வெள்ளி, 21 நவம்பர், 2014

கேரளாவில் மாந்த்ரீகம் பில்லி, சூனியத்தை தடை செய்ய சட்டம் வருகிறது

திருவனந்தபுரம்: செய்வினை, பில்லி சூனியம் போன்றவற்றை செய்வதாக கூறும் மந்திரவாதிகளை தடுக்க வழி செய்யும் சட்டத்தை கேரள மாநில அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மாந்த்ரீகம் என்றாலே கேரளாதான் என்ற நிலை உள்ளது. மலையாளத்து மந்திரவாதி என்றால் கம்ப்யூட்டர் காலத்திலும் பலருக்கு கால்கள் நடுங்கும். அரசியல் புள்ளிகள் பலருக்கும் ஆஸ்தான மந்திரவாதி, ஜோதிடர் யாராவது மலையாள பூமியில் இருக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்ட மலையாள மண்ணில் மந்திரவாதிகளுக்கு தடை விதிக்க புறப்பட்டுள்ளது உம்மன் சாண்டி அரசு. முதலில் மது, இப்போ மாந்த்ரீகம்! பில்லி, சூனியத்தை தடை செய்ய சட்டம் கொண்டுவருகிறது கேரளா "மாந்த்ரீகம் உள்ளிட்டவற்றால் அடிக்கடி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக 2 கொலைகள் நடந்துள்ளன. எனவே மாநில உள்துறை அமைச்சகம், மூட நம்பிக்கை தடுப்பு சட்டத்தை இயற்ற திட்டமிட்டுள்ளது" என்று கேரள உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பத்தினம்திட்டா மற்றும் கொல்லம் ஆகிய பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு மாந்த்ரீகம் தொடர்பாக இரு சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரள அரசை இதுகுறித்து மிக தீவிரமாக சிந்திக்கச் செய்துள்ளது. பில்லி, சூனியம் வைத்துவிடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் சட்டம் ஒழுங்கில் பாதிப்பை ஏற்படுத்துவதால் புதிய சட்டத்தை இயற்றி இத்தொழிலுக்கு தடை விதிக்க கேரளா முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மது ஒழிப்பை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள கேரளாவின் அடுத்த தைரியமான முடிவாக இது வர்ணிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் சட்ட வரைவை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக