வெள்ளி, 21 நவம்பர், 2014

குற்றம் கடிதல் அதிர்ச்சியில் ஆழ்த்திய உண்மை! இயக்குனர் பிரம்மா!

கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வாகி இருக்கும் ஒரே தமிழ்ப் படம் ‘குற்றம் கடிதல்’. “கோவா மட்டுமல்ல, இதற்கு முன் மும்பை, ஜிம்பாப்வே திரைப்பட விழாக்களுக்கும் தேர்வாகித் திரையிட்டிருக்கிறார்கள். இன்னும் நிறைய திரைப்பட விழாக்களுக்கு அனுப்புற திட்டம் இருக்கு.” என்று சந்தோஷத்துடன் ஆரம்பித்தார் அந்தப் படத்தின் இயக்குநர் பிரம்மா...
‘குற்றம் கடிதல்’ படத்தில் என்ன செய்தி சொல்லியிருக்கீங்க?
முதல்ல இது செய்தி சொல்ற படம் கிடையாது. ஒரு சம்பவத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட த்ரில்லர் கதை. ஆனால், அந்தச் சம்பவத்தின் பின்னணியில் சமூக அடுக்குகளில் மேலும் கீழுமாக வாழக்கூடிய மக்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, என்ன மாதிரியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதுதான் படம். நிறைய விஷயங்களைச் சாடியிருக்கிறோம். நிறைய கேள்வி கேட்டிருக்கிறோம். படம்கூட கேள்வியோடுதான் முடியும்.
என்னதான் கதையம்சம் இருந்தாலும், சிறு முதலீட்டுப் படங்கள் மக்களுடைய கவனத்தைப் பெறாமலேயே போய்விடுகின்றனவே?
கவனிக்கப்படுவதற்கும், கவனிக்கப்படாததுக்கும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று விளம்பரங்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றன. பெரிய நடிகர்கள் இல்லை என்றால், விளம்பரத்திற்கு மட்டுமே பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது. அந்த அளவுக்குப் பண்ணாவிட்டால், மக்களுக்குத் தெரியமலே போய்விடுகிறது.
இன்னொரு பக்கம், பெரிய அளவில் விளம்பரம் பண்ணி மக்கள் வந்து பார்த்துப் படத்தில் ஒண்ணுமில்லை என்றாலும் புறக்கணிப்பது இயல்புதானே. செறிவான கதையம்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அது மக்களிடையே பேசப்பட வேண்டும்.
விளம்பரப் பிரிவில் ஒரு விஷயம் சொல்வார்கள். தவறான பொருளை அதிகமாக விளம்பரப்படுத்தினால், அது சீக்கிரமாக அழிந்து போய்விடும். எல்லாரும் ஆர்வமாகப் போய் வாங்குவார்கள், ஒண்ணுமே இல்லை என்றவுடன் அவர்களைத் தாக்கும் ஏமாற்றம் அதைப் புறக்கணிக்க வைத்துவிடும். பெரிய நடிகர்கள் படமென்றாலும் கதை இருந்தால்தான் கல்லா கட்டலாம்.
சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்? யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதுபோலத் தெரியவில்லையே?
நான் வளர்ச்சித் துறையில் இருந்து சினிமாவுக்கு வருகிறேன். டெவலெப்மெண்ட் கம்யூனிகேஷன் என்பது எனது பிரிவு. எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. மக்களுடைய பிரச்சினைகளை நான் நிறைய பார்த்திருக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் எய்ட்ஸ், குழந்தைகள், இளைஞர்கள், சுகாதாரம் இப்படி நிறைய பிரச்சினைகளை கையாண்டிருக்கிறேன். அனுபவம் நிறைய இருந்தாலும், நிறைய நாடகங்கள் பண்ணிட்டிருந்தேன். அந்த அனுபவம் இருந்ததால் இரண்டையும் இணைத்துப் படம் பண்ணும் வசதி இருந்தது. ஒரு நாள் மூளையில் ஒரு விஷயம் தோன்றியது. எழுத ஆரம்பித்துவிட்டேன். என்னுடைய டீமில் அனைவருக்குமே அது பிடித்திருந்தது. உடனே தயாரிப்பு, படப்பிடிப்பு என்று களமிறங்கிவிட்டோம்.
‘ஜஸ்ட் வோட்’ என்றொரு சமூக விழிப்புணர்வு விளம்பரம் பண்ணினேன். அதையும் இப்படத்தின் தயாரிப்பாளர்தான் தயாரித்தார். பிறகு குறும்படம் இயக்கியிருக்கிறேன். மூன்று ஆவணப் படங்கள் இயக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இந்த அனுபவங்கள், நான் திரைப்படம் இயக்கப் போதுமானதாக இருந்தன.
முதல் படத்துக்கே அங்கீகாரம் கிடைத்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
கிடைத்த முதல் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டதால் இது கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். பனோரமா பிரிவுக்குத் தேர்வு செய்யக்கூடிய தரமான படங்களை எடுக்கும் கலைஞர்கள் பலர் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். ஆனால், பலருக்கு இன்னும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. படம் வெளியாகும் முன்பே அந்த வாய்ப்பு எனது படத்துக்குக் கிடைத்தது பெருமையான விஷயம்தான். அதேநேரம் பயமாகவும் இருக்கிறது.
தமிழ் சினிமாவில் உங்கள் பாதை எது? கமர்ஷியலா படங்களா, கருத்து சொல்லும் படங்களா?
கமர்ஷியல் படங்களில் சமூகக் கருத்துகள் சொன்ன நிறையப் படங்கள் இருக்கின்றன. என்னுடைய படங்கள் சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்துபவையாகத்தான் இருக்கும். அது கமர்ஷியலா இருக்குமா, இருக்காதா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. கமர்ஷியல் படம், ஆர்ட் படம் என்று எல்லாம் எனக்குப் பிரிக்கத் தெரியாது. எனக்குத் தெரிந்தது நல்ல படம், தவறான படம் அவ்வளவுதான். ‘குற்றம் கடிதல்’ முதற்கொண்டு நான் இயக்க விரும்பும் படங்கள் அனைத்துமே வெகுஜன மக்களுக்கான நல்ல படங்களாகத்தான் இருக்கும்.
அவங்களுக்குப் புரியாத வகையில் எந்த ஒரு விஷயத்தையும் நான் செய்ய மாட்டேன். ஏனென்றால் கோடிகளில் புரளும் வியாபாரத்தில், அனைவருக்கும் பணம் கிடைத்தால் மட்டுமே தொடர்ச்சியாகப் படங்கள் பண்ண முடியும். சும்மா ஏதோ ஒரு படம் எடுப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை, நல்ல கதையம்சம் உள்ள படம் எடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.
தொண்டு நிறுவனங்களில் வேலை செய்தேன் என்று சொல்கிறீர்கள். களப்பணியில் உங்களை அதிர்ச்சியடையச் செய்த விஷயம் என்று ஏதாவது இருக்கிறதா?
இன்றைய காட்சி ஊடகமும், இணைய ஊடகமும் அதன் நீட்சியாக இருக்கக்கூடிய சமூக வலைதளங்களும் இளைஞர்களைத் தவறான திசையில் வழிநடத்திக்கொண்டிருக்கின்றன. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாகவும், சினிமா மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதைக் கேட்பதற்கு யாருமே இல்லாத சூழ்நிலை இருக்கிறது. இளைஞர்களுக்கு ஏகப்பட்ட சக்தி இருக்கிறது. அவர்கள் செய்யக்கூடிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், அனைத்தையுமே மீடியா தவறாக வழிநடத்திக்கொண்டிருக்கிறது. எல்லாருமே நடிகைக்கு எப்போது கல்யாணம், ஹீரோவுக்கு எப்போது பால் அபிஷேகம் பண்ண முடியுங்கிற நோக்கத்துடனே போய்க்கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைஞர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு வீடு, தெரு, சமூகம், நாடு என எந்தவொரு பிரச்சினையும் தெரியவில்லை. விழிப்புணர்வு இல்லாமல், பிரச்சினை தெரியாமலே இருப்பதை வருத்தத்திற்குரிய, அதிர்ச்சியான விஷயமாகப் பார்க்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக