ஞாயிறு, 30 நவம்பர், 2014

பி.வி. ஆச்சார்யா : ஜெயலலிதாவின் வழக்கு காலத்தில் தினமும் 10 தொலைபேசி மிரட்டல்களாவது வரும்.

பி. வி. ஆச்சார்யா
பி. வி. ஆச்சார்யா
பி.வி. ஆச்சார்யா. நாட்டின் மூத்த, முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர். 80 வருஷ வாழ்க்கையில், 60 வருஷங்களைச் சட்டப் புத்தகங்களோடு கழித்திருப்பவர். ஐந்து முறை அட்வகேட் ஜெனரல், பார் கவுன்சில் தலைவர், இந்திய சட்ட ஆணைய உறுப்பினர் உள்பட பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னதாக அரசுத் தரப்பில் வாதாடி, தொடர் நெருக்கடிகள் காரணமாக விலகியவர். ஓர் இளம்காலைப் பொழுதில் ஆச்சார்யாவைச் சந்தித்தேன்.
சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர் நீங்கள். இப்போது அன்றைய ‘மெட்ராஸ் நாட்கள்’ நினைவுக்கு வருவது உண்டா?
என்னுடைய சொந்த ஊர் உடுப்பி பக்கம், ஒரு அழகான கிராமம். 1953-ல் மங்களூருவில், ‘மெட்ராஸ் மெயில்’ ரயிலேறி சென்ட்ரல் போய் இறங்கினேன். புதிய ஊர், புதிய மனிதர்கள், பல வித்தியாசமான கலாச்சாரங்கள் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்தது அன்றைய மெட்ராஸ். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அனந்த நாராயணன் எனக்கு அப்போது சட்ட‌க் கல்வி போதித்தவர். பகல் நேரத்தை நூலகத்தில் செலவிட்டு, மாலை நேரத்தில் கல்லூரிக்கு போவேன். ஐஸ்ஹவுஸ் வெங்கடேஸ்வரா விடுதியில் தங்கியிருந்தேன். அடிக்கடி கடற்கரைக்குப் போவேன். ரொம்ப நாட்கள் யாரேனும் மெட்ராஸ் என்று உச்சரித்தால் இவையெல்லாம்தான் ஞாபகத்து வரும்.
இப்போதெல்லாம் மெட்ராஸை நினைத்தால் ஜெய லலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குதான் நினைவுக்கு வருகிறது. அங்கிருந்து வரும் யாரும் அதைப் பற்றியே விசாரிக்கிறார்கள். சமீபத்தில் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் பேசிக்கொண்டிருந்தபோதுகூட, “சென்னை பக்கம் போயிடாதீங்க சார். அம்மா ஆதரவாளர்கள் உங்கள் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள்” என்று கிண்டல் அடித்தார்.

ஜெயலலிதாவின் வழக்கில் நீண்ட காலம் அரசு வழக்கறிஞராக இருந்தீர்கள். சொத்துக்குவிப்பு வழக்கின் மொத்த விஷயமும் அறிந்த உங்களால், நீதிபதி டி' குன்ஹாவின் தீர்ப்பைக் கணிக்க முடிந்ததா?
இல்லை. எவ்வளவு திறமையான வழக்கறிஞராக இருந் தாலும் தீர்ப்பை 100% சரியாகக் கணிக்க முடியாது. வழக்குகளும் வாழ்க்கை மாதிரிதான். நிறைய ஆச்சரியங் களும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்தவை. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்குப் பிணை கிடைப்பது 100% உறுதி என்று ஊகித்தேன். அது நடந்தது.
ஜெயலலிதா வழக்கிலிருந்து விலகுமாறு பாஜக மேலிடமும் கர்நாடக அரசும் உங்களை ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக உங்கள் சுயசரிதையில் எழுதியிருக் கிறீர்கள். ஆனால், யார் அழுத்தம் கொடுத்தார்கள் என்று வெளியிடவில்லை. காரணம் என்ன, பயமா?
பயமெல்லாம் இல்லை. நாகரிக‌த்தின் அடிப்படையில் குறிப்பிடவில்லை. ஜெயலலிதா தரப்பை எதிர்த்து வழக்காடும் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்யும்படி பாஜக மேலிடத் தலைவர்கள் சிலர் எனக்கு தொலைபேசி மூலமாகவும் நேரிலும் அழுத்தம் கொடுத் தார்கள். அப்போதைய கர்நாடக பாஜக அரசும்கூட, “உங்களுக்கு எதற்கு வீண் சிக்கல்? அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமாசெய்துவிட்டு, அட்வகேட் ஜெனரல் பதவியைத் தொடருங்கள். தேவைப்பட்டால் வேறு சில வசதிகளும் ஏற்பாடு செய்கிறோம்” என அனுதாபம் காட்டுவதுபோல் மிரட்டியது. நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜெயலலிதாவின் வழக்கில் அரசு வழக்கறிஞராகத் தொடர்ந்தேன். இதனால் என் மீது அவர்களுக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது.
ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் உங்களை தொலைபேசியிலும், நேரிலும் மிரட்டியதாகக் கூறியிருக்கிறீர்களே?
ஆமாம். ஜெயலலிதாவின் வழக்கு காலத்தில் எனக்கு தினமும் 10 தொலைபேசி மிரட்டல்களாவது வரும். கண்டபடி திட்டுவார்கள். ஒருகட்டத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், லோக் அயுக்தா நீதிமன்றத்திலும் என் மீது அவதூறு வழக்குகளைத் தொடுத்தார்கள். நீதிமன்ற வளாகத்தில் அவதூறான துண்டறிக்கைகளைப் பரப்புவது, சுவரொட்டிகளை ஒட்டுவது, சாலையில் காரை இடிப்பது போன்று வருவது… இப்படிப் பல வகைகளிலும் தொல்லைகள் வரும். எனக்கு மன உளைச்சல் தந்தது இவையெல்லாம் கூட இல்லை, ஜெயலலிதா தரப்பில் தினமும் மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்தார்கள். ஒரு வருஷத்தில் முடிய வேண்டிய வழக்கு முடிவே இல்லாமல் நீண்டது. அதனால்தான், நிம்மதி இழந்து ராஜினாமா செய்தேன்.
ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் நீங்கள் கருணாநிதியின் ஆதரவாளர் என்று கூறுகிறார்களே?
அப்படியா, இது நானே கேள்விப்படாத பொய்யாக இருக்கிறதே? கருணாநிதியை இதுவரைக்கும் டிவியில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அன்பழகனின் வழக்கறிஞர்கள் என்னைச் சந்திக்க முயன்றிருக்கின்றனர். ஆனால், நான் மறுத்துவிட்டேன்.
பணம், சொத்து, பதவி, புகழ் எல்லாவற்றையும்விட எனக்கு தர்மமும் என்னுடைய கொள்கையும் முக்கியம். ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நான் ஒருபோதும் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் இருந்ததில்லை; ஆதரவாகவும் செயல்பட்டதில்லை. அரசு வழக்கறிஞராக என் கடமையைச் செய்தேன். அவ்வளவுதான்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் தோல்விக்கு அவருடைய வழக்கறிஞர்கள்தான் காரணம் என தற்போதைய அரசு வழக்கறிஞர் பவானி சிங் சொல்கிறார். உங்கள் கருத்து என்ன?
எனக்கு எதிர்த் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்களைப் பற்றிக் கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஆனால், ஒரு விஷயம் சொல்லலாம். சொத்துக்குவிப்பு வழக்கை ஜெயலலிதா அணுகிய முறை தவறு. அவர் இத்தனை வருஷங்கள் வழக்கை இழுத்தடித்திருக்கக் கூடாது. அவர் தவறாக வழிநடத்தப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். 2013-ல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்த‌ம் மேற்கொள்ளப்படும் முன்பே இந்த வழக்கை முடித்திருந்தால், இதே தீர்ப்பு வந்திருந்தால்கூட ஜெயலலிதா இப்போது சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடர்ந்திருக்க முடியும்.
உங்களுடைய நண்பரான வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னர் ஒருமுறை ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர். தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாதாடி பிணை பெற்றுத் தந்திருக்கிறார். ஒரு மூத்த வழக்கறிஞரே ஒரே வழக்கில் இப்படி எதிராகவும், ஆதரவாக வாகவும் வாதிடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இது தவறு. எதிர்கால தலைமுறைக்கு தவறான முன்னு தாரணமாக அமைந்துவிடும். என்னைப் பொறுத்தவரை எல்லாவற்றையும்விட வழக்கறிஞர்க‌ளுக்கு முக்கியம் தர்மம். தான் உண்மை என்று நம்பும் விஷயத்தின் மீதான உறுதியான பிடிப்பு.
இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றம் வரை ‘அங்கிள் நீதிபதிகள்’ சிக்கல் நீடிக்கிறது. தந்தையோ, மகனோ, நெருங்கிய உறவினர்களோ நீதிபதிகளாக இருக்கும் நீதிமன்றத்தில் அவர்களது உறவினர்கள் வழக்கறிஞர்களாக வழக்குகளில் ஆஜராவதைப் பார்க்க முடிகிறது. இது போன்ற வழக்குகளில் விசாரணைகள் நேர்மையாக நடத்தப்பட்டு, உண்மையாக நீதி நிலைநாட்டப்படுமா?
இத்தகைய முறையைக் கண்டிப்பாக நாம் ஏற்க முடியாது. கர்நாடகத்தில் இத்தகைய முறையை எல்லோரும் சேர்ந்து ஒழித்திருக்கிறோம். வட இந்தியாவில் இது தொடர்கிறது. வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சிறிதளவேனும் தொழில் தர்மத்தையும் தார்மீக நெறியையும் கடைப்பிடித்து, அறத்தைக் காக்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தில் நீதித் துறையும் தன்னுடைய மாண்புகளை இழந்துவிட்டால், எளிய மனிதனின் இறுதி நம்பிக்கையாக இங்கு என்ன இருக்கும்?
நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று ஒலிக்கும் குர‌லை எப்படி பார்க்கிறீர்கள்?
இது மிக பெரிய விவாதத்துக்கும் ஆய்வுக்கும் உரிய கேள்வி. என் அளவில், மற்ற துறைகளைப் போல நீதித் துறையில் இட ஒதுக்கீட்டை அப்படியே அமல்படுத்துவது மிகப் பெரிய ஆபத்தாக முடியும் என நினைக்கிறேன். அதேசமயம், நீதிபதி நியமனத்தில் ஒரே தகுதி உள்ள இருவருக்குள் போட்டி ஏற்பட்டால், வாய்ப்பு மறுக்கப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
காவிரி நீர் தொடர்பான வழக்குகளில் தொடக்கத்தில் கர்நாடக அரசின் சார்பாக ஆஜராகியிருக்கிறீர்கள். கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக இவ்விவகாரத்தில் கர்நாடகத்தின் சட்ட ஆலோசனைக் குழுவில் இருக்கிறீர்கள். மேகேதாட்டு அணை திட்டத்தை எதிர்த்து தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லையா?
கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுவை என நான்கு மாநில துறைசார் வல்லுநர்களும், வேளாண் விஞ்ஞானி களும், நீர்வளத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்த ஒரு குழுவை உருவாக்கி, இவ்வழக்கை அணுக வேண்டும்.
மேலும் இதில் 4 மாநிலங்களுக்கும் தொடர்பில்லாத, மிக நேர்மையாக செயல்படக்கூடிய அதிகாரிகளையும் இணைக்க வேண்டும். அப்போது ஓரளவுக்கு சரியான முடிவை எடுக்க முடியும் என நம்புகிறேன். ஏனென்றால் நீர்ப் பற்றாக்குறையால்தான் காவிரிப் பிரச்சினை நீடிக்கிறது. எனவே இருக்கும் நீரை எப்படி சரிசமமாகப் பயன்படுத்தலாம் என இந்த மாநிலங்களின் விவசாயிகளும், அரசும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழர்களாக இருந்தாலும், கன்னடர்களாக இருந்தாலும் உயிர்களின் தாகத்துக்கும் பயிர்களின் தாகத்துக்கும் நீரைக் கண்டிப்பாக வார்க்க வேண்டும். அப்போதுதான் மனிதம் தழைக்கும்..!
- இரா. வினோத், தொடர்புக்கு: vinoth.r@thehindutamil.co.in
படம்: ஜெஸ்டின் tamil.hindu.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக