ஞாயிறு, 30 நவம்பர், 2014

இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் - விழிப்புணர்வுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு

இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் வேரூன்றுவதற்கான கண்ணி வெடியாக பயன்படுத்தலாம் என்று நினைத்து இதனைத்  தூண்டில் முள்ளாகப் பயன்படுத்த நினைக்கக் கூடாது என்று தேவையான எச்சரிக்கையுடன் கூடிய அரிய அறிக்கையைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத் துள்ளார் - அறிக்கை வருமாறு:
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இயக்கப்படி - நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசின் சார்பில் திருவள்ளுவர் நாள் இந்தியா முழுவதும் மத்திய அரசால் கொண்டாடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி அவர்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதற்கு வழி வகுக்கும் வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க., எம்.பி.யும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஹிந்தி ஏடான பாஞ்சன்யாவின் முன்னாள் ஆசிரியருமான தருண்விஜய் அவர்கள் மக்களவையில் இப்படிப் பேசி வலியுறுத்தியதனால் அமைச்சர் அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.
திடீரென்று அவரே முடிவு செய்து அறிவித்திருக்க இயலாது; ஏற்கெனவே இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டிகளின் திட்டமாகத்தான் இது யோசிக்கப்பட்டு பிறகுதான் அறிவித்திருக்க முடியும்.
இதை வரவேற்கிறோம்; என்றாலும் ஆர்.எஸ்.எஸ். தமிழ் நாட்டிலும், தமிழர்கள் மத்தியில் வேரூன்றுவதற்கு இதை ஒரு தந்திர உபாயமாகவோ, கண்ணி வெடியாகவோ பயன்படுத்தலாம் என்றோ நினைத்துக் கொண்டு இதை தூண்டில் முயற்சியாக கருதி இறங்கக் கூடாது. நாம் இப்படி சொல்வது ஏனோ என்று சில தமிழறி ஞர்கள்கூட எண்ணக் கூடும்.
அவர்கள் அறியாத ஒரு தகவலை நாம் இங்கே எழுதி தெரிவிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.
கோல்வால்கர் கூறுவது என்ன?
ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் தத்துவ போதகரான கோல்வால்கர் எழுதிய ‘Bunch of  Thoughts என்ற ஆங்கில நூல் 'ஞான கங்கை' என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. (பக்கம் 168-169).
அந்நூலில் - எம் மதத்தையும் சாராத திருவள்ளுவரை - ஒரு ஹிந்துத்வாவாதிபோல் சித்தரித்து எழுதியுள்ளார்.
அப்பகுதி இதோ:
தற்காலத்தில் தமிழைப்பற்றி நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். தமிழ் என்பது தனக்கென வேறான கலாசாரமுடைய தனிப்பட்ட மொழி என்று கூறுகின்றனர். அவர்கள் வேதத்தில் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றனர். திருக்குறளை அவர்களது மறையாகக் கருதுகின்றனர். திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட ஒரு பழைமையான அறநூல்தான். திருவள்ளுவ முனிவர் அதன் ஆசிரியர் ஆவார். அவரை நாம் நமது ப்ராதஸ்மரணத்தில் நினைவு கூர்கிறோம். மிகப் புகழ் பெற்ற புரட்சிவாதியான வ.வே.சு. அய்யர் திருக்குறளை (ஆங்கிலத்தில்) மொழி பெயர்த்துள்ளார்). திருக்குறளில் நாம் காண்பது என்ன? நாடெங்கும் அறிமுகமான நான்குவித வாழ்க்கை முறை (சதுர்வித புருஷார்த்தம்) அதில் விஷயமாகக் கூறப்பட்டுள்ளது.
மோட்சத்தைப் பற்றிய அத்தியாயம் மட்டும் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. அது எந்தக் கடவுளையும் அல்லது எந்த வழிபாட்டு முறையையும் பின்பற்றுமாறு கூறவில்லை. மோட்சம் என்ற உயர்ந்த விஷயத்தைப் பற்றியே கூறுகின்றது. எனவே, அது எந்த ஒரு சாரரின் நூலும் அல்ல. மகாபாரதம்கூட திருக்குறள் கூறுவது போன்ற வாழ்க்கை முறைகளையே புகழ்ந்து கூறுகின்றது. ஹிந்துக்களிடம் அல்லாது மற்ற எந்த மதத்தவரிடமும் இவ்வாறான சிறந்த வாழ்க்கை முறை நோக்கு காணப்படவில்லை. எனவே, திருக்குறள் சிறந்த ஹிந்துக் கருத்துக்களைத் தூய ஹிந்து மொழியில் எடுத்துக் கூறும் ஒரு ஹிந்து நூல் ஆகும் என்று கோல்வால்கர் கூறியுள்ளார்.
- இதில் திருவள்ளுவரின் திருக்குறளில் இல்லாத மோட்சம் - வீடு இருப்பதாக தவறாக விளக்கமும் கூறி திரிபுவாதம் செய்யப்பட்டுள்ளது.
அத்தகைய கோணத்தில் மத்திய அரசு திருவள்ளுவரை  ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் என்று சாயம்பூசி, தம் இச்சைபோல வளைத்து விடவோ, திருவள்ளுவர் பிறப்புப்பற்றிய தவறான - அருவறுக்கதக்க கதைகளை கூறி, அவற்றை அதிகாரப் பூர்வமாக்கி அரசு இயந்திரத்தின் மூலம் பரவச் செய்தால் ஏற்படும் கேடு பன்மடங்காகி விடும்.
எனவே, விழிப்புணர்வுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு இது என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினையும், ஏனையோரையும் எச்சரிக்க வேண்டியது நமது முக்கிய கடமையாகும்.

viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக