வியாழன், 25 டிசம்பர், 2014

பொள்ளாச்சி சிறுமியர் பலாத்காரம் இரட்டை ஆயுள் தண்டனை!

கோவை : பொள்ளாச்சியில், விடுதி சிறுமியர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வீராசாமிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்தது.பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகில், டி.இ.எல்.சி., சர்ச் வளாகத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் நடத்தி வந்த விடுதியில், ஏழை மாணவியர் தங்கி படித்து வந்தனர். 2014, ஜூன், 11 நள்ளிரவில், குடிபோதையில் விடுதிக்குள் புகுந்த ஆசாமி, 11 மற்றும் 12 வயது மதிக்கத்தக்க இரு மாணவிகளை, மறைவான இடத்திற்கு இழுத்துச்சென்று, பாலியல் பலாத்காரம் செய்தான்.விசாரித்த போலீசார், சிறுமியரை பலாத்காரம் செய்த, வால்பாறையை சேர்ந்த வீராசாமி, 23, என்பவனை கைது செய்தனர். பிடிபட்ட வீராசாமி மீது,திருட்டு, வழிப்பறி தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருந்ததால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான்.


பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், 64 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அத்துமீறி நுழைதல், கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், விடுதியில் தங்கிய ௧௦ வயது மாணவர், பள்ளி தலைமை ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவியரின் உறவினர்கள், அரசு டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், சாட்சியம் அளித்தனர்.சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட வீராசாமிக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி சுப்பிரமணியன் தீர்ப்பளித்தார். சம்பவம் நடந்த ஆறு மாதத்திற்குள், வழக்கை விரைவாக நடத்தி, தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட சிறுமியருக்கு இழப்பீடு : நீதிபதி சுப்பிரமணியன் தீர்ப்பு விவரம் வருமாறு:
விடுதியில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்கு 10 ஆண்டு சிறை, ரூ.1000 அபராதம், கடத்தல் குற்றத்திற்கு தலா 10 ஆண்டு சிறை, ரூ.1000 அபராதம், கொலை மிரட்டல் குற்றத்திற்கு தலா ஏழு ஆண்டு சிறை, ரூ.1000 அபராதம் என 44 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பலாத்கார குற்றத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.

அரசு அனுமதி பெறாமல் செயல்பட்டு, குற்றம் விளைவிக்க காரணமாகவும் இருந்த, டி.இ.எல்.சி., சர்ச் நிர்வாகம் பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்காக பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா இரண்டரை லட்சம் ரூபாய் (மொத்தம் ஐந்து லட்சம் ரூபாய்), 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால், மாவட்ட நிர்வாகம் வசூலித்து வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு, தமிழக அரசு ஏற்கனவே நிதி வழங்கி இருந்தாலும், குழந்தைகள் பாதுகாப்பு சட்டப்படி, அவர்களது எதிர்கால கல்விச்செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும்.

'அரசு உதவி கிடைக்கிறதா' என்பதை கண்காணிக்க, சண்முகநாதனை ஆணையராக நீதிமன்றம் நியமிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ம் தேதிக்குள், அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆணையருக்கு இலவச சட்ட உதவி மையம் ஊதியம் வழங்க வேண்டும்.இந்த வழக்கை விரைவாக விசாரித்து, ஆறு மாதத்திற்குள் தீர்ப்பளிக்க தீவிர முயற்சி மேற்கொண்ட டி.எஸ்.பி., முத்துராஜை நீதிமன்றம் பாராட்டுகிறது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக