வெள்ளி, 5 டிசம்பர், 2014

தமிழக அரசே மதுவிற்பது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி! டாஸ்மாக் கடைகள் அரசியல் சாசனத்துக்கு முரண்?

இந்திய அரசியல் சாஸனம் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென வழிகாட்டும்போது, தமிழ்நாட்டில் மாநில அரசே மதுபான விற்பனையில் ஈடுபடுவது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருப்பது பலத்த விவாதங்களை ஏற்படுத்தியள்ளது. சாலை விபத்தில் பலியானவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி அவர்களது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணை செய்தபோது, பலியானவர்கள் மது அருந்தி வாகனம் ஓட்டினார்கள் என அரசுத் தரப்பில் ஒருவாதம் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி மது விற்பனை குறித்தும், மதுவிலக்குக் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி டிசம்பர் 11ஆம் தேதிக்குள் அவற்றுக்குப் பதிலளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.
அதில், மதுவைத் தடுக்க வேண்டிய மாநில அரசே மதுபானக்கடைகளை நடத்துவதாகவும், அரசியல் சாஸனத்தின் 47வது பிரிவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு முயல வேண்டுமென கூறியிருக்கும் நிலையில், வருமானத்திற்காக அரசு மதுபானக் கடைகளை நடத்துவது சரியா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசியல் சாசனம் வலியுறுத்துவது மாநில அரசுகளைக் கட்டுப்படுத்துமா என மூத்த வழக்கறிஞர் விஜயனிடம் கேட்டபோது, "அரசியல் சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில்தான் அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது என்பதால் அதை அரசுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியதில்லை" என்று தெரிவித்தார். "சமூக ஒழுக்கமா, வருமானமா என்ற கேள்வியெழுந்தால், தீர்மானிக்க வேண்டியது அரசுதான்" என்றும் அவர் கூறினார்.
மதுவிலக்கைத் தீவிரமாக அமல்படுத்திவிட்டு இதுவரை மது விற்பனை மூலம்கிடைத்த வருவாயை வேறு வழிகளில் உருவாக்க அரசு ஏன் முயற்சிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருக்கிகிறது. இது சாத்தியம் என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் சீனிவாசன். "முதலில், அரசின் செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்; அடுத்ததாக விற்பனை வரியிலும் பத்திரப்பதிவிலும் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும். இவை இரண்டையும் செய்தால், இந்த வருவாய் இழப்பை ஓரளவுக்கு ஈடுகட்டலாம்" என்கிறார் அவர்.
தமிழகத்தில் மதுவிற்பனைக்கு எதிராக சில தனி நபர்களும் ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளும் தொடர்ந்து போராடிவருகின்றன.
இன்றும் ம.தி.மு.க. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மதுவிலக்கை வலியுறுத்திப் போராட்டம் நடத்தியது  bbc.co.uk/tamil/india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக