்தனியாக இந்தியாவுக்கு வந்து, பத்து ஆண்டுகள் உழைத்து கற்றுக்கொண்ட கர்னாடக இசை, ஆன்ம அமைதியைத் தந்ததாக மெய்சிலிர்க்கிறார்.

இனிய விபத்து
கர்னாடக இசை மீது எப்படி ஆர்வம் திரும்பியது? அது ஒரு இனிய விபத்து என்கிறார் மார்ட்டின். “கர்னாடக இசையைக் கற்றுக்கொள்ள காரணமாக இருந்தது எனது குடும்பப் பின்னணிதான். என்னுடைய தாய், தந்தை இருவரும் இசைக் கலைஞர்கள். அப்பாவுக்கு மேற்கத்திய இசையில் நல்ல புலமை. அவருக்கு கர்னாடக சங்கீதத்தின் மீது ஆர்வம் இருந்தது. அவர் இந்தியாவுக்கு வந்து சீதாராம சர்மாவிடம் கர்னாடக இசை கற்றார். அவர் டி.எம். கிருஷ்ணாவின் குரு” என்கிறார் மார்ட்டின்.
சிறு வயதில் இருந்தே சங்கீத பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர், முதலில் கற்றது பியானோ மற்றும் மேற்கத்தியக் குரலிசை. ஆனாலும், மனதில் ஏதோ ஒன்றை இழந்தது போலவே உணர்ந்துவந்திருக்கிறார் மார்ட்டின். “ஆரம்பத்தில், அப்பா கர்னாடக சங்கீதத்தை ஒலிக்கச் செய்தபோதெல்லாம், அதனைத் தாங்க முடியவில்லை என்று கூறி உடனடியாக நிறுத்திவிடுவேன். அப்போது, ‘ஒரு வருடம் சரளி வரிசை கற்றுக்கொண்டால், இந்தியாவுக்கு அழைத்துப் போகிறேன்’ என்று அப்பா சொன்னார்.
அந்த ‘டீல்’எனக்குப் பிடித்திருந்தது. அதற்காக கர்னாடக சங்கீதம் கற்க ஆரம்பித்தேன். இந்தியா வந்தோம். சுற்றிப் பார்த்தோம். சென்றுவிட்டோம். ஒரு சமயம், கச்சேரி செய்ய பிரான்ஸ் வந்த டி.எம். கிருஷ்ணா, எங்கள் வீட்டில் தங்கினார். அவரது குரல் என் உள்ளத்தில் ஒரு விதமான அமைதியை ஏற்படுத்தியது. அப்போதுதான் கர்னாடக இசையை நோக்கி என் பார்வை முழுமையாகத் திரும்பியது” என்கிறார்.
இதுதான் என் தேடல்
டி.எம்.கிருஷ்ணா இவருடைய வீட்டில் தங்கியிருந்தபோது, இவரைப் பாடச் சொல்லியிருக்கிறார். அப்போதுதான் தன்னுடைய குரலின் ஆழத்தை உணர்ந்திருக்கிறார் மார்ட்டின். “நான் பாடியபோது எனக்குள் ஒருவிதமான ஆனந்தம் பரவியது. இதுதான் என் தேடல் என்று புரிந்தது. என்னை எனக்கே உணர்த்தியவர் என் குரு டி.எம்.கிருஷ்ணாதான்” என்கிறார்.
பத்து ஆண்டுக் காலமாக அவரிடம் இசை பயிலும் இமானுவல், முதலில் பெற்ற பரிசு இந்திய - பிரான்ஸ் கலாசார பரிமாற்ற நிதிநல்கை. இதை மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து பெற்றிருக்கிறார். மியூசிக் அகாடமி நடத்திய தியாகராஜா போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளையும் வென்றிருக்கிறார். டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரிகளுக்கு தம்புரா இசைப்பதைப் பெருமைக்குரியதாகச் சொல்லும் இவருடைய தமிழிசை ரசிகர்களுக்குத் தேனிசைதான்  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக