புதன், 3 டிசம்பர், 2014

Bhopal விஷவாயு கசிவு 30 ஆண்டுகளுக்கு பின்பும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது!



போபாலில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் கடந்த 1984 ஆம் ஆண்டு மெத்தைல் ஐசோசயனேட் என்ற மரணத்தை விளைவிக்கும் விஷவாயு கசிந்து வெளியேறியது. இச்சம்பவத்தில் 1700 பேர் இறந்ததுடன், 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இவ்விபத்து நடந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் வசிக்கும் சம்ஷாத் மற்றும் மெமுனா குரேஷி தம்பதிக்கு தாஹா குரேஷி என்ற அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தற்போது 2 வயதாகும் அக்குழந்தைக்கு ரத்த புற்றுநோய் தாக்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் வெளியான விஷவாயு கசிவு தான் என பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பெற்றோர்கள் இருவரும் விஷவாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் இக்குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமோ? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
தங்களது குழந்தையை குணப்படுத்த ரூ.50 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் கூறியதாக பெற்றோர் தெரிவித்தனர். இதுவரை 7 லட்ச ரூபாயை செலவழித்துள்ளதாக கூறியுள்ள அவர்கள், விஷவாயு வெளியேற்றத்தால் தான் தங்கள் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதை அரசு ஒப்புக்கொள்ள மறுப்பதாக வருத்தத்துடன் கூறினர்.
இது போன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் போதே குறைபாடுகளுடனும், மூளை வளர்ச்சியில்லாமலும், மேலும் புற்றுநோயுடன் பிறந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இக்குழந்தைகள் நேரடியாக விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்படாததால், அவர்களை வாயு வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என அறிவிக்க மறுப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

இவ்விபத்து நடந்தபோது இரண்டரை வயது குழந்தையாக இருந்த பார்தி அகர்வால், யூனியன் கார்பைடு தொழிற்சாலை அமைந்திருந்த பகுதியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் வசித்து வந்தார். விஷவாயு வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்டு எந்த வித மருத்துவ உதவியும் இன்றி வளர்ந்து வந்த அவருக்கு திருமணமும் ஆனது. அதன் பிறகு அவரது வாழ்வில் வருத்தங்களே அதிகமாயின. அவரது இரண்டாவது குழந்தை மூளை வளர்ச்சியில்லாமலும், கண் பார்வையற்ற நிலையிலும் பிறந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் உடனடியாக அவரிடம் கேட்ட கேள்வி, விஷவாயு வெளியேறிய போது எங்கிருந்தீர்கள்? என்பது தான். அதற்கு பார்தி போபாலில் தான் இருந்தேன் என்று கூறியுள்ளார்.

விஷவாயு வெளியேற்றத்திற்கும், குழந்தையின் பிறவி குறைபாடுகளுக்கும் சம்பந்தம் உள்ளதாக மருத்துவர் பார்தியிடம் கூறியபோது அவர் அடைந்த துயரத்தை வார்தைகளால் குறிப்பிடமுடியாது.

இதே போல் சைலேந்திர சௌராசியா என்பவரின் ஒரு வயது மகளான "பிரியான்ஷி"-க்கு இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவளது அடிவயிற்றின் ஒரு பகுதி பிறவியிலிருந்தே குறைபாடுடன் காணப்படுகிறது. சைலேந்திராவும் விஷவாயு வெளியான சமயத்தில் புத்தா மில் காலனியில் 11 மாத குழந்தையாக இருந்துள்ளார். அவரும் விஷவாயுவால் பாதிக்கப்பட்டு, எவ்வித மருத்துவ உதவியுமின்றி வளர்ந்தவர் தான்.

‘விஷவாயு வெளியான போது எனது முகத்தில் இருந்து ரத்தம் வடிந்ததால், நான் இறந்துவிட்டதாகவே எனது தாய் கருதினார். ஆனால் எப்படியோ நான் உயிர் பிழைத்தேன். எனது குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது தெரிந்தவுடன், இன்னும் என்னை அக்கொடுமையான நிகழ்வு துன்புறுத்த வந்துள்ளதாக தோன்றுகிறது’ என சைலேந்திரா புலம்பினார்.

இப்படி எண்ணற்ற குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இனியாவது அரசு உரிய நடவடிக்கை எடுத்து எஞ்சியுள்ள குழந்தைகளுக்காவது உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இப்படிப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்காமல் இருப்பது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் மிகவும் நல்லது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக