வெள்ளி, 5 டிசம்பர், 2014

வி.ஆர். கிருஷ்ணய்யர்! அதுதான் முதல் பொதுநல வழக்கு! ~ மதிமாறன்.~

ஒரு கைதி, துண்டுத் தாளில் இந்தியாவின் உயர் பதவியிலிருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதி அனுப்பியதை, பொதுநல வழக்காக ஏற்று.. நியாயம் வழங்கியவர் வி.ஆர். கிருஷ்ணய்யர். அதுதான் முதல் பொதுநல வழக்கு என்று நினைக்கிறேன்.
2iyerபெரியாரின் நூலுக்கு விதிக்கப்பட்ட தடையைக் கூட நீக்கியிருக்கிறார்.
டாக்டர் அம்பேத்கரின் உழைப்பால் நீதிபதியானவர்கள், பெரியாரின் முயற்சியால் இன்னும் சமூக நீதி அரசியலின் பயனாய் நீதிபதியானவர்கள் செய்யாத அல்லது செய்ய விரும்பாத பல சிறப்பான செயல்களை, எளிய தலித் மக்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் செய்தவர் மரியாதைக்குரிய வி.ஆர். கிருஷ்ணய்யர். . அதுவும் ஒரு பார்ப்பனக் குடும்பத்திலிருந்து… என்பது அவருக்குக் கூடுதல் சிறப்பு.


*
மே 2007 ஆம் ஆண்டு‘ சமூக விழிப்புணர்வு’ இதழில் அவரைப் பற்றி இப்படி எழுதினேன்:
ஒரு சிறந்த நீதிபதி, சட்டத்தின்படி மட்டும் இயங்க மாட்டார். ஏனென்றால் சில நேரங்களில் சட்டத்தின் படி சரியாக இருப்பது நியாயத்தின் படி , நீதியின் படி தவறாக இருக்கும்.
சட்டத்தின் படி மட்டும் இயங்குபவர், தீர்ப்பு வழங்குபவராக தான் இருப்பார். நீதி வழங்குபவராக இருக்க மாட்டார்.
சட்டத்தின் துணையோடு நியாயப்படி, நீதியின் படி – பரிவோடு, துணிவோடு தீர்ப்பு வழங்குபவருக்குப் பெயர் தான் நீதிபதி. சுருங்கச் சொன்னால் வி.ஆர். கிருஷ்ணய்யர் மாதிரி.
“ரயில்வேயில் பதவி உயர்வுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது’ என்று தொடுக்கப்பட்ட வழக்கில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மரியாதைக்குரிய கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது.
*
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த கிருஷ்ணய்யர் அவர்கள், தன் பெயருக்குப் பின் உள்ள ஜாதி பெயரை பெருமையாக நினைத்ததும் அல்லது தவறாக நினைக்காததும், மோடியைக் குறித்துத் தவறாகப் பேசியதும் தான் நமக்கு வருத்தமாக இருக்கிறது.
மற்றபடி, மிகச் சிறந்த வாழ்க்கை அவருடையது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக