வியாழன், 20 நவம்பர், 2014

இந்தியாவில் 60 கோடிப் பேர் திறந்தவெளியில் மலம் மலம் கழிக்கிறார்கள் ! சாந்தா ஷீலா நாயர்

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பது தொடர்பான இந்திய கழிப்பறை மாநாட்டில் பேசுகிறார் மாநில நிதிக் குழுத் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர். உடன், குடிநீர் விநியோகம்- சுகாதாரக் கவுன்சில் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வினோத் மிஸ்ரா." சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பது தொடர்பான இந்திய கழிப்பறை மாநாட்டில் பேசுகிறார் மாநில நிதிக் குழுத் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர். உடன், குடிநீர் விநியோகம்- சுகாதாரக் கவுன்சில் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வினோத் மிஸ்ரா. இந்தியாவில் 60 கோடிப் பேர் இன்னமும் திறந்த வெளியில் மலம் கழிப்பது அவமானகரமானது என்று மாநில திட்டக் குழுத் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் கூறினார்.

உலக கழிப்பறை தினத்தையொட்டி, திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பது தொடர்பான இந்திய கழிப்பறை மாநாடு சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது:
மகாத்மா காந்தி கடந்த 1925-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரத்தைவிட சுகாதாரம்தான் முக்கியம் என்று பேசினார். ஆனால், சுகாதாரத்தில் நாம் முன்னேறுவதற்குப் பதில் பின்தங்கிவிட்டோம்.
நம்மைவிட பெரும்பாலான துறைகளில் பின்தங்கியுள்ள வங்கதேசத்தில், திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 3 சதவீதம்தான். பாகிஸ்தானில் இந்த எண்ணிக்கை 25 சதவீதம் பேர் மட்டுமே. ஆனால், இந்தியாவில் இன்னமும் 50 சதவீதம் பேர் திறந்தவெளியில்தான் மலம் கழிக்கின்றனர்.
தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் 70 முதல் 75 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதியில்லை. நகர்ப்புறங்களில் 25 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் இதில் சில முக்கியமான தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது, வீடுகளில் கழிப்பறை வசதி இருந்தும் 40 முதல் 45 சதவீதம் பேர் அதைப் பயன்படுத்துவதில்லை என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்தான்.
தங்களுடைய சொந்த செலவில் கழிப்பறை கட்டுவோரில் பெரும்பாலானோர் கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், தன்னார்வ அமைப்புகள், அரசின் மூலமாக கழிப்பறைகள் கட்டப்படும்போது பெரும்பாலானோர் அவற்றைப் பயன்படுத்துவதில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கழிப்பறைகள் கட்டுவது பெரிய சவாலாக இருக்கவில்லை. ஆனால், அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பதோடு, அனைவரையும் பயன்படுத்தச் செய்வதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
கிராமங்களில் நோய்க் கிருமிகள் இல்லாத சுற்றுப்புறத்தை உருவாக்குவதற்கு 100 சதவீத மக்களும் கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டும். கழிப்பறைகள் பராமரிப்பை எளிமைப்படுத்த பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும். வங்க தேசத்தில் ரூ.2,000-த்தில் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், இங்கு ரூ.10,000 வழங்கினாலும் கழிப்பறைகள் கட்ட போதவில்லை என புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
விண்வெளியில் எவ்வாறு கழிவுகள் அப்புறப்படுத்தப்படுகிறது என்ற முறையை ஆய்வு செய்து அதே முறையை இங்கும் செயல்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும் கழிப்பறை அமைப்புகள் தேவைப்படுகின்றன.
இதன் மூலம், கழிப்பறைகள் நீண்ட நாள்களுக்குப் பயன்படுபவையாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும் இருக்கும். இந்தத் துறையில் தன்னார்வ அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். இந்தியாவில் 50 சதவீத மக்கள் (60 கோடி) இன்னமும் திறந்தவெளியில் மலம் கழிப்பது அவமானகரமானது. இந்த நிலையை ஒழித்து அனைவருக்கும் கழிப்பறை வசதியை அளிக்க நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
குடிநீர் விநியோகம்- சுகாதாரக் கவுன்சில் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வினோத் மிஸ்ரா பேசும்போது, இந்தியாவில் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 1 சதவீதம் மட்டுமே அதிகரித்து வருகிறது. வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டுமானால் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்றார் அவர். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக