ஞாயிறு, 30 நவம்பர், 2014

தமிழகத்தில் பாஜக திருவள்ளுவர் மீது (வஞ்ச) புகழ்ச்சி?

வைகோவுக்கு அடுத்த வழி? வைகோவை பா.ஜ.கவின் சுனா சாமியும் எச்.ராஜாவும் ஏன் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்? 'தூக்கி வீசப்படுவதற்கு முன் வைகோ வெளியேற வேண்டும்’ என சுப்பிரமணியசாமி பேசியிருக்கிறார். ‘வைகோவுக்கு நாவடக்கம் தேவை. இல்லையென்றால் பத்திரமாக திரும்ப முடியாது’ என்று எச். ராஜா பேசியிருக்கிறார். மேலிடத்தின் கண்ணசைவு இல்லாமல் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன். வைகோவின் கொள்கைகளுக்கு நேர் எதிரான நிலையில் நிற்கும் இந்த இரண்டு பேரும் கொம்பை எடுத்து ஊத ஆரம்பித்திருக்கிறார்கள். இனி கணிசமான பா.ஜ.க தொண்டர்களும் வைகோவை அவமதிக்கத் தொடங்குவார்கள். பிற தலைவர்களும் இவர்களோடு கை கோர்த்துக் கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது. 
தமிழகத்தில் யாருமே கண்டு கொள்ளாத சுப்பிரமணிய சாமிக்கு தனது கட்சியில் ஒரு இடத்தைக் கொடுத்த போது நிறையப் பேர் ஆச்சரியப்பட்டார்கள். அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அஜெண்டாவில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு தொடர்ந்து குடைச்சலை கொடுத்து வர வேண்டும் என்கிற அஜெண்டா முக்கியமான இடத்தில் ஒளிந்திருந்ததை இப்பொழுது புரிந்து கொள்ளலாம். அதிமுகவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கு. திமுகவுக்கு 2ஜி. இப்பொழுது மதிமுகவுக்கு அவமானம்.
பதிலடி கொடுப்பதற்கு வைகோவுக்கும் ஓரளவுக்கு தொண்டர் படை இருக்கிறது என்றாலும்- ஓரளவுக்கு என்பதனை பா.ஜ.கவோடு ஒப்பிடும் போது பெரிய அளவுக்கு என்றே சொல்ல முடியும்-ஆனாலும் அதெல்லாம் வேலைக்கு ஆகாது என்றுதான் நினைக்கிறேன். ராஜாவுக்கும், சுனாசாமிக்கும் கிடைக்கும் ஊடக வெளிச்சம் மதிமுகவினருக்கு கிடைக்காது என்பதே உண்மை. டீக்கடையில் அரசியல் பேசும் ஒரு சாமானிய மனிதனிடம் வைகோ பற்றி பேசினால் ‘அவருக்கு ஏன் இந்த மானங்கெட்ட பொழப்பு? கூட்டணியை விட்டு வெளிய வர வேண்டியதுதானே?’ என்று கேட்பதற்கான எல்லாவிதமான வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 
கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டால் வைகோவுக்கான போக்கிடம் என்னவாக இருக்கும்? ஜிகேவாசனை தனது கூட்டணிக்கு  இழுத்துவிட்டால் வைகோவை ‘வந்தால் வா..வராட்டி போ’ என்கிற ரீதியில்தான் திமுக வைத்திருக்கும். திமுகவை விட்டுவிட்டு அதிமுகவுக்குச் சென்றால் பா.ஜ.கவைவிடவும் அவமானப்படுத்தப்படுவார். தனித்து நிற்பது தற்கொலைக்குச் சமானம். காங்கிரஸுடன் கூட்டு சேர முடியுமா என்ன?
ஏன் இந்த திடீர் தாக்குதல்?
பாராளுமன்றத் தேர்தல் வரைக்கும் பா.ஜ.கவுக்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவையானதாக இருந்தது. இப்பொழுது அவர்களின் டார்கெட் 2016 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல். ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால் தமிழகத்தில் கால் பதித்துவிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள். இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவித்து தமிழர்களின் நண்பனாக தன்னை காட்டிக் கொண்டது, தருண் விஜய் என்ற ஆர்.எஸ்.எஸ்காரரை வைத்து தமிழ் உன்னதமான மொழி என்று பேச வைத்து தமிழ் மீது  ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு எந்த வெறுப்புமில்லை என்று பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருப்பது, நேற்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் அறிவிப்பான ‘இனி திருவள்ளுவர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும்’ ‘பாரதியாரின் பாடல்கள் தேசிய அளவில் பாடத்திட்டத்தில் இடம்பெறும்’ என்கிற அறிவிப்புகளை எல்லாம் ஒன்றுக்கொன்று கோர்த்துப் பார்க்கலாம். 
ஆக, தமிழகத்தில் தனக்கான இடத்தை உறுதியாக்கிக் கொள்வதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. நாற்பதாண்டு காலமாக பிற கட்சிகளில் முதுகில் சவாரி செய்து கொண்டிருந்த காங்கிரஸின் ஃபார்முலா பா.ஜ.கவுக்கு எந்தவிதத்திலும் ஏற்புடையதில்லை போலிருக்கிறது. எங்கெல்லாம் தமிழ்நாடு Vulnerable ஆக இருக்கிறதோ அங்கெல்லாம் தலையை உள்ளே விட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் அரசியலில் கால் பதிக்க இந்துத்துவத்தைவிடவும் தமிழ் இன உணர்வைக் காட்டிக் கொள்வது அவசியம் என்பதை பா.ஜ.க புரிந்து கொண்டிருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது.
தமிழகத்தில் தமிழ் உணர்வை காட்டிக் கொண்டிருக்கும் வைகோ என்கிற அரசியல்வாதியின் பிம்பம் உடைபடுவது பா.ஜ.க நுழைவதற்கான வழியை இன்னமும் சுலபமாக்கிவிடும் என்று அவர்கள் கருதுகிறார்கள் போலிருக்கிறது.
அதிமுகவுக்கும் திமுகவுக்கும் அடுத்தபடியாக தமிழகத்தில் செயல்படக் கூடிய கட்சியாக மதிமுக இருக்கிறது என்று பா.ஜ.கவினர் நினைக்கக் கூடும். திமுகவின் தொண்டர்களை கணிசமான அளவில் வைகோ ஈர்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என கணித்திருக்கக் கூடும். வைகோவின் பிம்பம் ஓரளவு வலுவானதாக இருக்கும் வரையில் பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் காலூன்றுவதற்கு சிக்கல் என்று யோசிக்கக் கூடும். இப்படி எத்தனையோ ‘கூடும்’கள்.
வைகோ தன்னை பா.ஜ.கவின் தோழனாகக் காட்டிக் கொண்டாலும் அவரது அடுத்த இலக்கு என்ன என்பதை பா.ஜ.கவின் மேலிடம் துல்லியமாக கணித்திருக்கிறது என்று நம்பலாம். இப்பொழுது அடிக்கத் தொடங்கியிருப்பதன் காரணமே வைகோவின் அந்த நம்பிக்கையில் ஒரு பெரிய ஓட்டையை போட்டுவிடலாம் என்கிற எத்தனிப்புதான். வைகோவுக்கான அத்தனை கதவுகளையும் அடைப்பதில் பா.ஜ.க வெற்றி பெற்றுவிடும் என்று தோன்றுகிறது.
இன்றைய சூழலில் பா.ஜ.கவுக்கு தேமுதிக தேவையான கட்சியாகத்தான் இருக்கும். தேர்தலில் களப்பணியாற்றுவதற்கு விஜயகாந்த்தும் அவரது தொண்டர்களும் அவசியம். ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு வேண்டுமானால் அந்தக் கட்சியை காலி செய்வதற்கான முஸ்தீபுகளில் இறங்கக் கூடும் அல்லது திமுக, அதிமுக, மதிமுக என்ற வரிசையில் அடுத்த இடத்தில் தேமுதிக இருக்கலாம்.  
தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சதுரங்க வேட்டையை நாம் பார்க்கத் துவங்கியிருக்கிறோம்.
இதில் சரி, தவறு என்றெல்லாம் நம்மால் எதையுமே சொல்ல முடியாது. வலுவுள்ளவன் ஜெயித்துக் கொண்டிருப்பான். வலுவில்லாதவன் ஒதுக்கப்படுவான். வரலாறு ஈவு இரக்கமற்றது. தோற்கிறவனை எந்தவித தயவுதாட்சண்யமுமில்லாமல் ஒரு வரியோடு கடந்து கொண்டேயிருக்கும். ஆனால் ஜெயிக்கிறவனுக்கு தனது புத்தகங்களில் பல நூறு பக்கங்களை ஒதுக்கி வைத்திருக்கும். வைகோவிற்கான இடம் என்ன என்பதை இன்னமும் சில வருடங்களில் தெரிந்து கொள்ளலாம் அல்லது சில மாதங்களில்.nisaptham.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக