ஞாயிறு, 30 நவம்பர், 2014

'எல்லோரையும் சந்தேகி' -தருண் விஜய் உள்பட!

பாரதிய ஜனதாவிற்குப் பல முகங்கள் உண்டு! அமைதியாகப் பேசும் இல. கணேசன் ஒரு முகம். அடாவடியாய்ப் பேசும் ஹெச்.ராஜா இன்னொரு முகம்! தமிழர்களைப் பொறுக்கிகள் என்று சொல்லும் சு.சாமி ஒரு முகம், தமிழ் மொழியை, திருக்குறளைப் போற்றும் தருண் விஜய் இன்னொரு முகம். எப்போதும் தமிழர்களுக்கு மட்டும் ஒரே முகம் - ஏமாளி முகம்! பா.ஜ.கட்சி, தான் ஆட்சிக்கு வருவதற்கு முன் எத்தனையோ உறுதிமொழிகளைக் கொடுத்தது. வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் இந்தியாவிற்குக் கொண்டுவந்து, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுப்போம் என்றது. (பாவம், அதை நம்பிப் பலபேர் கடன் வேறு வாங்கி விட்டார்கள்!) இப்படிப் பல்வேறு உறுதிமொழிகள். ஆனால் இன்றோ, சமஸ்க்ருதத் திணிப்புக்கு மட்டும்தான் அவர்களுக்கு நேரம் இருக்கிறது. முதலில் சமஸ்க்ருத வாரம். பிறகு, கேந்திரிய வித்யாலயங்களில் ஜெர்மன் மொழிக்குப் பதிலாக, சம்ஸ்க்ருதப் பாடம். கடந்த வாரம், தில்லியில் நடைபெற்ற 'ஜல் தன்மன்' என்னும் நதிநீர் இணைப்புக் கருத்தரங்கில், நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதி ஒரு புதிய கருத்தை வெளியிட்டுள்ளார். அங்கே பேசியவர்களில் சிலர் ஆங்கிலத்தில் பேசும்போது, எதிர்த்துச் சிலர் குரல் எழுப்பியுள்ளனர். உடனே, உமா பாரதி எழுந்து, சிலருக்கு இந்தி தெரியவில்லை, சிலருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. இந்தச் சிக்கலைப் போக்குவதற்கு ஒரே வழிதான் உள்ளது. இந்தியா முழுவதும் சமஸ்க்ருதத்தை இணைப்பு மொழியாக்கிட வேண்டும் என்று கூறியுள்ளார். உண்மைதான்...இந்தி சிலருக்குத் தெரியும், ஆங்கிலம் சிலருக்குத் தெரியும். சமஸ்க்ருதாமோ யாருக்குமே தெரியாது.எனவே அதனைப் பொது மொழியாக்கிவிட வேண்டியதுதான்! இவ்வாறு சமஸ்க்ருதத் திணிப்பு ஒருபுறத்தில் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான், தருண் விஜய் என்னும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர், தமிழின் பெருமை குறித்தும், திருக்குறளின் உயர்வு குறித்தும் தொடர்ந்து பேசிக் கொண்டுள்ளார். அவர் உண்மையிலேயே, தமிழ்ப் பற்று உடையவர்தானா, திருக்குறளின் மீது தீராக் காதல் கொண்டவர்தானா என்று எண்ணிப் பார்த்திட வேண்டியுள்ளது.  தருண் விஜயின் தமிழ்ப் பற்று உண்மையாகக் கூட இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அதனை விட, அவர் மிகப் பெரிய சம்ஸ்க்ருதப் பற்றாளர் என்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான 'பாஞ்சசன்யா'வின் ஆசிரியராக இருந்தவர் அவர். டைம்ஸ் ஆப் இந்தியாவின் வலைப் பூத் தளங்களில் அவர் சமஸ்க்ருதம் குறித்து என்ன எழுதியுள்ளார் தெரியுமா? "சமஸ்க்ருதம் என்றால் இந்தியா. இந்தியா என்றால் சமஸ்க்ருதம். தெற்கிலிருந்து வடக்காகவும், மேற்கிலிருந்து கிழக்காகவும் இந்தியாவை இணைக்கும் மாபெரும் சக்தி சமஸ்க்ருதம்" என்று அவர் குறிப்பிடுகின்றார். ஒருவருக்கு இரு மொழிகளின் மீதும் பற்று இருப்பதில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால் இந்தியாவை சமஸ்க்ருதத்தால்தான் இணைக்க முடியும் என்னும் பார்வை, தமிழ் உள்ளிட்ட எல்லா இந்திய மொழிகளுக்கும், ஏன், ஜனநாயகத்திற்குமே எதிரானது. ஆனால் அதே தருண் விஜய் சீனாவிற்குச் சென்று திருக்குறளைப் படிக்கச் சொல்கிறாரே என்று கேட்கலாம். ஆம்..சீனாவில் உள்ளாவார்கள் திருக்குறள் படிக்கட்டும், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் சமஸ்க்ருதம் படிக்கட்டும் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்!  தமிழர்களுக்கு வீசப்பட்டிருக்கும் அடுத்த வலை, வடநாட்டுப் பள்ளிகளிலும் திருவள்ளுவர் நாள் கொண்டாடப் போவதான அறிவிப்பு! திருக்குறளை அவர்கள் எப்படி எடுத்துச் செல்லப் போகிறார்கள், திருவள்ளுவரின் முகமாக எதனைக் காட்டப் போகிறாரர்கள் என்பதை எல்லாம் பொறுத்திருந்து நாம் பார்க்க வேண்டும். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் வள்ளுவ முழக்கத்தையா அவர்கள் முன்னெடுப்பார்கள்? வருணாசிரமத்திற்கு எதிரான வள்ளுவரை யாராக அவர்கள் படம் பிடிக்கப் போகின்றனர் என்பதில் நமக்குக் கவனம் வேண்டும். தமிழ் மன்னன் ராசேந்திரனுக்கு விழா எடுப்பதைக் கூடவா சந்தேகிக்க வேண்டும் என்று வினவலாம். ஆம்..கண்டிப்பாக! ராசேந்திரன் ஒரு தமிழ் மன்னன் என்பதால் அவர்கள் விழா எடுக்க நினைக்கவில்லை. பழைய தென் ஆர்க்காடு மாவட்டத்திலிருந்த 'எண்ணாயிரம்' என்னும் ஊரில் வேதப் பள்ளிகளைத் தொடக்கி வைத்தவன் ராசேந்திரன் என்று வரலாற்றாசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரியும், கே.கே. பிள்ளையும் நிறுவி உள்ளனர். தமிழ் நாட்டில் வேதப் பள்ளியை, சமஸ்க்ருத மொழியைப் பரப்பிய மன்னரை அவர்கள் பாராட்டத்தானே செய்வார்கள்! அதிகாரத்திற்கு வந்துவிட்ட அவர்கள் அடக்கு முறையாலும், அரவணைப்பு வழியாலும் தமிழ் நாட்டைக் கைப்பற்றி விடலாம் என்று பல்வேறு முயற்சிகள் செய்கின்றனர். அடக்கு முறை, அதிகாரத் திமிர் ஆகியனவும் அவர்களிடமிருந்து அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது என்பதற்கு, ஹெச். ராஜாவின் அண்மைப் பேச்சு ஓர் எடுத்துக்காட்டு. எங்கள் தலைவர்களைத் தாக்கிப் பேசிவிட்டு வைகோ பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்துவிட முடியாது என்கிறார் ஹெச். ராஜா. இது ஒரு கொலை மிரட்டல். வைகோ வேறு கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனாலும் ஒரு திராவிடக் கட்சித் தலைவரை, பார்ப்பனர் ஒருவர் மிரட்டுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது! தானாடா விட்டாலும் எங்கள் சதை ஆடும்! தமிழர்களே, விழிப்பாயிருங்கள்! தருண் விஜயைப் பாராட்டுவதில் அப்படி ஒன்றும் அவசரம் தேவையில்லை. பா.ஜ.க.வின் 'பிள்ளை பிடிக்கும்' விளையாட்டில் ஒரு புதிய வேடம்தான் தருண் விஜய்! அன்புடன் சுப.வீரபாண்டியன்
/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக