ஞாயிறு, 30 நவம்பர், 2014

இந்த விஞ்ஞானி உண்மையிலேயே அறிவாளி தான்

(டி.என்.எஸ்) பண்டையக்கால தமிழ் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும், அவை குறித்த வரலாற்று குறிப்பிகளையும் மையமாக வைத்து ஒரு கற்பனை கதையுடன் உருவாகியுள்ள விஞ்ஞானம் சம்மந்தமான படம் தான் இந்த ‘விஞ்ஞானி’ விஞ்ஞானியான நாயகன் பார்த்தி, எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளதால், குறைந்த தண்ணீரில் விளையக்கூடிய நெல்லை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இது சாத்தியமில்லாத ஒன்று, என்று சக விஞ்ஞானிகள் கூற, இதை சாத்தியமாக்கி காட்டுகிறேன் என்று சவால் விட்டு, அதற்கான முயற்சியில் இறங்குகிறார் பார்த்தி. இந்த நிலையில், தமிழக கிராமம் ஒன்றில், தமிழ் ஆசிரியையாக இருந்துக்கொண்டு, விவசாயத்திலும் ஈடுபாடு காட்டி வரும் மீரா ஜாஸ்மீன், தனது கிராமத்தில் உள்ள மலை கோவில் அருகே ஒரு கல்வெட்டு இருப்பது போலவும், அதன் அருகில் நெல் பயிர்களை சிலர் புதைத்து வைப்பது போலவும் கனவு காணுகிறார். அதன்படி, அந்த இடத்தில் மீரா ஜாஸ்மீனின் குடும்பம் அந்த கல்வெட்டை தேடி கண்டுபிடிக்கிறார்கள். அதில், தொல்காப்பியர் எழுதிய கல்வெட்டு என்றும், அதில், தாகம் தீர்த்த நெல் என்ற ஒன்று இருப்பதாகவும், அது குறைந்த நீரில் பெரும் விளைச்சல் கொடுக்க கூடிய நெல், என்றும் குறிப்பிட்டிருப்பதுடன், அந்த நெல்லை ஒரு பானையில் வைத்து அங்கே புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் எழுதப்பட்டிருக்கிறது. அதை மீரா ஜாஸ்மீன் கைப்பற்றுகிறார்.


தொல்காப்பியர் காலத்தில், தொல்காப்பியரால் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட அந்த நெல்லுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, அதை விவசாயம் செய்வதற்கு ஏற்றவாறு மாற்றுவதற்காக, ஜெனட்டிக் விஞ்ஞானியான நாயகன் பார்த்தியை கிராம மக்கள் அனுகிறார்கள். ஆனால், பார்த்தியோ, அவர்கள் சொல்வதை நம்பாமல், அவர்களை விரட்டியடிக்கிறார்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் யோசிக்கும் நிலையில், விஞ்ஞானியை திருமணம் செய்துக்கொண்டால், மனைவிக்கு கட்டுப்படுவார் என்ற நோக்கத்தில், விஞ்ஞானியின் தந்தையின் ஆதரவோடு, அவரை காதலித்து மீரா ஜாஸ்மீன் கரம் பிடிக்கிறார். சமயம் பார்த்து தாகம் தீர்த்தா நெல்லைப் பற்றி பார்த்தியிடம் சொல்ல மீரா ஜாஸ்மீன் காத்திருக்க, அந்த நேரத்தில் அந்த தாகம் தீர்த்தா நெல்லை, அவரிடம் இருந்து பார்த்தியின் உதவியாளரான சஞ்சனா பறிக்க முயற்சிக்க, நெல்லை காப்பாற்ற அவருடன் மல்லுகட்டும் மீரா ஜாஸ்மீன் மயக்கமடைகிறார். நெல்லை திருடிச்சென்ற சஞ்சனாவும் மீரா ஜாஸ்மீன் வீட்டிலேயே கொலை செய்யப்பட, அந்த கொலை பழி மீரா ஜாஸ்மீன் மீது விழுகிறது.

நெல் தொலைந்த நிலையில், கொலை பழியை சுமந்துக்கொண்டு தலைமறைவான மீரா ஜாஸ்மீன், உண்மையான கொலையாளிகளை கண்டறிந்தாரா, தொலைந்த நெல்லை மீட்டு அதை உயிர் பெற செய்தாரா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

தமிழ் காப்பியங்களில் குறிப்பிட்டுள்ள விவசாய அறிவியல் செய்திகளை மையமாக வைத்து, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு ஒரு கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

வில்லத்தனமான முகத்தையும், உடம்பை வைத்துக்கொண்டு ஹீரோவாக நடிப்பதற்கு, பார்த்தி சற்று யோசித்திருக்கலாம். இருப்பினும், திரைக்கதையின் சுவாரஸ்யத்தின் மூலம் பார்த்தியின் சொதப்பல்கள் படம் பார்ப்போரின் கண்ணுக்கு தெரியாமல் போகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருந்தாலும், மீரா ஜாஸ்மினின் கதாபாத்திரம் நிறைவாக உள்ளது.

சிறு இடைவெளிக்குப் பிறகு தனது காமெடி மூலம் திரையரங்கையே அதிர வைக்கிறார் விவேக். அவருடன் தேவதர்ஷினியும் இணைந்து செய்யும் நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

இசை, ஒளிப்பதிவு, நடிகர் நடிகைகள் என அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

தொல்காப்பியத்தில் தாகம் தீர்த்தா நெல் குறித்து எழுதப்பட்டிருப்பதை மையமாக வைத்து, ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையோடு எடுக்கப்பட்டுள்ள இந்த விஞ்ஞானி, உண்மையிலேயே அறிவாளி தான்.

ஜெ.சுகுமார்  tamil.chennaionline.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக