ஞாயிறு, 16 நவம்பர், 2014

கந்துவட்டி தொழில் அபார வளர்ச்சி ! ஒரு வருடத்தில் நூற்றுக்கும் அதிகமான ரயில்வே ஊழியர்கள் தற்கொலை!

வில்லிவாக்கத்தில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்). குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் கந்துவட்டிக் கொடுமை தலை தூக்கி உள்ளதால் தற்கொலைகள் பெருகி வருகிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வருடமாக இந்த குடியிருப்பில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ள சம்பவம் குடியிருப்புவாசிகளை கடும் பீதிக்குள் தள்ளி உள்ளது. தற்கொலை பட்டியலில் கடைசியாக இடம்பிடித்துள்ள ஐ.சி.எப். ஊழியர் ராமலிங்கம், கடந்த அக்டோபர் 8ஆம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு இறந்துள்ளார்.


இந்தியாவில் சென்னை வில்லிவாக்கம் ஐ.சி.எப், பஞ்சாப் ஆர்.சி.எப் ஆகிய இடங்களில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. ஐ.சி.எப்.பில் மட்டும் 12 ஆயிரத்து 500 பேர் ஊழியர்களாக உள்ளனர். இதில் 3 ஆயிரம் ஊழியர்கள், வில்லிவாக்கம் ஐ.சி.எப். பகுதி குடியிருப்பில் தங்கியிருக்கின்றனர். தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய காலனிகளில் நான்கு பிரிவுகளாக உள்ள வீடுகளில் தெற்கு காலனியில் மட்டும் 1,675 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் தற்கொலை சம்பவங்களும் அதிகம் என்கின்றனர் பகுதிவாசிகள்.

ரயில்வே ஊழியர்களுக்கு நல்ல வேலை, கைநிறையச் சம்பளம், நிறைவான வாழ்க்கை என்று மற்றவர்கள் நினைத்தாலும் ஐ.சி.எப். ஊழியர்களில் 90 சதவீதம் பேர் கந்துவட்டி கொடுமையால் கஷ்டப்படுவது தான் யதார்த்தம். இது  வெளியுலகத்துக்கு தெரியாத உண்மையாகவே புதைந்து கிடக்கிறது. இதன் காரணமாகவே ஐ.சி.எப். ஊழியர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஐ.சி.எப். ஊழியர் ராமலிங்கம், சாவுக்கும் கந்துவட்டிக் கொடுமையே காரணம் என்கிறார் அவரின் மனைவி கவிதா. அவரைச் சந்தித்தோம். "எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். சம்பவத்தன்று குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக சென்றேன். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வீட்டுக்கு வந்தபோது தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தார். என்ன செய்வது? என்று தெரியாமல் கதறினேன். எனது அழுகை குரல் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்தனர். பின்னர், போலீஸுக்கு தகவல் கொடுத்தோம்.

அவர் இறந்ததற்கு முக்கிய காரணம் கடன் தொல்லை. அயனாவரத்தைச் சேர்ந்த ஒருவரிடம்  7 ஆயிரம் கடன் வாங்கியதற்கு 'பிளாங் செக்' கொடுத்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த நபர், போனில் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். இதுதவிர வேறு சிலரும் கொடுத்தப் பணத்தை விட கூடுதலாகக்  கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். இதனால் கடந்த இரண்டு நாட்களாக சோகமாகவே இருந்தார். வாங்குகிற சம்பளத்தில் முக்கால்வாசியை கடன்காரர்கள் பிடுங்கிக் கொள்கிறார்கள். இதனால் தான் இந்த முடிவை அவர் எடுத்து இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகளையும் இனி எப்படி காப்பாத்த போகிறேன்" என்றார் கண்ணீர்மல்க.

தற்கொலைக்கு முயன்ற மற்றொரு ரயில்வே ஊழியர் சுரேஷ்பாபுவிடம் பேசினோம். "அவசரத் தேவைக்காக ரயில்வே ஊழியர் ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அதற்கு மாதந்தோறும் வட்டி தொகை செலுத்தி வருகிறேன். ஒரு லட்சத்துக்கு மேல் வட்டி செலுத்தியும் அசல் அப்படியே இருக்கிறது. இந்த கடனை அடைக்க ஐ.சி.எப்.பில் வேலைப்பார்க்கும் சக ஊழியரிடம் கடன் வாங்கினேன். இந்த வகையில் இப்போது 5 லட்சம் ரூபாய்க்கு மேல கடன் இருக்கிறது. கடன் கொடுத்தவர்கள் தினமும் போனில் அசிங்கமாக என்னையும், என் வீட்டில் உள்ள பெண்களையும் திட்டியதால் அவமானம் தாங்க முடியாமல் கடந்த ஏப்ரல் மாதத்தில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். குடும்பத்தில் உள்ளவர்கள் சரியான நேரத்தில் பார்த்து என்னைக் காப்பாற்றி விட்டார்கள். இன்னமும் கடன் கொடுத்தவர்களிடமிருந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது" என்றார் விரக்தியுடன்.

தற்கொலையைத்  தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் உழைக்கும் தொழிலாளர் பேரவையின் பொது செயலாளரும், ஐ.சி.எப். ஊழியருமான சேகுவேரா ஜெயசங்கரிடம் பேசினோம். "கந்து வட்டிக் கொடுமையால் கடந்த ஜனவரியிலிருந்து இதுவரை 55 ஐ.சி.எப். ஊழியர்கள் தற்கொலை செய்ததாக நிர்வாகத்  தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை வெறும் கண்துடைப்பு. பெரும்பாலான தற்கொலை சம்பவங்கள் 'ஹாட் அட்டாக்' என்று மூடிமறைக்கப்பட்டு விடுகின்றன. ஐ.சி.எப்.பிலிருந்து கிடைக்கும் பணப்பலன்களுக்காகவே இந்த பொய் சொல்லப்படுகிறது. எங்கள் காலனியில் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை சம்பவங்கள் நடப்பது தெரிந்தும் அதை தடுக்க விழிப்புணர்வு நோட்டீசை வீடுதோறும் விநியோகித்தோம். இருப்பினும் தற்கொலைகள் தொடர்கிறது.
கந்து வட்டி கொடுப்பதில் ஐ.சி.எப். ஊழியர்களும், வேறுசிலரும் உள்ளனர். அவர்கள் மீது யாரும் புகார் கொடுக்காததால் காவல்துறை எந்தவித நடவடிக்கை எடுப்பதில்லை. இதில் இன்னொரு கொடுமை என்றால் தற்கொலை செய்து கொண்ட வீடுகளில் அடுத்து யாரும் குடியிருக்க முன்வருவதில்லை. சிலர் முன்வந்தாலும் ஐ.சி.எப். நிர்வாகம் அந்த வீடுகளை ஒதுக்குவதில்லை. ஆவிகள் நடமாட்டம் உள்ளதாக மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இந்த காலனியில் தற்கொலை செய்த 25க்கும் மேற்பட்ட வீடுகள் காலியாகவே  உள்ளன. சில வீடுகளில் நள்ளிரவில் அலறல் சப்தம் கேட்பதாகவும் காலனி மக்கள் கூறுகின்றனர். ஊழியர்கள் நலனில் ஐ.சி.எப். நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. நிர்வாகம் தரப்பில் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்வதை தடுக்க கவுன்சிலிங் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. தற்கொலை சம்பவங்கள் பெரும்பாலும் சனிக்கிழமையே நடக்கின்றன. இதற்கு ஐ.சி.எப்.பில் சனிக்கிழமை அரைநாள் மட்டுமே வேலை. அந்த நாளையே தற்கொலை செய்பவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்  பதற்றத்துடனே இருக்கின்றனர். கந்து வட்டியால் தற்கொலை செய்த குடும்பத்திற்கு கிடைக்கும் பணப்பலன்களை கந்துவட்டி கும்பல் அந்தப்பணத்தை மிரட்டி பிடுங்கிக் கொள்கிறது. இதற்கு சில ஐ.சி.எப். ஊழியர்கள் மீடியேட்டராக இருக்கின்றனர் என்பதுதான் கொடுமையின் உச்சக் கட்டம் . எனவே காவல்துறையும், நிர்வாகமும் ஒருங்கிணைந்து கந்து வட்டி கும்பலை தடுத்து ஊழியர்களை நிம்மதியாக வாழ வழிகாட்ட வேண்டும்" என்றார் சமூக அக்கறையுடன்.

 ஐ.சி.எப். ஊழியர் கணேஷ்பாபு,"அம்மாவின் மருத்துவச் செலவுக்காக கடந்த 2005ல் ஒரு லட்சம் கடன் வாங்கினேன். இந்தக் கடனை செலுத்த அடுத்தடுத்து கடன் வாங்கியதிலும், வட்டி குட்டி போட்டதிலும் இப்போது 7 லட்சம் கடனாகி விட்டது. ஏ.டி.எம். கார்டு, பாஸ்புக், வெற்று ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து ஆகியவற்றை கடன் கொடுத்தவர்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள். சம்பளம் போட்டவுடன் வட்டி தொகையை எடுத்து கொள்வார்கள். 34 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் கையில் கிடைப்பது வெறும் 19 ஆயிரம் மட்டும் தான். இந்த பணத்தைக் கொண்டு தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன்" என்றார்.

இன்னும் சில பெயர் குறிப்பிட விரும்பாத ரயில்வே ஊழியர்கள், "ஐ.சி.எப்.ப்பில் மட்டுமல்லாமல் சென்னை கோட்ட ரயில்வேயிலும் கந்துவட்டி கொடுமையால் பெரும்பாலான ரயில்வே ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கந்து வட்டிக் கொடுப்பதில் கொடிக்கட்டி பறக்கும் வியாசர்பாடியைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான ஒருவர்,  எப்போதும் 50 சவரன் நகை அணிந்து கொண்டு வலம் வருகிறார். கடனை வசூலிப்பதிலும் இவர் கில்லாடி. இதற்காக `பெண்கள் படை` ஒன்றை  வைத்திருக்கிறார். இந்த டீம், கடன் வாங்கியவர்களை பொது இடத்தில் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள்.  அவமானம் தாங்க முடியாமல் ரயில்வே ஊழியர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். சில ரயில்வே  ஊழியர்கள் சங்கமும் கந்துவட்டிக் கும்பலுக்கு பின்புலமாக இருக்கிறது" என்றார்.

இதுகுறித்து ஜ.சி.எப். தொழிலாளர் நல அலுவலர் (ஏபிஓ) ஜானிடம்,  ஐ.சி.எப்.பில் தொடர்ந்து கந்துவட்டி கொடுமையால் ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களே? என்று கேட்டதற்கு 'அப்படி யாரும் தற்கொலை செய்யவில்லை' என்றார் அலட்சியமாக. தற்கொலை செய்தவர்களின் பெயர் விபரம் இருப்பதாக சொன்னதற்கு, பிறகு பேசுவதாக கூறி இணைப்பை பட்டென துண்டித்தார்.

ஐ.சி.எப். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனிடம் பேசினோம். "ஐ.சி.எப். ரயில்வே காலனியில் மாதந்தோறும் சராசரியாக 2 தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. கடன் தொல்லை காரணமாக மனவிரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். கந்துவட்டி சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்" என்றார்.

எஸ்.மகேஷ் news.vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக