வியாழன், 4 டிசம்பர், 2014

ரோட்டக் சகோதரிகளும் பாஜகவின் இரட்டை வேடமும்

ரோட்டக் சகோதரிகள்
ரோட்டக் சகோதரிகள் இப்போது சமூக வளைத்தளங்களில் பிரபலங்களாகி விட்டனர். சமூக வலைத்தள கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா வாய்ப்பைத் தவற விட அவ்வளவு முட்டாள்கள் இல்லை என்பதால், எதிர்வரும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ரோட்டக் சகோதரிகளை கவுரவிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
ரோட்டக் சகோதரிகள் யார், அவர்கள் நிகழ்த்திய சாதனை என்னவென்று அறியாதவர்களுக்காக – ஆர்த்தி மற்றும் பூஜா குஹார் ஆகிய இருவரும் சகோதரிகள். ஹரியாணா மாநிலம் சோனேபட் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் அருகில் உள்ள ரோட்டக் நகரின் அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிகள். கடந்த 28ம் தேதி இவர்கள் இருவரும் ஹரியாணா மாநில போக்குவரத்துத் துறையின் பேருந்து ஒன்றில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
குஹார் சகோதரிகள் பயணம் செய்த அதே பேருந்தில் வந்த குல்தீப், மோஹித் மற்றும் தீபக் என்ற மூன்று வாலிபர்கள், இருக்கையில் அமர்ந்து வந்த சகோதரிகளுக்குத் தொல்லை கொடுத்துள்ளனர். பெண்கள் என்றால் இருக்கையில் அமரக் கூடாது என்றும், எழுந்து நிற்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதற்கு பதிலளிக்காத சகோதரிகளை இழிவாக பேசி, துண்டுச் சீட்டில் தங்கள் தொலைபேசி எண்களை எழுதி அவர்கள்மேல் வீசியுள்ளனர்.
இதை எதிர்த்து குரல் எழுபிய இப்பெண்களை நோக்கி ஆபாச சைகைகள் செய்துள்ளனர்.
ரோட்டக் சகோதரிகள்இருக்கையில் இருந்து எழுந்து சென்று அதைத் தட்டிக் கேட்ட ஒரு சகோதரியை கழுத்தைப் பிடித்து கீழே தள்ள, பொங்கியெழுந்த சகோதரிகள், அம்மூன்று வாலிபர்களையும் எதிர்த்து போராடியுள்ளனர். மற்ற பயணிகள் கோழைகள் போல் வேடிக்கை பார்த்து நின்ற நிலையில், தங்கள் கையில் கிடைத்த பெல்ட்டால் அம்மூன்று வாலிபர்களையும் விளாசித் தள்ளியிருக்கிறார்கள் சகோதரிகள். பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் இந்த அடாவடித்தனங்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்திருக்கின்றனர்.  உடன் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மட்டும் ஆதரவாக இடையே புகுந்துள்ளார். சகோதரிகள் அந்த வாலிபர்களுக்கு புரியும் மொழியில் பெல்டால் பேசியதை அந்த கர்ப்பிணிப் பெண் தனது செல்போன் கேமராவில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிந்துள்ளார்.
பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் போலீசுக்கு தொலைபேசுவதைத் தடுத்திருக்கின்றனர். பேருந்து சிறிது தூரம் சென்று நின்று விட சகோதரிகள் இருவரையும் தாக்கியவர்கள் அவர்களை பேருந்திலிருந்து வெளியே தள்ளியிருக்கின்றனர்.

தங்களை தாக்கியவர்களைப் பற்றி இரு சகோதரிகளும் போலீசில் புகார் செய்திருக்கின்றனர்.
சகோதரிகள் இளைஞர்களை தாக்கும் வீடியோ  சில மணி நேரங்களிலேயேசமூகவலைத்தளங்களில் ’வைரல்’ ஆகிவிட்டது. “#RohtakSisters”, “#BraveheartSisters” உள்ளிட்ட ஹேஷ் டேக்குகளால் பகிரப்பட்ட வீடியோ ஓரிரு நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கானவர்களால் பார்வையிடப்பட்டு வடமாநில சமூக வளைத்தள பயன்பாட்டாளர்களிடையே முக்கிய பேசு பொருளானது. இத்தனை பேரின் விவாதப் பொருளான பின் பாரதிய ஜனதாவின் கண்ணை உறுத்தாமல் இருந்தால் தான் அது அதிசயம்.
உடனடியாக அம்மூன்று வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இராணுவத்தில் பணிக்குச் சேர்வதற்கான உடற் தகுதித் தேர்வில் வென்றவர்கள் என்றும், எழுத்துத் தேர்வுக்கான காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்கள் என்றும் செய்திகள் வெளியாகின. சம்பவம் குறித்து பேட்டியளித்த மத்திய இராணுவ அமைச்சர், இது போன்ற பொறுக்கிகளுக்கு இராணுவத்தில் இடமில்லை என்றும், ஒழுக்கம் போன்ற விஷயங்களில் இராணுவம் கறாராக நடந்து கொள்ளும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே ஹரியாணா முதல்வர் மனோகர் லால், வரும் குடியரசு தினத்தன்று சகோதரிகள் இருவரும் அவர்களின் வீரச் செயலுக்காக கவுரவிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். மேலும், மாநில அரசு சார்பாக அப்பெண்களுக்கு ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்திருப்பது அரிதினும் அரிதான ஒரு சாதனை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து கொன்றொழிக்கும் ஆணாதிக்க சமூகமான வடமாநிலங்களில் முதன்மையானது ஹரியானா. பெண்களை சுயேச்சையான மனித உயிர்களாக அல்லாமல், ஒரு உடைமையாகப் நடத்தும் பழக்கம்தான் பார்ப்பனிய கலாச்சாரத்தின் அடிப்படை. இதுவே இந்திய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளின் ஆணிவேர்.
ரோட்டக் சகோதரிகள்
இன்றைக்கும் பெண் சிசுக் கொலைகளால் ஆண் பெண் மக்கள் தொகை விகிதாச்சாரம் குலைந்து, திருமணத்திற்கு ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து காசு கொடுத்து ஏழைப் பெண்களை ஓட்டி வரும் பார்ப்பனிய ஆண் திமிரும் அதை அங்கீகரிக்கும் ஜாட் கட்டைப் பஞ்சாயத்தும் தான் ஹரியானாவின் முதன்மையான அடையாளம். சாதி மாறிக் காதலித்த ’குற்றத்திற்காக’ கொளுத்தி சாம்பலாக்கப் பட்ட பெண்களின் எண்ணிக்கையோ எண்ணி மாளாது.
இது போன்ற ஒரு படுபிற்போக்கான மாநிலத்தில் பொதுவிடத்தில் தமக்கிழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக பெண்கள் சண்டை போடுவது உண்மையில் வரவேற்கத்தக்கது மட்டுமல்ல, எல்லோரும் பின்பற்றத்தக்க முன்மாதிரியும் ஆகும். அந்த வகையில் ரோட்டக் சகோதரிகளின் வீரத்தை நாம் போற்றுவதும், பார்ப்பனிய ஆணாதிக்கத் திமிருக்கு எதிரான இதை தூக்கிப் பிடிப்படும் அவசியம்.
ஆனால், சம்பவம் மக்களின் கவனத்திற்கு வந்த பின் பாரதிய ஜனதா ஆடும் அழுகுணி ஆட்டங்கள் தான் சகிக்க முடியாததாக உள்ளது. ரோட்டக் சகோதரிகளை பாராட்டும் அதே பாரதிய ஜனதாவில் தான் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்கு ஆளான நிகால் சந்த் மேஹ்வால் அமைச்சராக இருக்கிறார். பாரதிய ஜனதா ஆளும் ஹரியானா மாநில போலீசாரால் “தலைமறைவாக” உள்ளவராகத் தேடப்படும் அதே மேஹ்வால் மத்திய பாரதிய ஜனதா அரசியல் அமைச்சராக இருக்கிறார்.
பாலியல் வக்கிரங்களும் பாரதிய ஜனதாவும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பதை நாம் விரிவாக விளக்கத் தேவையில்லை. சஞ்சய் ஜோஷி சிடி, கர்நாடக மற்றும் குஜராத் சட்டசபைகளில் நீலப் படம் பார்த்த பா.ஜ.க எம்.எல்.ஏக்கள், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கள்ளச்சாமியார்களோடான நெருக்கம் என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது. காமசாஸ்திரம், கொக்கோக சாஸ்திரம் படைத்த ஞான மரபின் புத்திரர்களின் சாதனையை விவரிக்கவும் வேண்டுமா என்ன.
மத்திய இராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பொங்கியெழுந்திருப்பது போல் இராணுவத்தின் ஒழுக்க சீலங்கள் என்னவென்பது தமிழர்களுக்குத் தெரியும், தெரியாத தமிழர்கள் ஈழத் தமிழர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எண்பதுகளின் இறுதியில் ’அமைதிப் படை’ என்ற பேரில் ஈழம் சென்ற இந்திய இராணுவத்தின் மைணர்த் தனங்களைப் பற்றி ஈழத் தமிழர்கள் கண்ணீரால் எழுதி வைத்துள்ள இரத்த வரலாறு நம் கண் முன் உள்ளது.
ஓரு ஆக்கிரமிப்பு இராணுவம் என்ற வகையில் அந்நிய தேசத்தில் மட்டுமல்ல, ஏகாதிபத்தியத்திற்கு அல்லக்கை குண்டர்படை என்ற எதார்த்த நிலைமையின் காரணமாக இந்தியாவுக்குள்ளேயும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு எதிராக இந்திய இராணுவத்தின் பாலியல் அடாவடித்தனங்களைச் சொல்லி மாளாது. தங்ஜம் மனோரமாவின் கதையை இன்றைக்கும் மணிப்பூர் பெண்கள் மறக்கவில்லை. காஷ்மீரிகளின் சோகமோ எழுத்தில் விளக்கவியலாதவை.
பெண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்கே எதிரிகள் இவர்கள். ஊடக வெளிச்சமும், விளம்பரமும் கிடைக்கிறது என்பதைத் தாண்டி ரோட்டக் சகோதரிகளை இவர்கள் ஆதரிப்பதற்கு வேறு எந்த முகாந்திரமும் கிடையாது.
இந்துத்துவர்களின் வாயிலிருந்து வழியும் போற்றுதல்களின் யோக்கியதை என்ன?
பெண்ணைத் தாயாக, நதியாக, மலையாக, ஏன் கடவுளாகவே ஏற்றிப் போற்றும் அதே இந்து தத்துவ மரபு தான் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை விதவைகளை மொட்டையடித்து மூலையில் உட்கார வைத்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கணவனை இழந்த பெண்களை நெருப்பில் இட்டு வாட்டியது. இன்றும், சாதி மாறிக் காதலிக்கும் பெண்களைக் ’கவுரவமாக’ கொன்றொழிக்கும் சாதிவெறியின் அடிப்படையாக இருப்பதும் அதே தத்துவஞான மரபுதான்.
இந்த எதார்த்த உண்மைகளின் யோக்கியதையைப் புரிந்தவர்களுக்கு இந்துத்துவ புத்திரர்களின் போற்றுதலுடைய யோக்கியதையும் புரியும்.
ரோட்டக் சகோதரிகள் காவல் துறையிடம் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று தற்போது சாதிப் பஞ்சாயத்தார் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் இந்த நிமிடம் வரை அடிபணியவில்லை. அவர்கள் பேருந்தில் உயர்த்திய சாட்டையின் நுனி நிமிர்ந்து நிற்பது பா.ஜ.கவின் இரட்டை வேடத்தை நம்பி அல்ல, மாறாக ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் ஆதரவில் தான் இருக்கிறது. vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக