வியாழன், 4 டிசம்பர், 2014

ராமனின் புத்திரர்களா ? விபச்சார விடுதியில் பிறந்தவர்களா?” பாஜகவின் மற்றொரு வாந்தி?

நிரஞ்சன் ஜோதிநிரஞ்சன் ஜோதி:
”உங்களுக்கு யார் வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள் ? ராமனின் புத்திரர்களா ? அல்லது விபச்சார விடுதியில் பிறந்தவர்களா?” என்று முத்தாய்ப்பாகக் கூறி டில்லி மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மோடியின் அமைச்சரவை சகா சாத்வி நிரஞ்சன் ஜோதி என்ற பெண் சாமியார் தனது உரையை முடித்தார். தனது பேச்சுக்கு ஒரு விளக்கத்தையும் அளித்தார் சாத்வி. அது அவரை இன்னும் தெளிவாக அம்பலப்படுத்தியது. ‘இந்தியாவின் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ராமனின் குழந்தைகளே. இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் உண்மையான இந்தியர்கள் இல்லை’ என்பதே தனது உரையின் சேதி என்றார்.
நிரஞ்சன் ஜோதி பேசியவை பாராளுமன்றத்தில் உடனே எதிரொலித்தது. காங்கிரஸ், சிபிஎம், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் ‘நிரஞ்சன் ஜோதி மன்னிப்பு கேட்க வேண்டும்; மோடி அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று பாராளுமன்றத்தை முடக்கினார்கள்.
தனது கோர முகம் நேரலையின் மூலம் இந்தியா மட்டுமல்ல; மோடி சென்று வந்த நாடுகளில் எல்லாம் அம்பலப்படுவதை அடுத்து அதிகார போதையில் திளைத்திருந்த இந்துத்துவ கும்பல் சற்று இறங்கி வந்தது. நான்கு முறை சபை ஒத்திவைப்புக்கு பிறகு சாத்வி நிரஞ்சன் ஜோதியை பெயரளவுக்கு மன்னிப்புக் கோர வைத்தனர்.
அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு மவுனம் காத்து வருகிறார் மோடி. அப்படி செய்தால் அது சொந்த செலவில் வைத்துக் கொள்ளும் சூன்யம் என்பதறிந்தவர் மோடி. குஜராத்தில் அவர் பேசாத பேச்சா, இல்லை இந்துமதவெறியர்கள் இந்தியாவெங்கும் இப்படி பேசுவதுதான் புதிதா?
சம்பவம் 2 :
சத்திஸ்கர் விஎச்பி மதவெறி அரசியல்
சத்திஸ்கர் விஎச்பி மதவெறி அரசியல்
”கத்தோலிக்க நிர்வாகத்தின் கீழ் வருகின்ற பள்ளிகள் அனைத்திலும் சரஸ்வதி படம் மாட்ட வேண்டும். ஃபாதர் என்று பாதிரியார்களை பிள்ளைகள் அழைக்கக் கூடாது; பிரச்சார்யா அல்லது உபபிரச்சார்யா என்றே அழைக்க வேண்டும். கிறிஸ்துமஸை முன்னிட்டு குழந்தைகளுக்கு சான்டா க்ளாஸ் (கிறிஸ்மஸ் தாத்தா) மிட்டாய் கொடுக்கக் கூடாது” போன்ற அடாத கோரிக்கைகளுடன் சத்தீஸ்கர் மாநில விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பஸ்தர் மாவட்ட நிர்வாகிகள் கத்தோலிக்க திருச்சபையின் பஸ்தர் மறைமாவட்ட நிர்வாகிகளை கடந்த மாதம் 21-ம் தேதி சந்தித்துள்ளார்கள்.
இந்த கோரிக்கைகளை கத்தோலிக்கத் திருச்சபை ஏற்றுக் கொண்டிருக்கிறது. பஸ்தர் மறைமாவட்ட நிர்வாகிகள் மவுனமாக இருக்க சத்தீஸ்கர் கிறித்தவ மன்றம் (Chattisgarh Christian Forum) என்றொரு அமைப்பு வி.ஹெச்.பி.யின் மிரட்டலை அம்பலப்படுத்தியுள்ளது. பேய் ஆட்சி செய்யும் போது பக்தர்களாக இருந்தால் என்ன, ஆன்மீகவாதிகளாக இருந்தால் என்ன அடங்கிக் கிட என்பதே இந்துமதவெறியர்களின் உத்தரவு! எனில் ஏதுமற்ற அப்பாவி கிறித்தவர்கள் என்ன செய்வார்கள்?
சம்பவம் 3 :
புனித செபஸ்தியான் ஆலயம்
புனித செபஸ்தியான் ஆலயம்
பழமை வாய்ந்த தேவாலயம் ஒன்று டில்லியில் நேற்று முன்தினம் (01/12/2014) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. புனித செபாஸ்தியான் ஆலயத்தின் மைய வளாகம், தேவாலயத்தின் பீடம், சிலுவை, பைபிள், புராதன சின்னங்கள் ஆகியவை கருகியுள்ளன. அதிகாலை 6.30 மணியளவில் இது நடந்துள்ளது. சேத மதிப்பு ரூபாய் ஒரு கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக இது நடந்திருக்கலாம் என்று முதலில் அனைவரும் நம்பினர். பிறகு விசாரணையில் இது தீவைப்பு என்று தெளிவாகியுள்ளது.
டில்லி ஆயர் அனில் கூட்டோ பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோரிடம் நீதி விசாரணை வேண்டி கடிதம் எழுதியுள்ளார். திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக மோடியும், ராஜ்நாத் சிங்கும் வாய்களை மூடி வைத்துள்ளனர். இல்லையென்றால் பெஸ்ட் பேக்கரி ஆவி அச்சுறுத்தும்!
சம்பவம் 4
மேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் மட்டுமல்லாமல் மத்திய பிரதேசத்தின் மாண்ட்லா மாவட்டத்தில் பில்லியர்ட்ஸ் என்ற பெயர் கொண்ட தேவாலயம் சில வாரங்களுக்கு முன்பு தீ வைக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
டில்லியில் தேர்தலும், கிறிஸ்துமஸும் நெருங்கி வருகின்ற வேளையில் ஓட்டுக்காக மக்களை பிளவுபடுத்தவும், சிறுபான்மை மக்களிடம் அச்சத்தை விதைக்கவும் இந்துத்துவ சக்திகள் வட மாநிலங்களில் நடத்தி வருகின்ற தொடர் வன்முறை விளையாட்டின் சில மேலே தரப்பட்டிருக்கின்றன. சொல்லப்படாத செய்திகள் என்ற வகையிலும், நமது பார்வைக்கு வராத செய்திகள் என்ற வகையிலும் இன்னும் நிறைய இருக்கக் கூடும்.
மொஹரம் தினத்தை ஒட்டி முஸ்லிம்களுடன் மோதலை பெருக்கிக் கொண்ட இந்து மதவெறியர்கள், கிறிஸ்மஸ் வந்தவுடனே தங்கள் களத்தை சற்றே மாற்றி கொண்டுள்ளார்கள். வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பொய்முகத்தை காட்டி இன்னும் எத்தனை நாள் தான் மக்களை ஏமாற்ற முடியும். காக்கி அரை நிக்கரிலிருந்து பூனைக்குட்டி வெளியே குதிப்பதை மக்களும் எத்தனை நாள் தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்?
தகவல் தொகுப்பு : சம்புகன்.vinavu.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக